வாக்குமூலம்! ….. 90 …. தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
பயனும் கொடாது வழியும் விடாது நட்டநடு வீதியில் பட்டமரமாய் நிற்கும் தமிழ்த் தேசியத் தலைமைகள்
தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.
“தமிழர்களின் கோரிக்கைகள் என்ன, அவர்கள் விரும்பும் தீர்வு என்ன ஆகிய விடயங்களை இந்தியாவின் மோடி அரசிடம் நாம் ஏற்கனவே எடுத்துரைத்துவிட்டோம். எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் மோடி அரசு, இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்” (ஈழநாடு 04.11.2023)
என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (பெருந்தலைவர்) இரா. சம்பந்தன், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இரா. சம்பந்தனின் இவ்வாறான கோரிக்கைகள்-அறிவிப்புகள்-ஊடக அறிக்கைகள் யாவுமே பல வருடங்களாகத் தமிழ் மக்களுக்குப் (தீபாவளிக்கு முன் தீர்வு, பொங்கலுக்கு முன் தீர்வு என்பது போல்) பழக்கப்பட்டுப் போன வழமையான விடயங்கள்தான். அதாவது இவையெல்லாம் வெறுமனே ஏட்டுச் சுரக்காய்கள்தான் (வெற்று வேட்டுகள்தான்).
எனினும், இரா. சம்பந்தனின் இந்த அறிவிப்பு தொடர்பில் அவரிடம் சில கேள்விகளை இப்பத்தி எழுப்புகிறது.
இந்தியாவின் மோடி அரசிடம் நீங்கள் எடுத்துரைத்த தமிழர்களின் கோரிக்கைகள் என்ன? அவர்கள் விரும்பும் தீர்வு என்ன? இதை ஏன் தெளிவில்லாமல்- பூடகமாக அல்லது ஒளித்து மறைத்துச் சொல்கிறீர்கள்? அது என்னவென்று தெளிவாகச் சொல்லலாமே.
‘நாம் ஏற்கெனவே எடுத்துரைத்துவிட்டோம்’ என்ற தங்கள் கூற்றில் ‘நாம்’ என்பது அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தால்,
‘இரு தேசம்; ஒரு நாடு’ என்னும் அடிப்படையிலான தமிழீழத் தனி நாடா?
அல்லது
‘சமஸ்டி’க் கட்டமைப்பின் கீழான வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சி அலகா?
அல்லது
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் முழுமையான-முறையான அமுலாக்கலா?
இந்த மூன்றிலும் எதற்கு இந்தியாவின் மோடி அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
இந்த மூன்றுக்கும் ஒரே நேரத்தில் அழுத்தம் கொடுப்பது சாத்தியமற்றதும் ஒன்றுக்கு ஒன்று முரணானதுமாகும் என்பது உங்களுக்குப் புரியாததொன்றல்ல.
‘நாம் ஏற்கெனவே எடுத்துரைத்துவிட்டோம்’ என்ற தங்கள் கூற்றினை வைத்து ‘நாம்’ என்பது தற்போது ‘தமிழரசுக் கட்சி’யைத்தான் குறிக்கும் என எடுத்துக் கொண்டால் நீங்கள் வாய்ப்பாடு போல் பல வருடங்களாக உச்சரித்துக் கொண்டிருக்கும் ‘பிளவு படாத ஐக்கிய இலங்கைகுள் தமிழர்கள் கௌரவமாகவும் சமத்துவமாகவும் வாழக்கூடிய ‘சமஸ்டி’த் தீர்வொன்றைத்தான் மோடி அரசிடம் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அது இப்போதைய தென்னிலங்கை-இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் மற்றும் பூகோள அரசியல் சூழலில் உடனடிச் சாத்தியமேயில்லை.
இந்தியாவின் மோடி அரசு மட்டுமல்ல அதற்கு முந்திய அரசுகளும் 13 ஆவது திருத்தத்திற்கு மேல் எதனையும் இதுவரையில் உச்சரித்ததே கிடையாது. பல வருடங்களாகப் (1987 இல் இருந்து) பல தடவைகள் பல மட்டங்களில் இந்திய அரசுத் தலைவர்களும் இராஜதந்திரிகளும் 13 ஆவது திருத்தத்தை மட்டுமே பிரஸ்தாபித்துவருகிறார்கள்.
எனவே, இந்த யதார்த்தத்தை மீறி நீங்கள் என்ன கோரிக்கைகளை எப்படியெல்லாம் எத்தனை தடவைகள் எந்த மட்டங்களில் வைத்தாலும் இந்திய அரசிடம் அது எடுபடப்போவதில்லை.
எனவே, தமிழ் மக்கள் சார்பில் நீங்கள் செய்ய வேண்டிய அவசியமான-அவசரமான வேலை என்னவெனில், என்ன மந்திரமாவது மாயமாவது செய்து தமிழ் அரசியல் பொதுவெளியில் வடக்கு கிழக்கில் செயல்படுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து (ஓரிரு கட்சிகள் உதறிக் கொண்டு நின்றால் அவற்றை அலட்சியப்படுத்தி விடுங்கள்), 13 ஆவது திருத்தத்தின் முழுமையான – முறையான அமுலாக்கலை ஒரு ஒற்றைக் கோரிக்கையாகவும்-ஒருமித்த கோரிக்கையாகவும் மோடி அரசிடம் முன்வைத்தால் ஏதாவது நடக்கும். இல்லையேல் ஒன்றும் நடவாது. இலங்கைத் தமிழர்களின் நிலைமை எந்த முன்னேற்றமும் இல்லாமல் இப்படியே இழுபட்டுச் செல்லும்.
உங்களது அந்திம காலத்திலாவது இதனைத் தற்றுணிபோடு நீங்கள் சாதித்துக் காட்டினீர்களானால் வரலாறு உங்களைப் போற்றும்; இல்லை;
இதுவரையில் இருந்தது போல்தான் தொடர்ந்தும் இறக்கும்வரை இருப்பேன் என நீங்கள் அடம் பிடித்தால் வரலாறு உங்களைத் தூற்றுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும்.
உங்கள் பாராளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்யவேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ள இன்றைய சூழலில் இதுவரையில் நீங்கள் புரிந்த அரசியல் தவறுகளுக்கெல்லாம் ‘பிராயச்சித்தம்’ தேடும் வகையிலாவது இதனைச் செய்யுங்கள். இதனைச் செய்யாமல் நீங்கள் பாராளுமன்ற ஆசனத்தில் இருந்து பதவி விலகுவதினாலோ அல்லது அடுத்த பாராளுமன்றத் தேர்தல்வரை பதவியில் நீடிப்பதாலோ அல்லது அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் நீங்கள் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத் தமிழர்கள் உங்கள் மூப்பைப் பொருட்படுத்தாது மீண்டும் உங்களைத் தேர்வு செய்தாலும்கூட எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. அதாவது பலன் தராத பட்டமரம்போல் ஆவீர்கள்.
ශ්රී ஐ அழித்து போராட்டம் நடத்தி சிறிலங்கா மத்திய வங்கி என அச்சிடப்பட்ட சம்பளம் வாங்கி ஒரு நாடகம். காக்கி சட்டை அணிந்த சிங்கள போலிஸ் காரரை தனது மெய்ப்பாதுகாவலராக வைத்துக் கொண்டு “காக்கி சட்டை அணிந்த சிங்கள வெறியர்கள் ” என்று மேடையில் முழங்கி ஒரு நாடகம்.தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று பிள்ளையானை எதிர்த்து பணத்திற்கு சோரம் போய் நசீரை முதல்வராக்கி ஒரு நாடகம் .சீரியலையும் சினிமாவையும் நிஜம் என்று நம்பும் சமூகம் அரசியல் நாடகத்தையும் நம்புவதில் வியப்பில்லை