அழிவின் விளிம்பில் பாலஸ்தீன ஊடகங்கள்: களப்பணியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(பாலஸ்தீன போராட்டத்தில் ஊடகங்கள் சந்தித்த சவால்களும், அத்துமீறல்களும் எண்ணிலடங்காதவை. தற்போதய இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரால் இதுவரை 36 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உறுதி செய்துள்ளது)
1948 இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு போர் நிருபர்கள், தொழில்முறை ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன ஊடக சவால்கள்:
பாலஸ்தீன போராட்டத்தில் ஊடகங்கள் சந்தித்த சவால்களும், அத்துமீறல்களும் எண்ணிலடங்காதவை. பாலஸ்தீன பத்திரிகைகளில் ‘அல் அய்யாம்’ பாலஸ்தீனத்தின் இரண்டாவது பெரிய தினசரி செய்தித்தாளாகும்.
‘அல் டிஃபா’ 1934 மற்றும் 1948 க்கு இடையில் வெளியான ஒரு செய்தித்தாளாகும். பெலாஸ்டின், 1911 முதல் 1967 வரை யாஃபாவிலும் பின்னர் கிழக்கு ஜெருசலேமையும் தளமாகக் கொண்டு வெளியான ஒரு செய்தித்தாளாகும்.
காசாவில் இருந்து செயல்படும் முதன்மையான வாராந்திர செய்தித்தாள்களில்
அல்-ஹயாத், அல்-ஜடிதா, பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையின் அதிகாரப்பூர்வ தினசரியாகும். போர்க் காலங்களில் இந்த ஊடகங்கள் மீதான தடைகளும் அத்துமீறல்களும் தொடர்ந்தன.
அல்-ஹுரியா, DFLP உடன் இணைந்த அரசியல் செய்தித்தாள் (பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி)வெளியாகிறது. அல் ஜாமியா, அல் அரேபியா, 1927 மற்றும் 1935 க்கு இடையில் வெளியான தினசரி செய்தித்தாள்.
லிசான் அல் அரப், ஜெருசலேமில் உள்ள ஒரு செய்தித்தாள் 1921 மற்றும் 1925 க்கு இடையில் வெளியிடப்பட்டது.
ஆங்கிலப் பத்திரிகைகளில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் ஜர்னல், ஒரு சுயாதீனமான, இலாப நோக்கற்ற, காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. அத்துடன்
தி பாலஸ்தீன டெலிகிராப், காசா பகுதியில் உள்ள முதல் இணைய செய்தித்தாள் ஆகும்.
பாலஸ்தீன டைம்ஸ், 2006 முதல் 2007 வரை ஒரே ஆங்கில மொழி தினசரி பாலஸ்தீனிய செய்தித்தாள் வெளிவருகிறது. திஸ் வீக் இன் பாலஸ்தீனமானது, பாலஸ்தீனத்தின் கலாச்சார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒரு மாத இதழாகும்.
அல்-குத்ஸ், ஜெருசலேமைத் தளமாகக் கொண்ட தினசரி செய்தித்தாள்,
அல்-குத்ஸ் ஒரு சுயாதீன பான்-அரபு தினசரி செய்தித்தாள், லண்டனில் வெளியிடப்பட்டது.
பாலஸ்தீன தொலைக்காட்சி:
பாலஸ்தீனத்தில் உள்ள தொலைக்காட்சியானது வரலாற்று நிகழ்வுகள், பொருளாதார அபிவிருத்தி நோக்கிச் செல்லும் நிகழ்ச்சிகளை காண்பிக்கிறது. ஆனால் ஒரு முக்கிய கருப்பொருள் அரசியல். பாலஸ்தீனிய அதிகாரம் அதன் குடிமக்களுக்காக உருவாக்கப்பட்ட பொது நிகழ்ச்சிகள் மூலம் ஒரு பகுதியாக கலாச்சார விழுமியங்களை உருவாக்குகிறது. குழந்தைகள் நிகழ்ச்சிகள் முதல் நாடகங்கள் வரை நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும்.
பாலஸ்தீனிய அதிகாரசபை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனிய அதிகாரத்தின் குடிமக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் மேல் எப்போதும் ஓர் இராணுவ அச்சுறுத்தல் இருந்த வண்ணமே உள்ளது.
பாலஸ்தீன தொலைக்காட்சி
அல்-அக்ஸா டிவி, அல்-குட்ஸ் டிவி, பாலஸ்தீன ரேடியோ மற்றும் டிவி கார்ப்பரேஷன், பாலஸ்தீனிய ஒலிபரப்புக் கழகம்(PBC), பாலஸ்தீனிய செயற்கைக்கோள் சேனல் மற்றும் சனாபெல் டிவி ஆகியன முக்கியமான பாலஸ்தீன தொலைக்காட்சி நிறுவனங்களாகும்.
பாலஸ்தீனிய ஆட்சி அதிகாரத்தின் அதிகார எல்லைக்குள் உட்பட்ட
பாலஸ்தீன தொலைக்காட்சி, 1 ஜூலை 1994 இல் நிறுவப்பட்டது. இஸ்ரேலிய இராணுவ அச்சுறுத்தலுக்கு எப்போதும் முகங்கொடுக்கும் பாலஸ்தீன தொலைக்காட்சி 19 ஜனவரி 2002 அன்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி அழித்தனர்.
பாலஸ்தீனிய துப்பாக்கிதாரியால் ஆறு பேரைக் கொன்றதற்கு பதிலடியாகக் கூறி, ரமல்லாவில் உள்ள பாலஸ்தீனிய ஒலிபரப்புக் கழக(PBC) இன் ஐந்து மாடி பிரதான கட்டிடம் மற்றும் ஒலிபரப்புக் கோபுரத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அழித்தனர்.
பத்திரிகையாளர்க்கு இஸ்ரேலின் நேரடி அச்சுறுத்தல்:
பாலஸ்தீனத்தில் அல் அய்யம்,அல்-ஹயாத் அல்-ஜடிதா ,அல் கர்மில் ,அல் மனார்,அல் மசார் ஆகிய பத்திரிகைகள் போர்க்காலத்திலும் வெளிவருகிறது. காசாவில் தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் இணையப் பிரச்னைகள் நிலவி வருகின்றது. தொடர்ந்து காசா நகரில் இஸ்ரேலின் நேரடி அச்சுறுத்தல் பத்திரிகையாளர்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளதுடன் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் அல் குத்ஸ்,பாலாஸ்தீன் அல்-முஸ்லிமா,அல்-இத்திஹாத்,குல் அல் அரபு அல்-மதீனா ஆகிய ஊடகங்களின் பத்திரிகையாளர்க்கு இஸ்ரேலின் நேரடி அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் – இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஆரம்பித்த போர் தற்போது தீவிரமாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் படையினர் காசா பகுதியை கொடூரமாக தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் காசாவில் போர் பற்றிய விவரங்களைச் சேகரிக்க பல்வேறு நாட்டில் இருந்து பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர். தகவல் சேகரிக்கச் சென்றவர்களில், இதுவரை 36 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில், 30 பாலஸ்தீனர்கள், 4 பேர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் லெபனானை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
பல பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் நேரடி அச்சுறுத்தலை கொடுத்துள்ளதால் போர்க்கள
தகவல்களை சேகரிப்பதை பத்திரிக்கையாளர்கள் குறைத்துள்ளனர். அத்துடன் பாலஸ்தீன பத்திரிகையாளர்களை
பாதுகாக்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதய இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரால் இதுவரை 36 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உறுதி செய்துள்ளது.
இதற்கு முன்பாக 1992 – 2022 வரை இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் வேறு 25 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உழைக்கும்
பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு ஆவணப்படுத்தியுள்ளது.
மே 2022 வரை, மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் 2008 முதல் மோதலின் விளைவாக 6,036 பாலஸ்தீனியர்கள் மற்றும் 272 இஸ்ரேலிய இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆவணப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஊடகர் ஷிரீன் அபு அக்லே கொலை :
ஷிரீன் அபு அக்லே (Sirin Abu Aqle) ஏப்ரல் 3, 1971இல் பிறந்த அமெரிக்க ஊடகர் 25 ஆண்டுகளாக அல் ஜஷீராவின் பத்திரிகையாளராகப் பணியாற்றி உள்ளார். இவரின் கொலை சர்வதேச ஊடகப்பரப்பில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் நீல நிற மேல் அங்கி அணிந்தபடி ஊடகராக பணியாற்றிய வேளையில் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரால் கொல்லப்பட்டார்.
பாலஸ்தீனப் பகுதிகளில் பல தசாப்தங்களாக ஊடகப் பணி செய்ததற்காக மத்திய கிழக்கு முழுவதும் அபு அக்லே மிகவும் பிரபல்யமான ஒருவராக இருந்தார். மேலும் பல அரபு மற்றும் பாலஸ்தீனிய பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் காணப்பட்டார்.
11 மே 2022 அன்று அவர் இறந்தவுடன், இஸ்ரேல் கொலைக்கான பொறுப்பை ஏற்க மறுத்தது மற்றும் பாலஸ்தீனிய போராளிகளை குற்றம் சாட்டியது. இக்கொலை தனது படைகளால் “தற்செயலாக” தாக்கப்பட்டிருக்கலாம் என்பதை முழுமையாக ஒப்புக் கொள்ளும் வரை படிப்படியாக அதன் கதையை மாற்றியது. ஆனாலும் குற்றவியல் விசாரணையை இஸ்ரேல் மேற்கொள்ள மறுத்தது.
பாலஸ்தீன பெண் ஊடக முன்மாதிரி:
சர்வதேச ஊடகங்கள், ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை ஆகியவற்றால் நடத்தப்பட்ட பல சுயாதீன விசாரணைகளுக்குப் பிறகு இக்கொலையை விசாரிக்க அனுமதி வந்தது.
இஸ்ரேலிய படைகளால் அபு அக்லே வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு மருத்துவ உதவி மறுக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. ஆயினும்
நவம்பர் 2022 இல், அமெரிக்க நீதித்துறை இக்கொலை பற்றிய விசாரணையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையை இஸ்ரேல் கண்டித்ததுடன் ஒத்துழைக்க மறுத்தது.
பத்திரிக்கையாளர் அபு அக்லே கொலைக்கான பொறுப்பேற்றுள்ள இஸ்ரேலிய சிப்பாய் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. அவர் இறந்த விதம் மற்றும் அவரது இறுதிச் சடங்கின் வன்முறை இடையூறு ஆகியவை இஸ்ரேலுக்கு பரவலான சர்வதேச கண்டனத்தை ஏற்படுத்தியது.
இறுதிச் சடங்கில் பல்லாயிரம் மக்கள்:
அவரது இறுதிச் சடங்கில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொடிகளை ஏந்தியபடியும், தேசியவாதப் பாடல்களைப் பாடியபடியும் கலந்து கொண்டனர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜெருசலேமில் நடந்த மிகப்பெரிய பாலஸ்தீனிய இறுதிச் சடங்கு இது என்று நம்பப்படுகிறது.
ஆனாலும் அவரது இறுதிச் சடங்கின் போது இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகள் கிழக்கு ஜெருசலேமில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் கையெறி குண்டுகளால் தாக்கினர்.
மருத்துவமனையையே தாக்கிய இஸ்ரேலிய பொலிசார் நோயாளிகளை தாக்கினர், தள்ளி மிதித்து கையெறி குண்டுகளை வீசினர். மருத்துவ ஊழியர்களை காயப்படுத்தி, தீக்காயங்களை உருவாக்கினர்.
தற்போதய போர்ச்சூழலில் 26 அக்டோபர் 2023 அன்று, அவர் கொல்லப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் இஸ்ரேலிய இராணுவத்தால் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டது.
காசாவில் கொலையான ஊடகர்கள்:
காசா பகுதிபோரின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அக்டோபர் 7இல் முகமது அல்-சால்ஹி, நான்காவது அதிகாரச் செய்தி நிறுவனத்திற்கான புகைப்படப் பத்திரிக்கையாளர், மத்திய காசாவில் உள்ள பாலஸ்தீனிய அகதிகள் முகாமுக்கு அருகாமையில் சுடப்பட்டார்.
அதே நாளில் முகமது ஜார்கோன், ஸ்மார்ட் மீடியாவுடன் இணைந்த ஒரு பத்திரிகையாளர், ரஃபாவின் கிழக்கே உள்ள ஒரு பகுதியில் மோதல் குறித்து செய்தி வெளியிட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அக்டோபர் 7 இல் இப்ராஹிம் முகமது லாஃபி, ஐன் மீடியாவின் புகைப்படக் கலைஞர், ஈரெஸ் கடக்கும் இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அசாத் ஷாம்லாக், அக்டோபர் 8இல் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், தெற்கு காசாவில் ஷேக் இஜ்லினில் உள்ள அவர்களது வீட்டில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டார்.
அக்டோபர். 10இல் ஹிஷாம் அல்ன்வாஜா, கபார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரும் ரிமாலில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே நாளில் முகமது சோப், கபார் நியூஸ் ஏஜென்சியின் புகைப்படக் கலைஞரும் ரிமாலில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் இன்னும் நீளமானது. இதுவரை 36 ஊடகர்கள் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.