கட்டுரைகள்

பாகிஸ்தானில் ஆப்கான் அகதிகள் கட்டாய வெளியேற்றம் ! தமிழகத்தில் வஞ்சிக்கப்படும் ஈழத்தமிழ் அகதிகள் !! – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஆப்கான் அகதிகளை பாகிஸ்தானில் இருந்து கட்டாயமாக வெளியேற்றுவதை ஐநா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயினும் நீண்டகாலமாக தமிழகத்தில் வஞ்சிக்கப்படும் ஈழத்தமிழ் அகதிகள் துயரம் பற்றி எவருமே அக்கறைப்படுவதில்லை)

நீண்டஅகாலமாக வாழும் ஆப்கானிய அகதிகளை வெளியேற்றும் விடயத்தில் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பாகிஸ்தானிடம் தலிபான் கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை ஆப்கான்களை வெளியேற்றும் பாகிஸ்தான் முடிவிற்கு

ஐநா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1979 இல் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்ததில் இருந்து 1989 வரை அமெரிக்க உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வந்தது. அதன்பின் தலிபான் ஆட்சியின் கொடூரங்களை உலகறியும்.

பாகிஸ்தானில் ஆப்கான் அகதிகள் :

பல வருடங்கள் நடைபெற்ற இந்த போரின் விளைவாக பொருளாதாரம் சீர்குலைந்து அந்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்ததால், வாழ்வாதார காரணங்களுக்காக அங்கிருந்து பலர் வெளியேறி பாகிஸ்தானில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

அமெரிக்கா விலகிய பின்னர் கடந்த 2021இல் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து மேலும் பலர் அந்நாட்டிலிருந்து அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர். சமீப காலமாக பாகிஸ்தானின் பொருளாதார நிலையும் மிகப்பெரும் சரிவை கண்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு கடன் வழங்கும் உலக நிதி அமைப்புகள் அரசின் செலவினங்களை கட்டுப்படுத்தும்படி நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள அகதிகளான ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தங்கள் நாட்டிலிருந்து வெளியேற ஆப்கானியர்களுக்கு பாகிஸ்தான் விதித்திருந்த காலக்கெடு நவம்பர் முதல் நாளில் முடிவடைந்தது.

அகதியாக தமிழகம் வருகை

ஆப்கானிஸ்தானைப் போலவே இலங்கையிலும் போரின் தொடர்ச்சியாக உயிரைக் காத்துக் கொள்வதற்காக எந்த வித பாதுகாப்புமில்லாத சிறிய படகுகளில் 1983ம் ஆண்டு முதல் அகதியாக இந்தியா நோக்கி தமிழர்கள் வந்தனர்.

1983 ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலையின் பின்னர் பெருந்திரளான ஈழத்தமிழ் மக்களை அகதிகளாக தமிழகம் நோக்கித் தள்ளியது.

இனப் படுகொலையிலிருந்து தப்புவதற்காகத் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழ் அகதிகளின் துயரக் குரல்கள் மறக்க முடியாதவை. இலங்கையின் முள்வேலி முகாம்களின் அவலக் கதைகள் உலகத்துக்கு அம்பலமாகியிருக்கின்றன. ஆனால் தமிழகத்தின் அகதி முகாம்களின் ஈழத் தமிழ் மக்கள் படும் துயரம் யாருக்கும் தெரிவதில்லை.

முள்ளிவாய்க்காலுடன் ஈழத்தமிழ் அகதிகள் கொண்டிருந்த நம்பிக்கையும் முடிவுக்கு வந்து விட்டது என்றே கூறலாம். போர் முடிந்து விட்டதென்று இலங்கை ஆளும் அரசு அறிவித்தாலும், அதான் எல்லாம் முடிந்து விட்டதே, எப்போது கிளம்புகிறீர்கள்? என்று தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை அதிகாரிகளே கேட்பதாகச் சொல்கிறார்கள் தமிழகத்தின் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் மக்கள்.

தமிழகம் நோக்கிய அகதிகள் வருகை

தொடர்ச்சியாக 1983-1987, 1989-1991, 1996-2003, 2006-2010 ம் ஆண்டுகளிலும் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தனர். தமிழக மறுவாழ்வுத்துறை அலுவலகத்தின் கணக்கின் படி இக்காலப்பகுதியில் மொத்தமாக 3,03,076 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நோக்கி வந்துள்ளனர்.

சட்டவிரோத 17 இலட்சம் ஆப்கானியர்கள்:

எந்த ஆவணங்களும் இல்லாமல் பாகிஸ்தானில் தங்கியுள்ளவர்கள் முதற்கட்டமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும், அகதிகளுக்கான அட்டை வைத்துள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால், அகதி அட்டை வைத்துள்ளவர்களும் குறி வைக்கப்படுவதாக பல அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக 17 இலட்சம் ஆப்கானியர்கள் தங்கியிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கானியர்கள் அனைவரும் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு இடப்பட்டது.

இல்லையெனில் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. கடந்த மாத தொடக்கத்தில் வெளியான இந்த அறிவிப் புக்கு பிறகு 1 இலட்சத்து 30 ஆயிரம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் கெடு முடிவுக்கு வருவதால் தடுப்புக் காவலில் வைக்கப்படலாம் அல்லது தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் எல்லைச்சாவடிகளில் அணிவகுத்து நிற்கின்றனர்.

இந்நிலையில் தலிபான் அரசு வெளியிட்ட அறிக்கையில், உள்நாட்டு போர் காலத்தில் லட்சக்கணக்கான ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு நன்றி. பாகிஸ்தானை விட்டு வெளியேற யாரையும் கட்டா யப்படுத்த கூடாது. ஆப்கானியர்களுக்கு கூடுதல் அவகாசம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

முள்ளிவாய்க்காலுடன் அமைதி நிலை திரும்பியதா ?

நீண்டகாலமாக தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் துயரம் பற்றி எவருமே அக்கறைப்படுவதில்லை என்பது கவலைக்குரியதே. ஆயினும் ஆப்கான் அகதிகளை பாகிஸ்தானில் இருந்து கட்டாயமாக வெளியேற்றுவதை ஐநா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமக்கெதிரான இனப்படுகொலைக் குற்றங்களுக்கு ஈழத்தமிழ் மக்கள் இன்னமும் நீதி பெறவில்லை. தமிழர் பகுதிகள் தொடர்ந்தும் இராணுவ மயமாக்கப்படுகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் திணிக்கப்படுகின்றன.

ஆயினும் முள்ளிவாய்க்காலுடன் “அமைதி நிலை” திரும்பிவிட்டது என்பது இலங்கை அரசின் கூற்று மட்டுமல்ல, ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் நிலையும் அதுதான்.

தாக்குதல்களும் ஆட்கடத்தல்களும் தொடர்கின்றன என்பன போன்ற உண்மைகளை மறுக்கவியலாத போதிலும், போர் முடிந்து அமைதி திரும்பி விட்டது என்பதே ஐ.நா. வின் நிலை. வக்கிரமான இந்த நியாயத்தின் அடிப்படையில்தான் அகதிகளாக தஞ்சம் கோரிச் செல்லும் ஈழத்தமிழ் மக்களை ஐரோப்பா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் திருப்பி அனுப்புகின்றன.

எந்த நேரத்திலும் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் அவர்களிடம் குடிகொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் எல்லோருக்கும் தாய்நாட்டிற்குத் திரும்பத்தான் விருப்பம். ஆனால், வீடு இருக்கிறதா, காணி இருக்கிறதா, வாழ முடியுமா என்று நேரில் சென்று பார்த்து விட்டுப் பிறகு முடிவு செயலாம் என்பதைக்கூட அரசு அனுமதிப்பதில்லை. போனால் போனதுதான். அங்கே வாழமுடியாது என்று முடிவு செய்து திரும்பி வந்தால், இங்கே அகதி முகாமிற்குள் மறுபடியும் நுழைய முடியாது.

ஆப்கன்களை வெளியேற்றும் முடிவு?

ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக தங்கள் சொந்த நாட்டில் அடிக்கடி மோதல்களை எதிர்கொண்டுவருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிகள் பலர் பாகிஸ்தானில் குடிபெயர்ந்து வந்தனர்.

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் அகதிகள் அதிகளவில் உள்ளனர். இவர்களால் பாகிஸ்தான் குடிமக்கள் சிக்கல்களை சந்தித்துவருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை, உரிமைக் குழுக்கள் மற்றும் மேற்கத்திய தூதரகங்களின் முறையீடுகள் இருந்தபோதிலும், அவர்களை நாடு கடத்துவதற்கான தனது முடிவில் தற்போது பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது.

தலிபான் ஆட்சியின் கீழ் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம், பேரழிவு தரும் பூகம்பங்கள், உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவை பெரும்பாலான மக்கள் வெளியேற காரணம் ஆகும்.

மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி அல்லது வேலை அனுமதிக்கப்படவில்லை.

புலம்பெயர்ந்தவர்களில் பலர் 1970களில் சோவியத் போரின் போது ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினர். மேலும், ஆவணங்களை வழங்குவதற்கான நீண்ட செயல்முறை காரணமாக பலரால் ஆவணங்களைப் பாதுகாக்க முடியவில்லை.

ஆப்கானியர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதல்கள்:

பாகிஸ்தான் தனது சொந்த பொருளாதார விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆப்கானியர்களை வெளியேற்றுகிறது என்று கூறுகிறது. முக்கியமாக, ஆப்கானிஸ்தான் குடியேறியவர்கள் பயங்கரவாத தாக்குதல்கள், தெருக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு நடந்த 24 தற்கொலை குண்டுவெடிப்புகளில் 14 தாக்குதல்கள் ஆப்கானியர்கள் நடத்தியது ஆகும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பொருளாதார அவல நிலை:

பாகிஸ்தானின் பொருளாதாரத்தின் அவல நிலையும், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல்களும் பெரும் பிரச்னையாக உள்ளன. மற்றொரு முக்கியமான காரணி என்னவென்றால், பாகிஸ்தான் தற்போது ஒரு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் உள்ளது.

இதனால், இந்த இடைக்கால அரசாங்கம், வெளியேற்றங்களின் சாத்தியமான அரசியல் அல்லது தேர்தல் வீழ்ச்சியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாடு கடத்தும் உத்தரவு பாகிஸ்தானில் பலத்த விமர்சனங்களை சந்தித்துள்ளது.

தலிபான் கொடூர ஆட்சி:

தலிபான்கள் நாடு கடத்தப்படுவதை கடுமையாக விமர்சித்துள்ளனர்.இருப்பினும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அதன் மேல் குளிர்காலம் நெருங்கி வருவதால், ஏற்கனவே மிகவும் பலவீனமான சூழ்நிலையில் உள்ள ஒரு நாட்டிற்கு மக்கள் திரும்பிச் செல்வதற்கு இது சிறந்த பருவம் அல்ல என்று பிலிப்பா கேண்ட்லர் UNHCR பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முடிவிற்கு ஐநா எதிர்ப்பு:

10 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் நவம்பர் 1க்குள் வெளியேற வேண்டும் என்றும் இது அரசாங்கத்தின் எந்த ஒரு அழுத்தமும் இன்றி தன்னார்வத்துடன் அவர்களாக  மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது

பாகிஸ்தான் அரசின் இந்த உத்தரவிற்கு ஐநா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மேலும்40 ஆண்டுகளாக அகதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வந்த பாகிஸ்தான் அரசு, அகதிகளை வெளியேற்றாமல் இருக்க புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.  பாதிக்கப்பட்டு அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களிடம் போதுமான ஆவணங்கள் ஏதும் முறையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தலிபான் அரசு கூறியுள்ளது.

மேலும் அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐநா அகதிகள் அமைப்பு ஆதரவு அளிக்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் கராச்சி நகரில் மட்டும் 700 ஆப்கானியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.தவிர நாட்டின் பல நகரங்க ளில் பலநூறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வெளியேற்றப்படும் ஆப்கானியர்களில் பெரும்பாலானோர் கூலிப்பணிகளில் ஈடுபட்டு வறுமையில் வாழ்ந்து வந்ததால், அவர்களிடம் சேமிப்புகளோ, வேறு பொருட்களோ இல்லாமல் கேள்விக்குறியாகும் எதிர்காலத்துடன் டிரக்குகளில் அடைக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் எல்லையில் கொண்டு விடப்படுகின்றனர். அவர்களின் கண்ணீர் கதைகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

பெண்களுக்கு கடுமையான கோட்பாடுகளை வலியுறுத்தும் தலிபான் ஆட்சி நடைபெறுவதால் அங்கு செல்ல அஞ்சும் மக்கள், பாகிஸ்தானில் வசிக்க இயலாமல் செய்வதறியாது தவிக்கின்றனர்.

பாகிஸ்தான் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐநா கோரிக்கை வைத்தது. ஆனால், 40 ஆண்டு காலம் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்கு இடம் கொடுத்து விட்டதாகவும், இனியும் அதை தொடர முடியாது எனவும் பாகிஸ்தான் திட்டவட்டமாக பதிலளித்து உள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.