“சாவித்திரியின் கணவன்” ….. சிறுகதை ….. சோலச்சி.
”வரவர… நம்ம ஊர் திருவு…ழா கலக்கட்டுதுல்ல. ஆனா…. என்ன வருசத்துக்கு ஒரு பிரச்சனைய கெளப்பிருறானுக. போன வருசம் திருவுழா நேரத்துல ஓடிப்போன சங்கரு மயன் செலுவமும் முக்கத்து வீட்டுக்காரி மவ சரணியாவும் எங்க இருக்காங்கனே தெரியல. இதுகள மாதிரி ஆளுகளப் பாத்துதான் அத்தன சாதிசனத்து புள்ளைகளும் கெட்டுப்போகுது. இழுத்துக்கிட்டு ஓடுறதே பொழப்பா வச்சுருக்காளுக. ஏம்புள்ளைக ஏதும் அப்புடி நடக்குறதா கண்ணு காதுல பட்டுச்சு, நாலாம்பேருக்கு தெரியாம தூக்குல தொங்க விட்ருவேன்…” சொல்லிக்கொண்டே பொதுக்குழாயில் தண்ணீரைப் பிடித்தாள் அரியநாச்சி.
அரியநாச்சி கடவுள் நம்பிக்கை உடையவள். சாஸ்திரம் சம்பிரதாயங்களை பின்பற்றுபவள். வீட்டுக்கு முன்னால் சுவர் இல்லாமல் இருக்கும் கீற்று கொட்டகையில்தான் தெரிந்தவர் தெரியாதவர்கள் என்று யார் வந்தாலும் உபசரிப்பாள். அதில் நான்கைந்து நாற்காலிகள் எப்போதும் கிடக்கும். ஊரிலேயே பெரிய குடும்பங்களில் இவள் குடும்பமும் ஒன்று.
“நம்ம திருவுழாவுல மத்த சாதிக்காரனுகள கோயிலு உள்ளுக்குள்ள வேடிக்கைப் பாக்க விட்டதுதான் தப்பா போச்சு. மதம் ஒன்னா இருந்தாலும் சாதிசனம் வேறதானே. நம்மாளுவள சொல்லனும். ஓட்டுக்காக நல்லாவே நடிக்க கத்துக்கிட்டானுக. போறப்போக்கப் பாத்தா அட்டயத் தூக்கி மெத்தயில படுக்க வச்சுருவானுகளோனு பயமா இருக்கு…” சித்ராதேவி தன் பங்குக்கு சொல்லிக்கொண்டே குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு நடைபோட்டாள். மைக்செட் சத்தம் காதை கிழித்துக் கொண்டு இருந்தது.
“நா… போன வருசமே மைக்செட்கார ஆளுக்கிட்ட தண்ணி புடிக்கிற எடத்துல குழாய கட்டாதீகனு சொன்னேன். புளியமரம் நல்லா வாகா வளந்துருக்குதுனு லவக்குனு ஏறி கட்டிப் புடுறாக. தண்ணி தளவு புடிக்க முடியுதா… அலுத்துக்கொண்டாள் அரியநாச்சி.
“ம்….இதுல வேற மூத்தவ பேரன மட்டும் தூக்கிகிட்டு வந்துருக்கு. ஊரு ஒலகத்துலயே என்னம்மோ பொல்லாத வேலய இவுகதான் அதிசயத்துக்கு பாக்குறதா நெனச்சுக்கிட்டு அவ புருசன் நாளக்கி வர்றேனுட்டானாம். எல்லாம் இன்னக்கி முடிஞ்சப்புறம் நாளக்கி வந்து என்னத்தக கிழிக்கப் போறாகனு தெரியல. நாளும் கெழமையுமா இருக்கயில வூட்டுல மருமயன் இல்லனா நல்லாவா இருக்கும்… ம்….எனக்குப் புடுச்ச சனியன் ஏம் மவளுக்கும் வெலகல…” மேலும் தொடர்ந்தாள் அரியநாச்சி.
“ம்க்கூம்…. நல்ல கதயா இருக்கு. காரியம் இல்லாமலா எலி அம்மனமா ஓடும். ஓம் மருமயனாச்சும் வெவரமா நாலுக்காசு சம்பாதிக்க போயிருக்காப்புல… நா… பொத்தி பொத்தி வளத்த ஒத்த மகள வகமடுப்பா போயி ஒரு வரளிப்பயலுக்கு கட்டிக்கொடுத்து நாலுநாளக்கி முன்னாடியே வந்து கஞ்சிக்கு செத்து கெடக்குறான். ஆனா வெள்ள வேட்டி சட்டைக்கி மட்டும் கொறச்சலில்ல…” சித்ராதேவி சொல்லிக் கொண்டு இருக்கும்போது ஐஸ்…ஐஸ்…. என்று சைக்கிளில் ஐஸ் பெட்டியை வைத்து தள்ளிக்கொண்டு ஒருவர் சென்றுகொண்டிருந்தார்.
“இந்த ஆளுக்கு இருக்க குசும்பப் பாத்தியா. அங்கெல்லாம் அம்புட்டு எடம் இருக்குது. இங்க வந்துதான் அத புடிச்சு நல்லா அமுக்கி கத்தறாரு. போயா அங்கிட்டு. இன்னும் எளவட்டமுனு நெனப்போ. எங்கோட்டு புள்ளையளுக்கெல்லாம் மூக்கால ஊத்திக்கிட்டு கெடக்குதுக. திருவிழா தேதினு வந்தா. ஒங்களுக்குத்தான் கொண்டாட்டமா இருக்கு…ம்க்….” முகத்தைச் சிலுப்பினாள் சித்ராதேவி.
”ஏத்தா.. செவனேனு… ஏம்பொழப்பதானே பாக்குறேன். புள்ளைகளுக்கு ஒழுகுச்சுனா நீங்க ஒன்ன வாங்கி சப்ப வேண்டியதுதானே. அதவுட்டுப்புட்டு என்னமோ கதையா ஏங்கிட்ட மொறச்சுக்குறீங்க. ம்….ஓடியா…ஓடியா…. பாலைஸ்… பெப்சி… கோண்… கப்பைஸ்…. ரஸ்னா… புருட்மிச்சரு… ” கத்திக்கொண்டே நகர்ந்தார் ஐஸ்காரர்.
“என்னடி… இத சொன்னதுக்கு ஐஸ் இப்புடி சூடாகுது….” அரியநாச்சி சொல்ல இருவரும் அக்கம்பக்கத்தில் இருக்கும் அவரவர் வீட்டுக்குள் சென்றனர்.
போன வருசம்வாக்குல அரியநாச்சியின் ஆடு ஒன்னு சித்ராதேவி வீட்டு வேலியில் போட்டிருந்த அவரைக் கொடியை மேய்ந்துகொண்டு இருக்கும்போது கையில் வைத்திருந்த சீவு வெலக்கமாறால் ஓங்கி அடித்துவிட்டாள். அதைப் பார்த்த
அரியநாச்சி “வாயில்லா சீவன வெலக்கமாறால அடிக்கிறீயே. நீயெல்லாம் வெளங்குவியா… பொம்பளக்கினு ஒரு அடக்கம்ஒடுக்கம் வேணும். டான்சுகாரி மாரி நாட்டியங்கட்டி ஆடுற…” என்றதும் சண்டை முற்றி குடுமிபுடி வரை சென்று விட்டது.
“யாரப்பாத்துடி டான்சுக்காரினு சொல்ற. ஒரு ஆட்டயே ஒழுங்கா வளக்கத் தெரியல. வெள்ளாடு வேலி தாண்டுற மாறிதான்டி நீயும் திரிஞ்சுருப்ப….. ஓம்புட்டு லெச்சனத்த ஊருஒலகமே காரித்துப்புதுடி….” வாய்ச்சண்டை கை நீட்டும் அளவுக்கு மாறியது.
ரெண்டு குடும்பமும் காவல்நிலையம் வரை சென்று வந்தார்கள். கிராமத்துச் சண்டையும் மண்ணுல கிழிச்சக் கோடும் தண்ணில எழுதுன கணக்கா கொஞ்சம் நேரம்தான் என்பது போல சிலமாதங்கள் கழித்து பேசிக்கொண்டார்கள்.
ஊரில் யார்வீட்டில் என்ன நடந்தாலும் இவர்கள் காதுக்கு எட்டிவிடும். ஊருல ஆல் இண்டியோ ரேடியோ என்றுதான் இவர்களை அழைப்பார்கள். வீட்டில் குடிநீர் இணைப்பு இருந்தாலும் அடிகுழாயில் தண்ணீர் பிடிக்க வரும் நேரத்தில்தானே ஊர்கதை பேச முடியும். ஒருநாளைக்கு நாலஞ்சுதடவ அடிகுழாய்க்கு இருவரும் வந்துவிடுவார்கள்.
“என்ன….! ஆல் இண்டியோ ரேடியோவுக்கு ஏதும் சேதி வரலயோ….” என்று காயத்திரி விளையாட்டாக கேட்டதுதான் தாமதம். ” ஓம்புட்டு லெச்சணம்தான் ஊருக்கே தெரியுமே. இதுல எங்களுக்கு வேற பேரு வக்கிறிகளோ. ஒன்னயமாறியா நாலெழுத்து படிச்சுருக்கோம்னு பேக்க மாட்டிக்கிட்டு ஜிங்குஜிங்குனு ஊரெல்லாம் திரியுறோம். பொம்பளனா நாலெடத்துக்கு போனாலும் நறுக்குனு போயிட்டு வந்தர்னும். கெவுர்மெண்ட் வேலனா அப்புடித்தான் திரிவாங்களோ….” அரியநாச்சியிடமிருந்து காயத்திரியால் மீள முடியவில்லை.
“நமக்கு ஏன்டா… இவளுககூட ஒரண்டை. இவளுக எந்த நேரத்துல எப்புடி இருப்பாளுகளோ யாருக்குத் தெரியும். வாயக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கிட்டா நம்ம மானம்தான் காத்துல பறக்கும்…. வழியக்கவந்து பேசுவாகள்ள அப்ப வச்சுக்குவோம்.” தலையைச் சொறிந்துகொண்டே நகர்ந்து போனாள் காயத்திரி.
எல்லோர் வீட்டுக்கும் விருந்தினர்கள் வந்துகொண்டே இருந்தனர். சாமி ஊர்வலம் வரும் அனைத்து தெருக்களிலும் தென்னை ஓலை தோரணங்களும் மாவிலை தோரணங்களும் வைக்கோல் பிரியால் கட்டி அழகுபடுத்தி இருந்தனர். அவரவர் வீட்டு வாசலில்
தண்ணீரைத் தெளித்து அரிசி மாவில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தனர். கோலம் போடும்போதே எறும்புகள் படையெடுத்து வந்து அரிசி மாவினை இழுத்துச் சென்றன.
இளம்பெண்கள் சிலர் சித்தாம்பலம் ஊரணியிலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தனர்.
“’மொதல்ல இந்தச் சித்தாம்பல ஊரணில இருக்க தாமரைய அழிக்கனும்யா. என்னத்தப் பண்ணுனாலும் முண்டிக்கிட்டு நானும் இருக்கேனு எங்கிட்டாவது ஒருபக்கம் மொளச்சுக்கிட்டு நிக்கிது. தாமரை வளந்தா நமக்குத்தாய்யா கேடு. அத எப்புடியாச்சும் ஒட்ட அழிச்சுறனும். இல்லன நெறயபேர எழக்க வேண்டியதுதான்….” மாணிக்கம் சொன்னபோது…
“அட… ஊருக்கு நாலு காவாளிப் பயலுக இருக்க மாறி நம்ம ஊர்லயும் ரெண்டு மூனு தருதலைங்க இருந்துக்கிட்டு அத வளத்தே தீருவோமுனு கொழுப்பெடுத்து அலையுறானுக. அதுல வெவரம் தெரியாம சிக்கி இன்னும் எத்தன பேரு சாகப் போறானுகளோ தெரியல. அந்தக் குடிகாரப்பயதான் எங்கிட்டோ கெடந்தத கொண்டாந்து இங்கவந்து போட்டுட்டான். முட்டாப்பயலுகளா இருக்கானுகளே.” முத்தையா சொல்லிக்கொண்டு இருக்கும்போது சிலர் அவரை முறைத்துப் பார்த்தனர்.
அதப்புடுங்கி தூரமா எறிங்கடானா… வெறிக்கவெறிக்க மொறச்சுப் பாக்குறானுக. இவனுகெல்லாம் எப்பத் திருந்தப் போறானுகளோ தெரியல… சொல்லிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு கிளம்பினார் முத்தையா.
பக்கத்து ஊரான தண்டியூரில் நடந்த ஒரு கட்சியின் பேரணியில் கலவரம் மூண்டபோது அந்தக் கட்சிக்காரர்கள் சிலர் பிரியாணி கடைக்குள் புகுந்து பிரியாணி அண்டாவை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார்கள். ”மத்த மதத்துக் காரனுகளுக்கு இந்த ஊர்ல என்னலே வேலை. இங்க நம்ம மதத்துக்காரங்கதான் இருக்கனும். நம்ம கட்சிக் கொடிதான் தெருவுல ஒய்யாரமா பறக்கனும்” பேரணி ஒருங்கிணைப்பாளரும் ஒன்றிய தலைவருமான கிச்சையா ஒலிவாங்கியில் கத்திக் கொண்டிருந்தார். இவனுக வாயத்தொறந்தாலே சண்டை சச்சரவுனு ஏதாவது வந்து தொலஞ்சிரும்னு பலரும் கடைகளை இழுத்து மூடிவிட்டு கிளம்பினர்.
“இவனுக மட்டும் எப்படித்தான் பிரியாணி கிண்டுறானுகனு தெரியல. நாமளும் மாங்குமாங்குனு கிண்டுனாலும் பூண்டு வாசம்கூட
பொசுக்குனு வரமாட்டேங்கிது. ஆனா இவனுக. கிண்டுனா வாசம் ஆளையே தூக்குது மாப்ள. ஒரு கட்டு கட்ட வேண்டியதுதான்…” கடைக்குள் புகுந்து பிரியாணி அண்டாவை தூக்கிச் சென்றவர்கள் பக்கத்து முந்திரிக்காட்டில் வைத்து ருசித்துக் கொண்டிருந்தனர்.
தண்டியூரில் நடந்த கலவரம் தற்போதுதான் முடிவுக்கு வந்திருந்தது. அதனால் அந்தக் கலவரம் போல் வேறெங்கும் வந்து விடக் கூடாது என்பதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேரணிக்கோ பொதுக்கூட்டத்துக்கோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கோயில் திருவிழாக்களிலும் அதேமாதிரியான கட்டுப்பாடுகளையே காவக்துறையினர் பின்பற்றினர். நாற்பது ஐம்பது காவலர்கள் முறையூர் கிராமத்தின் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டனர்.
“சண்ட சல்லுக்கு யாரும் போகாம பாத்துக்கனும். ஒன்னுரெண்டு பயலுகதான் நெஞ்ச வெடச்சுக்கிட்டுத் திரியுறானுக. அவனுகள கண்டிச்சு வச்சா சரியா இருக்கும். பொட்டப்புள்ளைகளுக்கிட்டயும் கொஞ்சம் சூதானமா பொழங்கச் சொல்லனும். ஒருவருசமும் இல்லாம இந்த வருசம் போலீஸ்க பாதுகாப்பு கெடுபுடியா இருக்கு.” முத்தையா புலம்பிக்கொண்டார்.
சென்ற ஆண்டை விட இந்தாண்டு பூக்கடைகள் அதிகமாகவே வந்திருந்தன. எப்போதுமில்லாமல் இந்தாண்டு இளம்பெண்கள் பலரும் தாவணியில் தங்களை அழகுபடுத்தியிருந்தனர். தொங்க விட்ட கூந்தலில் கொத்துக்கொத்தாக மல்லிகையும் கனகாம்பரமும் தூரியாடின. சிலரின் கூந்தலில் ஒற்றை ரோஜாக்களும் அலங்கரித்திருந்தன. அந்தத் தூரியில் அமர்ந்து தேன் பருக இளம்வண்டுகளும் ஆங்காங்கே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
“அய்ய்யே…. இவளுக என்ன இந்த மினுக்கு மினுக்குறாளுக. இதெல்லாம் எங்கப் போயி எப்புடி முடியப் போகுதோ…? ஊருநாட்டப்பத்தி சேதி தெரிஞ்சும் ஆயி அப்பனுக அவித்து விட்டுட்டானுகளே. ஆம்பளப் பயலுக சும்மா இருந்தாலும் இவளுகதான் அவனுகள உசுப்பேத்தி விடுறாளுக. அப்புறம் அவனுக ஏதாவது பண்ணிட்டா குத்துது கொடையுதுனு சிங்கிளியாட்டம் ஆடுறது. பொம்பளப் புள்ளைகளுக்கு அடக்கம் ஒடுக்கம் வேணாமா. மறைக்க வேண்டியத மறச்சுக்கிட்டு வெளிச்சத்துல திரிங்கடி….” கிழவி ஒருத்தி சொல்லிக்கொண்டே குச்சியை தரையில் நங்குநங்கென்று ஊன்றியபடி சென்று கொண்டு இருந்தாள். கிழவியின் பேச்சுக்கு சிலர் புன்னகையை மட்டுமே பூக்கச் செய்திருந்தனர்.
“வயசுப் புள்ளயா…. இருக்கும்போது இந்தக் கெழவியெல்லாம் என்ன ஆட்டம் ஆடிருக்கும். எத்தன கெழவனுகள லோலோனு அலையவிட்டிருக்கும். வயசானக்க புத்திமதிங்கிற பேருல வசனம் பேச ஆரம்பிச்சுருதுக…” ஒருத்தி சொன்னபோது “அட…. அப்பெல்லாம் எங்க வயசுக்கு வர விட்டாங்க. எங்க கெழவி எங்க தாத்தாவ கட்டிக்கிட்டு ஏழுவருசத்துக்கு அப்புறம்தான் வயசுக்கே வந்துச்சாம்…” இன்னொருத்தி சொல்ல அவர்களின் அரட்டை அரங்கம் ஆரம்பமாகியிருந்தது.
இளைஞர்கள் சிலர் வண்ணப்பொடிகளை தங்களது முகத்தில் பூசிக் கொண்டு கூட்டத்தினரை ஈர்த்துக் கொண்டிருந்தனர். “என்னப் பங்காளி….. ரெண்டு குத்துப்பாட்ட போட்டா சும்மா சிவ்வுனு இருக்கும்ல….” ஒருவன் சொல்ல “ஒங்களுக்கெல்லாம் சாமியோட மகிம தெரியலப்பா. எள ரத்தம்ல….அதான்… பேச்சுல கண்ணுமூக்குத் தெரியல…” பெரியவர் ஒருவர் குறுக்கிட்டார்.
மக்கள் குடும்பம் குடும்பமாக கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். சிறுவர்கள் சிலர் பலூனை ஊதி விளையாடிக் கொண்டு வந்தனர். அப்போது எதிரே ஒருவர் டீவிஎஸ் எக்சலில் பாய் விற்றுக்கொண்டு வந்தார்.
“எம்மா எல்லாரும் கோயிலுக்கு போறீகளே. அங்க போயி எத விரிச்சு ஒக்காருவீக. வெறுந்தரையிலயா உக்காருவீக. கண்ட பயலுகல்லாம் கண்டத போட்டு மென்னு கண்டமேனிக்கி துப்பிடுவானுக. அது உக்காந்தா இம்பூட்டு வெல கொடுத்து உடுத்துன புதுத்துணி என்னாத்துக்கு ஆகும். நம்ம பாய வாங்கிட்டு போயி விரிச்சு ஒக்காரலாம்ல. புதுப் பாயி புதுத் துணிக்கு சும்மா ஜம்மனு இருக்கும்ல. எளசுப் புள்ளைக ஏம்புட்டுப் பாயில உக்காந்தா மறுமாசமே கல்லாணம் முடிஞ்சுரும். ஆங்ம்…அம்புட்டு ராசியான பாயி…” நடிகவேள் எம்.ஆர். ராதா மாதிரி பேசியதைக் கேட்டு “அதானே பாத்தேன். எல்லாக் கடகாரகளும் வந்துட்டாக நம்ம எம்.ஆர்.ராதாவ காணோமேனு நெனச்சேன். போன வருசம் வாங்குன நாலு பாயி நல்லாதான் இருக்கு. அந்த புங்கமரத்து வீட்டுக்காரிதான் பாயி வாங்கனும்னு சொல்லிட்டு இருந்தா. அங்க போயி மீதி வசனத்த பேசுங்க…” சொல்லிக்கொண்டே நகர்ந்தாள் பிரபா.
“இந்தக் காலத்து பொம்பளைங்க கிட்ட உஷாரா இருக்கனும். மெனக்கெட்டு இம்புட்டு வசனம் பேசியும் பொசுக்குனு அங்கிட்டு போனுட்டாக. ம்….எத்தன நாளக்கித்தான் அவுங்களும் ஆமாம் போடுவாங்க. ம்… கோயிலுக்குப் போறீகளா. நம்ம பாயி வாங்குறது…. பாயிபாயி….” பேசிக்கொண்டே வண்டியை முறுக்கினார் பாய்க்காரர்.
“’சாவித்திரி…. நீ கோயிலுக்கு கெளம்பலயா. ஏன்டி ஒன்னாட்டம் பொம்பளப் புள்ளைக எல்லாம் சீவி சிரிச்சு மினிக்கிக்கிட்டு திரியுறாளுக. ஏம்புட்டு வயித்துல வந்து வெனக்கினு பொறந்தியே. ஒங்க அக்கா நா கிழிச்ச கோட்ட தாண்ட மாட்டா. நா சொன்ன சொல்ல மீறமாட்டா. ம்….. ஒங்க அக்காள கூட்டிக்கிட்டு ஒரு சுத்து போயிட்டு வர வேண்டியதுதானே. மசமசனு வூட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்குற….” அரியநாச்சி சொல்வதை காதில் வாங்காதவள் போல் சமையலுக்கு வாங்கிய மாங்காயை கடித்து தின்று கொண்டு இருந்தாள் சாவித்திரி. அவள் மாங்காய் தின்பது அரியநாச்சிக்கு பல் கூசியது. கோபம் தலைக்கு மேல் ஏறியது.
“’ஏம்மா… அவள தொந்தரவு பண்ற. அவளுக்குத்தான் சாமி சம்பிரதாயத்துல நம்பிக்கை இல்லல. விட்ற வேண்டியதுதானே. அவகிட்டயே ஓம்மொறப்ப காட்றது நல்லாவா இருக்கு. ஓம்பேரன அப்பா வந்ததும் அனுப்பி வைக்கிறேன். அவரு கோயில சுத்தி காமிச்சுட்டு வரட்டும். ஓம்மருமகன் வந்தாலும் வந்துரும் வந்ததும் நானும் போயிக்கிறேன்.” சத்யாவின் பேச்சில் அரியநாச்சி சமாதானம் ஆகவில்லை.
“இவ்ளோ சொல்றேனே கொஞ்சமாச்சும் மசியிறாளா. என்னமோ மாசமா இருக்கவ மாங்காய திங்கிறமாறி தின்னுக்கிட்டு இருக்கா. வயசுக்கு வந்த பொம்பள மாறிய இருக்கா. அப்புடியே ஆம்பள கணக்கா இருக்குறா. நம்ம கொலத்தோட பேர கெடுக்கனும்னே ஏம்வயித்துல வந்து வாச்சுருக்கா. தெனமும் கும்புடுற அந்தப் பெருமாளு எனக்கு ஒரு ஆம்பளப் பிச்சைய கொடுக்காம விட்ருச்சே…” வருத்தப்பட்டாள் அரியநாச்சி.
“ஆமா… நீ கோயிலு கோத்துரமுனு சுத்திக்கிட்டு கத்திக்கிட்டு இரு. நா மாசமாத்தான் இருக்கேன். ஒங்களுக்குத் தெரியாதா மூனுமாசமா நா வீட்டுக்கு ஒதுங்கல. ஊருஒலகத்து சேதியப்பூரா ஒன்னுவிடாம தெரிஞ்சு வச்சுக்க. வூட்டுல நடக்குற சேதிய தெரிஞ்சுக்காத…” சாவித்திரியின் பேச்சால் பத்திரகாளிகாகவே மாறிப்போனாள் அரியநாச்சி.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினவளாய் “….ஏன்டி எடுபட்ட சிறுக்கி. திருவிழா தேதினு ஊருசனம் ஒரே கொண்டாட்டமா இருக்க இந்த நேரத்துல அரியநாச்சிய கொலகாரியா ஆக்கிராத. ரெண்டு மூனுமாசமா ஒரு தினுசா திரியும் போதே நெனச்சேன்டி. எந்தச் சிறுக்கி மயங்கிட்டயோ முந்தானைய விரிச்சுருக்கனு நெனச்சது சரியா முடிஞ்சுருச்சு. ஓம்மக போக்கு சரியில்லனு பக்கத்துவூட்டுக்காரி பட்டும்படாம பேசும்போதே இந்த மரமண்டைக்கி
யோசிக்கத் தோணல. ஊருக்கதய பூரா சொல்லி நான் சிரிக்கிறேன். இப்ப ஏம்புட்டு கதய ஊரே சொல்லி சிரிக்க வச்சிட்டியேடி. எந்த வேசி மயன்கிட்டடி மயங்குன…” கத்திக்கொண்டே தென்னை விலக்கமாறால் சாவித்திரியை நாலு சாத்துசாத்துவதற்கு முண்டியவளை சத்யாதான் தடுத்தாள்.
“என்னய வேணா அடி. எதுக்கு ஏம்புட்டு வயித்துல இருக்க புள்ளயவும் சேத்து அடிக்க வர்ற. அது இன்னா பாவம் செஞ்சுச்சு. ஓம்புட்டு சாதி திமிரயும் சாஸ்திர புரட்டுகளையும் ஒழிச்சுக் கட்டத்தான் ஏம்மகன வயித்துல சொமக்குறேன்…” சாவித்திரியின் கண்கள் நெருப்பாக காட்சியளித்தது.
“இந்த வந்துட்டார்ல ஊர் மிராஸ்க்கு குண்டித்துணிய சொமக்குறவரு. ஓம் புள்ள லெட்சணத்த நீயே கேளு. திருவிழா தேதினு பாக்காம நாலாம்பேருக்கு தெரியாம இவள தொங்க விடுறீயா. இல்ல ஏம் பொறந்தவனுகள வரச்சொல்லி காரியத்த முடிச்சுடவா…” மேலச்சுவரில் சாய்ந்து கொண்டு அரியநாச்சி பேசுவதைக் பார்ப்பதற்கே ஆவுடையப்பனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. நான்கைந்து ஆடுகளை வேட்டையாடி தின்றும் பசி அடங்காத சிங்கத்தைப் போல காட்சியளித்தாள் அரியநாச்சி.
“அம்மாவோட கொணம் தெரிஞ்சும் ஏன்டி இப்புடி நடந்துக்குற. யாருடி அவன். நம்ம சாதி சனமா. இல்ல வேத்த சாதி பயலா. ஏதும் அசம்பாவிதம் நடக்குறதுக்குள்ள சொல்லித் தொலைடி. அம்மாவ நா பாத்துக்குறேன். நீ ஏம்புட்டு உசுருடி. எனக்குனு இருக்க ஒரே தங்கச்சிடி நீ…..” சத்யா கெஞ்சினாள்.
“யம்மா….. மேலத்தானியத்துல ஒரு நர்ஸ் இருக்காக. நூறோ எறநூறோ கொடுத்தா போதும். நாலாம்பேருக்குத் தெரியாம களச்சு விட்ருவாங்க. சட்டுப்புட்டனு ஒரு மாப்புளய பாத்து கட்டி வச்சுருவோம்மா….” சத்யாவின் பேச்சு எடுபடவில்லை.
“தண்ணிக்கி கீழ குசுவுனாலும் தலக்கி மேல எந்திரிக்குமுடி. நாலாம்பேருக்கு தெரியாமத்தான் மேலவீட்டுக்காரி அவ மகளோட கர்பத்த களச்சுட்டு வந்தா. இப்ப அது ஊருக்கே தெரிஞ்சு நாறிக் கெடக்குதுல்ல…” அரியநாச்சி அமைதியாகுவதாக தெரியவில்லை.
“ஆயி மகளும் கொஞ்ச நேரம் சும்மா இருக்கேளா. ஊருசனமே சிரிப்பும் வெளையாட்டுமா இருக்கு. இங்க என்னடான ஒரே எறச்சலா இருக்கு. என் மகளப்பத்தி எனக்குத் தெரியும்டி. எவனயாச்சும் காதலிச்சிருந்தா தைரியமா என்கிட்ட சொல்லிருப்பா. எந்த சாதிசனங்கிறதவிட எம்மகளோட வாழ்க்கதான்டி எனக்கு
முக்கியம். அவ யாரக் கை நீட்டுறாளோ அவனுக்கே கட்டி வச்சுருவேன்டி. ஏம்பேரக் கெடுக்குறமாறி ஏம்புள்ள நடக்கமாட்டா. நீ சொல்லுடாம்மா. என்ன நடந்துச்சுனு….”ஆவுடையப்பன் கேட்டுக்கொண்டிருந்தார்.
வெலக்கமாத்துல அடிவாங்குறதுக்கா நானு பொறந்தேன். எனக்குனு எந்த உரிமையும் இல்லையா. நானு என்ன ஒன்னுந்தெரியாதவளா…. நடுவிலுள்ள தூணில் சாய்ந்தபடி தேமி அழுதுகொண்டே உட்கார்ந்தாள்.
“ஓம்புட்டு உரிமைக்கு யாரும்மா குறுக்கே நின்னா… இங்க பாரு ஊருசனமே கொண்டாட்டமா இருக்கும்போது நம்ம வீடுமட்டும் சண்டசல்லுனு இருட்டடஞ்சு கெடக்கலாமா…?” ஆவுடையப்பனின் பேச்சில் மனம் இறங்கினாள் சாவித்திரி.
“மூனு மாசத்துக்கு முன்னாடி இருட்டானப்போ மணக்கொளத்துக்கு போனேன்பா. தண்ணிக்குள்ள தவளைகளோட கச்சேரி கேட்டு கொஞ்ச நேரம் அங்கேய கரையில ஒக்காந்துட்டேன். கரையில உள்ள மரங்களோட காத்தும் பறவைகளோட பேச்சும் ரொம்ப இனிமையா இருந்துச்சு. அப்போ வானத்த பாத்தேன். நட்சத்திரங்கள் எல்லாம் என்னய வேடிக்கை பாத்துச்சுக. எனக்கு ரொம்ப கூச்சமா இருந்துச்சு….” சாவித்திரி பேசுவதைக் கேட்டு ஆவுடையப்பனும் பொறுமை இழந்து “ஏம்மா….என்னம்மா இங்க நடந்துக்கிட்டு இருக்கு. நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்க..” என்றார்.
“நான்தான் சொன்னேனே நம்ம குடும்பத்துக்குனே வெனைக்கி வந்து பொறந்துருக்கா….” ஒப்பாரி வைத்தாள் அரியநாச்சி.
எதையும் கண்டு கொள்ளாதவளாய் மேலும் தொடர்ந்தாள் சாவித்திரி. “அதுல ஒரு நட்சத்திரம் பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு. அந்த நட்சத்திரத்த கொஞ்சனுமபோல தோணுச்சு. அந்த நட்சத்திரமே எனக்கு கணவனா வரணும்னு நெனச்சு கண்ண மூடி தவம் பண்ணுனேன். அந்த நட்சத்திரமே நேருல வந்து எனக்கு கொழந்தை வரத்த கொடுத்துச்சு. இப்ப ஏம்புட்டு வயித்துல வளருர புள்ளக்கி அந்த நட்சத்திரம்தான் அப்பா….” என்று சொல்லி முடித்தாள்.
இதைக் கேட்டதும் கலகலவென சிரித்தார் ஆவுடையப்பன். “ம்…. அப்பவே நெனச்சேன். நீ ஏதோ வெளையாட்டுக் காட்டுறேனு. சரியாப் போச்சுமா. இது தெரியாம ஒங்க ஆத்தா டிங்குடிங்குனு ஆடுறா. இதுல ஒங்க அக்கா கொஞ்சம் கூட உண்மை எதுனு ஆராயாம மேலத்தானியத்துக்கே போய்ட்டு வந்துட்டா”
“அப்பா நெசமாத்தான் சொல்றேன். நம்புங்கப்பா. அந்த நட்சத்திரம்தான் என் கணவன்…” உறுதியாகச் சொன்னாள் சாவித்திரி.
“அம்மாடி ஓம்புட்டு வெளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாம போச்சும்மா. மொதல்ல ஒனக்கு யாரப் புடிக்குதுனு சொல்லு. இந்த அரியநாச்சி முன்னாடியே நம்ம ஊர் திருவிழா முடிஞ்சதும் ஓம்புட்டு கல்யாணத்த ஜாம்ஜாம்னு நடத்தி வைக்கிறேன்..”
“என் மேல அவ்ளோ நம்பிக்கையாப்பா. அது எப்படிப்பா உங்க கூடவே இருக்க நான் சொன்னா நம்ப மாட்றீக. ஆனா யாரோ எப்பவோ எழுதி வச்சத இன்னும் நம்புறீங்க…” சாவித்திரி பேசுவது ஆவுடையப்பனுக்கு என்ன ஏதுனு புரியவில்லை என்பதைக் குறிக்கும் விதமாக புருவங்களை சுருக்கி தலையை மேல உயர்த்தினார்.
“ஆத்தங்கரயில நின்னு சூரியன நெனச்சு கும்புட்டாளாம் ஒருத்தி. சூரியனே நேரில் வந்து புள்ள வரம் கொடுத்துச்சாம். சூரியனோட மகன்தான் கர்ணன்னு ஒங்க புராணம் சொல்றத இன்னக்கி வரைக்கும் நம்புறீங்க. எப்புடி சூரியன் புள்ளயக் கொடுக்க முடியும்னு நீங்க என்னைக்காச்சும் கேள்வி கேட்டுறிக்கீங்களா. எனக்கு நட்சத்திரம்தான் வரம் கொடுத்துச்சுன்னா மட்டும் நக்கலா சிரிக்கிறீங்களே. அப்ப நானு பொய் சொல்றேனா….? “ சாவித்திரியின் பேச்சைக் கேட்ட அரியநாச்சி, “வாயி கொழுப்பு ஒனக்கு ரொம்படி. கொஞ்ச நேரத்துல ஆட்டிப் படச்சுட்டாளே. தப்பா ஏதும் நடந்துச்சுனா சித்ராதேவியே ஊரெல்லாம் டம்மு டம்முனு தமுக்க அடிச்சுட்டு வந்துருவா…” தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு சமையல் கட்டு பக்கம் சென்றாள்.
“பொய்யும் பொரட்டையும் ஒங்க அம்மா மாதிரி ஆளுக மூலமா பொழக்கனும்ங்கிறதுக்காக எவனோ புளுகு மூட்டைய எழுதி வச்சது. அதக் கட்டிக்கிட்டு அழுதா நம்ம குடும்பந்தான் குட்டிச்சுவரா போகும். கோயிலு கொளத்துக்குப் போனா நாலு மக்க மனுசல பாத்தோமா. மகிழ்ச்சியா இருந்தோமானு இருக்கனும். அதுக்காக இந்தக் காலத்துலயும் அப்பமாதிரி முட்டாள்தனமா எல்லாத்தையும் நம்ப முடியுமா.. சரி சரி கெளம்புங்க…” ஆவுடையப்பன் சொல்லிக் கொண்டு இருக்கும்போது வெளியில் விளையாடச் சென்றிருந்த சாந்தன் “தாத்தா…..”என்று ஓடிவந்து கட்டியணைத்துக் கொண்டான்.
“பெரிய வூட்டுக்கார ஆத்தா… திருவிழாதேதினு ஒங்க ஊருக்கு யாவரம் பண்ண வந்தா கண்ணுலயே தெரிய மாட்டேங்கிறீகளே. ஜோடி முந்நூறுவதானே ரெண்டு ஜோடி வாங்கிப்போட்டா காலகாலத்துக்கு கெடக்கும்ல. அந்த ஆண்டவனே சொர்க்கத்துல நம்ம பாயிலதான்
படுத்துருக்காரு தெரியும்ல….” பாயிக்காரரு சொன்னதும் சிரித்துக்கொண்டே வாசலுக்கு வந்தார் ஆவுடையப்பன்.
——–*****——
போற போக்குல விளையாட்டாக ஒரு கேள்விய கேட்டுவிட்டு திருவிழாவுக்கு சென்று விட்டார் எழுத்தாளர். ஒரு திருவிழா நிகழ்விற்குள் எவ்வளவு பெரிய விஷயம்.