கட்டுரைகள்

சவூதியில் அவசர அரபு லீக் மாநாடு : இஸ்ரேல் போரை நிறுத்த வழிகோலுமா ? – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சனியன்று (11/11/23) முடிவுற்ற அரபு லீக் மாநாட்டில் வெளியிடப்பட்ட இறுதிப் பிரகடனத்தில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நிறுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்க்கமான மற்றும் கட்டுப்பாடான தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது)

அரபு லீக் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்காமல், இறுதி அறிக்கையின் மீது ஒரு பொது உடன்பாட்டை எட்டத் தவறினர். இதற்கு முக்கிய காரணம் அரபு நாடுகளின் பிராந்திய விரிசல்களும், அமெரிக்க சார்பு நிலைப்பாடே ஆகும்.

அரபு லீக் இறுதிப் பிரகடனம்:

ஆயினும் ஒன்றிணைந்த முடிவுகள் சில எடுக்கப்பட்டதாக அரபு இராஜதந்திரிகள் தெரிவித்தனர். அவற்றுள் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை மற்ற நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில், பல நாடுகள் இஸ்ரேலுக்கும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் கோரினர்,

சில அரபு லீக் நாடுகள் இஸ்ரேலுடன் கொண்டுள்ள பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதன் மூலம் போருக்கு பதிலடி கொடுக்கும் முயற்சி வெற்றி அளிக்கும் எனவும், அரபு நாடுகளில் உள்ள தளங்களில் இருந்து இஸ்ரேலுக்கு அமெரிக்க உபகரணங்களை மாற்றுவதை தடுக்க மிகவும் கடுமையாக இருக்க இந்த மாநாட்டு தீர்மானம் அழைப்பு விடுத்திருக்கிறது.

 

அதேவேளை இஸ்ரேலுடனான அனைத்து இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளையும் முடக்கவும், 1972 போல எண்ணெய் தடையை இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்கவும் இந்த மாநாட்டில் தீர்மானம் விடுத்திருக்கிறது.

அரபு நாடுகளின் வான்வெளியைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குச் செல்லும் விமானங்களைத் தடுத்து, போர்நிறுத்தத்திற்கு மேற்கத்திய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்து உள்ளது. அத்துடன் இஸ்ரேல் அணு ஆயுதக் களஞ்சியத்தை பராமரித்து வருவதாக வெளிநாட்டு மதிப்பீடுகள் கூறுகின்றன. ஆனால் இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை முறையாக ஒப்புக் கொள்ளவில்லை, அதற்கு பதிலாக “அணு தெளிவின்மை” கொள்கையைப் பேணுகிறது என கூறுகிறது.

பாலஸ்தீன போரில் இஸ்ரேல் அதன் குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இஸ்ரேலின் கைகளில் உள்ள அணு ஆயுதங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அரபு லீக் வலியுறுத்து உள்ளது.

ஈரான் – சவூதி நட்புறவு;

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, மார்ச் மாதம் இரு நாடுகளும் உறவுகளை சீர்படுத்திய பின்னர் சவுதி அரேபியாவிற்கு தனது முதல் பயணத்தை அரபு லீக் மாநாட்டுக்காக வந்தார்.

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் அதன் நடத்தைக்காக இஸ்லாமிய நாடுகள் “பயங்கரவாத அமைப்பாக” இஸ்ரேலை அறிவிக்க வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கோரினார். இந்த மோதலுக்கு ஒரே தீர்வு பாலஸ்தீனிய அரசு “நதியில் இருந்து கடல் வரை” – அதாவது இஸ்ரேல் அரசை அகற்றுவது என்று ஈரானிய ஜனாதிபதி ரைசி உச்சிமாநாட்டில் கடுந்தொனியில் கூறினார்.

பாலஸ்தீனப் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தீர்க்கமான முடிவை எடுக்க விரும்புகிறோம். பொதுமக்களைக் கொல்வதும், மருத்துவமனைகள் மீது குண்டு வீசுவதும் காசாவில் இஸ்ரேலிய குற்றங்களின் வெளிப்பாடுகள். இன்று, ஒவ்வொருவரும் தாங்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும், என்று ஈரானிய ஜனாதிபதி வேண்டினார்.

அத்துடன் பாலஸ்தீனியர்களுக்கு ஆயுத உதவி வழங்கவும் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலுக்கு பொருளாதார தடை:

இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆற்றல் புறக்கணிப்பும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஹேக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டும் என அரபு லீக் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இஸ்ரேலின் அணுசக்தி வளர்ச்சிக்கு எதிராகவும் அல்ஜீரியா மற்றும் லெபனான் உட்பட சில நாடுகள் வலியுறுத்தின. இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தவும் கோரினர். சில அரபு லீக் நாடுகள் இஸ்ரேலுடன் கொண்டுள்ள பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதன் மூலம் காசாவில் ஏற்பட்ட பேரழிவிற்கு பதிலடி கொடுக்க முன்மொழியப்பட்டது.

சவூதி தலைமையில் அரபு லீக் மாநாடு:

காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றி கலந்துரையாடும் நோக்கோடு அரபு நாட்டுத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் அவசர அமர்வொன்று நவம்பர் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அரபு லீக்கின் இந்த 32வது அமர்வு சவூதி அரேபியாவின் தலைமையிலேயே நடைபெற்றது.

சவூதி அரேபியா வாஷிங்டனுடனான நெருக்கமான உறவுகளை பேணுவதால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சவூதி அரேபியா தெரிவித்தது.

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அகதிகள் முகாம், மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி பல ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், முதியோர்களை கொன்று குவித்து வருகிறது.

பாலஸ்தீன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என அரபு நாடுகள் உட்பட பல நாடுகள், ஐநா அமைப்பு, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இஸ்ரேல் அதை காதில் வாங்காமல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் போர் தொடர்பாக அரபு லீக் அவசர மாநாடு சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரபு லீக் உச்சி மாநாடு முன்பு நடைபெற்றது.

கெய்ரோ மாநாட்டின் பின் மீண்டும் !

கெய்ரோ மாநாடு நடைபெற்றதை தொடர்ந்து 20 நாட்களுக்குப் பிறகு அரபு லீக் நாடுகள் மீண்டும் ஒன்றிணைவது குறிப்பிடத்தக்க விடயமாகும். மீண்டும் அரபு லீக் நாடுகள் இந்த அவசர கூட்டத்தில் கூட்டி இருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

கெய்ரோவில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நிலவரம் பரபரப்பான விவாதமாக இருந்தது. ஈராக், சைப்ரஸ், ஜோர்டான், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் பங்கேற்றன. காசா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றி கலந்துரையாடும் நோக்கோடு ஜேர்மனி மற்றும் ஜப்பானின் பிரதிநிதிகளுடன் ஐ.நா பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பாலஸ்தீனியர்களின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

சவூதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான தனது உரையாடலில், பாலஸ்தீன மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் மற்றும் அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் வகையிலும் இராஜதந்திர முயற்சிகள் தொடர கோரியதாக இந்த மாநாட்டில் தெரிவித்தார்.

சவூதி இராஜதந்திர முயற்சிகள்:

போரை நிறுத்த பல வழிகளில் சவூதி முயற்சிகளை மேற் கொண்டுள்ளதாகவும், முன்னரே மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகள் தொடர்பிலேயே தொடர்ந்தும் கரிசனையோடு இருப்பதாகவும் சவூதி அறிவித்தது.

சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான், உடனடி போர் நிறுத்தத்தை கோருவதற்காக திங்கட்கிழமையன்று அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அதிகாரிகளே பொறுப்பு. ஆக்கிரமிப்பு, முற்றுகை மற்றும் குடியேற்றங்களை முடிவுக்குக் கொண்டுவருவதே இப்பிராந்தியத்தில் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க ஒரே வழி என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனக் கூறினார்.

காசா பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மனிதாபிமான உதவிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாலஸ்தீன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான ராஜாங்க முயற்சிகளை சவூதி அரேபியா தொடர்ந்து மேற்கொண்டு உள்ளதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சவூதி அரேபியா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியிருக்கும் இப்போருக்கான ஒரு முடிவைப் பெறும் முயற்சியாக இம்மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் அரபு லீக் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்காமல், இறுதி அறிக்கையின் மீது ஒரு பொது உடன்பாட்டை எட்டத் தவறினர். இதற்கு முக்கிய காரணம் அரபு நாடுகளின் பிராந்திய விரிசல்களும், ஒற்றுமையின்மையும் முக்கிய காரணமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.