கதைகள்

நடுகைக்காரி! …. 61…. ஏலையா க.முருகதாசன்.

புஸ்பகலா வந்திட்டுப் போனதன் பின்பு ஞானத்தின் தாய் சண்முகவல்லி ஒரு மனநிலையில் இல்லை.கதிரையில் இருந்தபடியே கண்ணயர்ந்தவளின் மனசில் பலவித எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

ஓன்றாகப் படிக்கிற பிள்ளைகளாக இருந்தால்கூட ஆம்பிளைப்பிள்ளையள் இருக்கிற வீடடுக்கு பொம்பிளைப் பிள்ளைகள் போய் வருவது சாதாரண விடயமல்ல.

ஆம்பிளைப்பிள்ளையள் இருக்கும் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பொம்பிளைப் பிள்கைளுடன் கதைத்தால் பெற்றோர் அவனோடை அப்படி என்ன கதைச்சனி சொல்லு என்று கண்டிப்பார்கள் என்று கதைப்பதற்குத் தயங்குவார்கள்.

ஆனால் புஸ்பகலா வீமன்காமத்திலிருந்து வந்து தனது மகனை வருத்தம் பார்த்திட்டுப் போனது சாதாரண விடயமல்ல.வந்த இடத்தில் அந்தப் பிள்ளைக்கு மாதச் சுகயீனமும் வந்திட்டுது.

பொம்பிளைப் பிள்ளையள் இருக்கும் வீட்டுக்கு ஆம்பிளைப் பிள்ளையள் போகும் அங்குள்ள பொம்பிளைப் பிளளைக்கு அந்த நேரம் பார்த்து மாதச் சுகயீனம் வந்தால்,அந்தப் பொம்பிளைப் பிள்ளக்கும் வீட்டுக்கு வந்த ஆம்பிளைப் பிள்ளைக்குந்தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லுவார்கள் இல்லாட்டில் அவர்களிருவருக்கும் காதல் வந்து கல்யாணம் நடக்கும் என்றும் சொல்வார்கள்.அந்த ஆம்பிளைப் பிள்ளைக்கும் பொம்பிளைப் பிள்ளைக்கும் ஒரே வயதாக இருக்கும் இல்லாட்டில் ஆம்பிளைப் பிள்ளை இரண்டு மூன்று வயது மூப்பாக இருப்பான்.இரண்டு பேற்றை சாதகங்களைப் பார்த்தால் பொருத்தமாகவும் இருக்கும்.

ஒரு பொம்பிளைப் பிள்ளையை அவளுடைய தோழிகள் ஏண்டி நீ கோயில் திருவிழாவுக்கு வாறணெண்டு சொல்லிப் போட்டு இப்ப வரமாட்டன் என்கிறாய் என்று கேட்டால்,வாறனெண்டுதான் இருந்தனான் திடீரென்று சுகமில்லாமல் வந்திட்டுது என்று சொன்னால் எப்படி இப்ப வர்ற நாளில்லையே என்று தோழி ஒருத்தி கேட்டால் ஒரு ஆம்பிளைப்பிள்ளையின் பெயரைச் சொல்லி அவர் அப்பாவிடம் ஒரு அலுவலாக வந்தவர்,அவர் என்னை விழுங்குவது போலப் பார்த்தார் எனக்குக் கூச்சமாக இருந்தது அப்பதான் இது நடந்தது என்று சொன்னால் அப்ப சரி உனக்கும் அவனுக்கும் கொனக்சன் தொடங்கிவிட்டது காதல் மொட்டுவிடத் தொடங்கிவிட்டது என்று கேலி செய்யத் தொடங்க அதுவே அவர்களிருவருக்கும் இடையில் காதலாகிவிடும்.

இது போதாதென்று கோவில் இரவுத் திருவிழாக்களின் போது காதலன் மெர்குரி லைட் வெளிச்சத்தில் நிற்பதைக் கண்டதும் அங்கை பாரடி உன்ரை ஆள் அந்த வெளிச்சத்திலை அழகாய்த் தெரிகிறான் அவஇது கோயில் கவனமடி என்று தோழிகள் காதலிக்கும் தமது தோழியைக் கி;ண்டல் செய்வார்கள்.

இது ஊருக்குள் பரவலாக பேசப்படுவதுதான்.புஸ்பகலாவுக்கும் தங்களுடைய வீட்டிலேலேயே மாதவிடாய் வந்ததும் அவளே ஞானத்தை விரும்புவதாகச்

சொன்னதும்,இப்படி ஒரு நம்பிக்கை ஊருக்குள் இருப்பது சரியானது போலத்தான் இருக்கின்றது என்று ஞானத்தின் தாய் நினைத்துக் கொண்டாள்.

தான் தனது கணவரை விரும்பிய போது தனக்கு மாதவிடாய் வந்த காலங்களில் கணவரின் முகத்தையே நிமிர்ந்து பார்க்க கூச்சப்பட்டு குனிந்தபடியே கதை சொன்னதையும்,மாதவிடாய் வருவதற்கான காரணத்தையும் உறுப்பையும் உணர்ந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் கல்யாணம் செய்து வைக்கிறார்கள்,குழந்தையொன்று பிறக்க வேண்டுமென்றால் கல்யாணம் செய்து கொண்டவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதையும்,அப்பொழுது தன்னிலை எப்படி இருந்தது என்பதையும் நினைச்ச ஞானத்தின் தாய்,தங்களுடைய கடைசி மருமகளாக புஸ்பகலா இருந்தால் நல்லாயிருக்குமே என கற்பனையில் பூரித்தாள்.ஞானத்தின் தாயும் பருவ வயதைக் கடந்து வந்தவள் மட்டுமல்ல காதும் காதும் வைச்சு மாதிரி ஊருக்குள் கதைக்கும் ஆண் பெண் உறவுபற்றிய அந்தரங்கக் கதைகளை கேட்டு வளர்ந்தவள்தான்.

ஞானத்துடன்; படிக்கும் ஆம்பிளைப் பிள்ளையள் வந்து பார்ப்பது இயல்பாக நடக்கும் ஒரு விடயந்தான்.

ஆனால் பொம்பிளைப் பிள்ளை இவ்வளவு தூரத்திலிருந்து வந்து பார்த்தது மட்டுமல்ல,சினேகிதியை வருத்தம் பார்க்கப் போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு புஸ்பகலா ஞானத்தைப் பார்க்க வந்ததும் தனது மனசில் இருந்த ஞானத்தை விரும்புகிறேன் என தன்னிடம் வெளிப்படையாகச் சொன்னதையும் நினைச்சு அடுத்து என்ன நடக்கும் எனத் தடுமாறியவளுக்கு என்ன கோழித் தூக்கமோ என்ற குரல் கேட்டு கண் விழித்த ஞானத்தின் தாய் சண்முகவல்லி முற்றத்தில் மார்க்கண்டுவின் மனைவி நிற்பதைக் காண்கிறாள்.

அப்போதை கதைக்க நேரமில்லாமல் போச்சுது மீனைக் கழுவி சட்டியிலை போட்டு அடுப்பிலை வைச்சிட்டுப் பார்த்தன் மிளகாய்த் தூள் இல்லையென்று தெரிய வந்துது,அதுதான் ஒரு மூடி தூள் உன்னட்டை வந்து வாங்கிக் கொண்டு போனனான்,அப்பவே கேட்க வேண்டுமென்றுதான் நினைச்சனான்,அந்தாள் வாயிலை வாத்திட்டு வாற மனுசன்,அந்தாளுக்கு நாக்குக்கு உவப்பாக காரசாரமாய் இருந்தால்தான் பிடிக்கும் அதுதான் கறி வைக்கிற அவசரத்திலை கனக்கக் கதைக்காமல் போயிட்டன் என்று சொல்லிக் கொண்டே மார்க்கண்டுவின் மனைவி மீனாட்சி விறாந்தையில் மேசைக்கு அந்தப் பக்கத்தில் கிடந்த கதிரையில் வந்து உட்கார்ந்தவள் மெய்யே சண்முகி ஆர் வந்து போன பெட்டை நல்ல வடிவான பொடிச்சிதான் ஏன் வந்தவள் என்று கேட்க,அந்தப் பிள்ளை ஞானத்தோட படிக்கிற பிள்ளை ஞானத்துக்குக் காய்ச்சல் என்று வகுப்பிலை கதைச்சிருக்கினம் அதுதான் வருத்தம் பார்க்க வந்தவள் என்று சொல்ல,இது என்ன புதுக் கதையாக்கிடக்குது,எங்கையாவது பொடியங்களை பெட்டையள் போய் வருத்தம் பார்க்கிறதெண்டு நீ கேள்விப்பட்டனியே.

எங்கடை அயலட்டையிலை அப்படி நடந்திருக்குதோ பொடியங்களே போய் வருத்தம் பார்க்க மாட்டாங்கள் இது ஒரு புது விண்ணானமாகக் கிடக்குது அதுவும் சைக்கிளிலை வந்து பார்த்திருக்குது,அதுசரி இந்தப் பிள்ளை

எங்கிருக்கிறதாம் என மார்க்கண்டுவின் மனைவி புஸ்பகலாவின் குடும்ப அடி அந்தலையைக் கேட்பதிலேயே கண்ணாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.அந்தப் பிள்ளை வீமங்காமத்திலை இருக்கிறவள் என்று சண்முகவல்லி சொல்ல எனக்கும் வீமங்காமத்திலை இருக்கினம் ஆற்றை மோள் என்று அறியிறன் என்று மீனாட்சி இது இவாவுக்குத் தேவையில்லாத வேலை என்று சண்முகவல்லி மனசுக்குள் நினைச்சுக் கொள்கிறாள்.

கதை புடுங்குவதிலேNயு மார்க்கண்டுவின் மனைவி கவனமாக இருக்கிறாள் என்பது சண்முகவல்லிக்கு விளங்கிவிட்டது.

மீனாட்சி ஆம்பிளைப் பிள்ளையளை, ஒன்றாக படிக்கிறவை என்றதாலை பொம்பிளைப் பிள்ளையள் வருத்தம் பார்க்க வருவது ஒண்டும் பிழையானதில்லையே அதாலை உங்களுக்கு ஏதும் பிரச்சினையா,பிரச்சினை வந்தால் அது எங்களுக்குத்தான் வரும் என்று சண்முகவல்லி கொஞ்சம் காரமாகச் சொல்ல,அதுக்கில்லை சண்முகி சும்மா கிடக்கிற ஞானத்தை வருத்தம் பார்க்க வாறன் என்று அவன் மனசைக் குழப்பிப் போடுவளை இந்தக் காலத்துப் பெட்டையள் என்று மீனாட்சி,வாயிலை போடுவதற்காக பாக்கைச் சீவிக் கொண்டே சொல்ல நீங்களும் நானும் பெட்டையாய் இருந்துதான் வந்தனாங்கள் நீங்கள் குமர்ப்பிள்ளையிலை என்ன செய்தனீங்கள் என்று எனக்குத் தெரியும் நான் குமர்ப்பிள்ளையிலை என்ன செய்தனான் என்று எனக்குந் தெரியும் என்ரை மனசனுக்கும் தெரியும்,ஒவ்வொருத்தர் முதுகிலும் ஊத்தையை வைச்சுக் கொண்டு மற்றவர் முதுகிலை என்ன கிடக்குது என்று பார்க்காதையுங்கோ, உங்கடை பழைய கதையைக் கிழற வேண்டாமென்று பார்க்கிறன்,சரி அந்தப் பிள்ளையைத்தான் மருமோளாய் எடுத்தால் ஆர் என்ன கதைக்க முடியும் என்று சண்முகவல்லி குரலை உயர்த்திச் சொல்ல சீவின பாக்கை தட்டத்திலேயே போட்டுவிட்டு,நல்லது சொன்னால் ஆருக்குப் பிடிக்கப் போகுது என்று முணுமுணுத்துக் கொண்டே மீனாட்சி கதிரைவிட்டு எழுந்து போகிறாள்.

அரை நித்திரையிலிருந்த ஞானத்தின் தகப்பன் தனது மனைவியும் மார்க்கண்டுவின் மனைவி மீனாட்சியும் கதைச்சதைக் கேட்டுக் கொண்டிருந்தது போல நித்திரை வராமல் உழன்று கொண்டிருந்த ஞானமும் தாயும் மீனாட்சியும் கதைச்சதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

பாயைச சுருட்டி அறைக்குள் வைச்சுவிட்டு வந்த ஞானத்தின தகப்பன் அவாவுக்கு நல்ல குடுவை குடுத்து அனுப்பி விட்டிருக்கிறியள்,மீனாட்சிக்கு இதுதான் வேலை ஆரார் வீட்டிலை ஆரார் வந்து போகினம் எங்கையிருந்து வருகினம் என்றதை ஆராயாட்டில் நாரதருக்கு தலை வெடிச்சது போல அவாவுக்கும் வெடிச்சிடும் போல தன்ரை வீட்டிலை குமர்ப்பிள்ளையள் இரண்டை வைச்சிருக்கிறன் என்று நினைக்காமல்;அதைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல் கதைச்சுக் கொண்டு திரியிறா சிலற்றை புத்தியை மாத்த ஏலாது,செல்வத்திற்கு இப்ப எப்படி காய்ச்சல் என்று கேட்க,இப்ப கொஞ்சம் பரவாயில்லைப் போல என்ற சண்முகவல்லி ,உங்களோடை கதைக்க வேணும் வாங்கோ அடுப்படிக்கு என்று அவள் எழுந்து போக கணவனும் எழுந்து போகிறார்.

தன்னைப் பற்றியும் புஸ்பகலாவைப் பற்றியுந்தான் அம்மா அப்பாவோடை ஏதோ கதைக்கப் போகிறார் அம்மாவும் புஸ்பகலாவும் முற்றத்திலை நின்று எனக்குக் கேட்காத மாதிரி ஏதோ கதைச்சவை என்னவாக இருக்கும் என யோசித்தவாறு படுத்திருந்தான் ஞானம்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.