கதைகள்

“எலிசோறு” …. சிறுகதை – 40 …. அண்டனூர் சுரா.

தாது காலத்துப் பஞ்சம் போல இன்னொரு பஞ்சம். வயற்காடுகள் பஞ்சப் பராரியாகக் கேட்பாரற்றுக் காய்ந்து கிடந்தன. வயிற்று இரைக்காக ஈரும் பேனுமாக வெள்ளி முளைக்கும் நேரத்திற்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பியிருந்தார்கள் பஞ்சனும் அவர் மகன் கூத்தனும். எலி இரை பொறுக்க கிளம்பும் நேரத்திற்குள் அண்டனிவயற்காட்டைத் தொட்டுவிட்டால் கூட ரெண்டு எலிகளைப் பிடிக்கலாம் என்பது பஞ்சனின் பசி கணக்கு. அவருக்கு முன்னால் எந்த இரையையும் விரட்டிப் பிடித்துவிடும் துரை, முன்னத்துக்கால் பாய்ச்சலில் சென்றது.

துரையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தார் பஞ்சன். அவர் பின்னே மகன் கூத்தன் நிழலைப் போல ஓடி வந்தான். அவனது நடைக்குக் கால்சட்டை அவிழவும் அதை அருணாக்கொடியில் சுற்றிக்கொள்ளவுமாக நடந்தான். மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிச் சீறிப்பாயும் தண்ணீர் வேகத்தில் அவனது நடை. சப்பிப்போட்ட பனங்கொட்டையைப் போலப் பரட்டைத் தலை. உருண்டை முகம். ஒரு கையில் மரத்தண்டால் செய்த கிடுக்கியும் மற்றொரு கையில் கவட்டைக் கம்பும் வைத்திருந்தான். பஞ்சன் தோளில் முன்பக்கமாக மண்வெட்டி வாலைப் போலத் தொங்கிக் கிடந்தது. கையில் கடப்பாறை வைத்திருந்தார்.

இன்றைக்குப் பத்து எலிகளையேனும் பிடித்திடணும், ஆசைப்பெருக்கு பாதி, பசி மூட்டம் மீதி. கூத்தன் நடையின் வேகமூடே மூச்சுமுட்டச் சொன்னான், ” அப்பா, எலி இருக்கிற வளைய எனக்குக் காட்டி மட்டும் விடு. அதை எப்படி நான் கிடுக்கிக்கட்டுறேனு பாரு” சொல்லியவனாய் அப்பனின் பின்னே தாவிக்குதித்து ஓடினான்.

அண்டனிவயற்காடு வந்திருந்தது.

ஊர் பஞ்சத்திற்குக் காரணம் இந்த வயற்காடுதான். பஞ்சத்தின் பரதேசம் வயற்காட்டிலும் தெரிந்தது. மனக்குளம், அண்டனிக்குளம் இரண்டும் தொண்டைக்குழியை நனைக்கப் பொட்டுத் தண்ணீரில்லாமல் வெடித்துக் காய்ந்துக் கிடந்தன. கொக்கு, நாரைகள் ஆலவட்டமடிக்கும் காட்டில் பிராந்தும் கழுகும் வானத்தில் வட்டங்கட்டின. பித்த வெடிப்புகளாக வெடித்துக்கிடந்த வயலுக்குள் இறங்கிய துரை ஒரு காலைத் தூக்கி ‘ஒண்ணுக்கு’ அடித்துவிட்டு, அதையொட்டிருந்த ஒரு வளையை நுகர்ந்து பார்த்தது. கோடை வெயிலுக்கு வயற்காடு கருகி, கடைசியாக அறுத்த நெற்கதிரின் அடிகட்டுகள் சாம்பலாகி, காற்றுக்குப் பறக்க, தூசிக்கட்ட இருந்தன. துரை ஒவ்வொரு வளையாக நுகர்ந்து பார்த்து கால்களால் சீய்த்து குரைத்தது.

வளைக்குள் எலி இருக்கிறதா பாம்பு இருக்கிறதா எனத் தோட்டிற்குள் நாசியை வைத்து நாயைப் போலவே நுகர்ந்து பார்த்தார் பஞ்சன். எலி, நண்டு, பாம்பு வாடை அவருக்கு அத்துப்படி. எலி இருக்கும் வளை கவுல் அடிக்கும். வளையில் ஒரு வாடையும் வராதிருந்தது. ஆனாலும் மண்வெட்டியால் வளையைக் கழிக்கத் தொடங்கினார். துரை வளையைச் சுற்றி அலைபாய்ந்தது. கூத்தன் கவட்டைக் கம்பை வைத்துக்கொண்டு தயாராக நின்றான். வளையைத் தோண்டி முடிக்கையில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. துரை, தன் அகோர முகத்தைக் காட்டிக் குரைத்தது.

வந்திருக்கிற பஞ்சத்திற்குப் பாம்பே கிடைத்தாலும் தலை, குடலை வெட்டி எறிந்துவிட்டுத் தின்றுவிடலாம் போலிருந்தது. எதிலெல்லாம் விஷமிருக்கிறது எனத் தெரிந்துகொண்டால் போதும். எதிலிலும் பசியாறலாம். பாம்பின் பல்லிலிருக்கும் விஷம் எலியின் குடலில் உண்டு,…எனத் தனக்குத்தானே

பேசிக்கொண்டவராய் மறுவரப்பில் கிடந்த எலி புழுக்கைகளைப் பார்த்துவிட்டு அந்த வளையைக் குடையத் தொடங்கினார். அந்த வளையிலும் எலி இல்லை. ஏமாற்றமே இருந்தது.

” என்னப்பா நீ. என்னை எலிபிடிக்க அழெச்சிக்கிட்டு வந்தீயா, இல்லே தோட்டைக் காட்டி ஏமாத்த வந்தியா?” ஏகாந்த முகமாகக் கேட்டான் கூத்தன். அவனது கேள்விக்கு ஒத்தூதுவதைப் போல துரை ஒரு குரை குரைத்தது.

” நாம வாரத தெரிஞ்சுக்கிட்டு எலிக எங்கேயோபோய் மறைஞ்சிருச்சு” என்றார் பஞ்சன். “எங்கே மறைஞ்சிருக்கப் போவுது. வளைய விட்டா தோடு. தோட்ட விட்டா பொந்து ” என்றான் கூத்தன். ” எலி வளை தனி வளை. தோடும் பொந்தும் பாம்புக்காகும். எலிக்காவாது” என்றார் பஞ்சன். இருவரும் வயற்தண்டில் நடந்தபடி வளைகளைத் தேடினார்கள். ” அப்பா இங்கேயொரு வளை இருக்கு” உரக்கக் குரல் கொடுத்தான் கூத்தன்.

பஞ்சனுக்கு அவரது பொஞ்சாதி பஞ்சாலை நினைவுக்கு வந்தாள். இன்னேரத்திற்கு அவள் அரசலளவு சாமான்களை அரைத்து, கூட்டிவைத்து காத்துக்கொண்டிருப்பாள். ஒரு எலியையேனும் பிடிக்காமல் வெறுங்கையோடு போனால் வறுத்துக்கொட்டிவிடுவாள், என நெஞ்சுக்குள் உருட்டியவராய் அடுத்தடுத்த வயலுக்குள் இறங்கி வளைகளைக் கழித்தார். ஒரு வளை நீண்டுகொண்டே போனது. மண்ணின் அசைவு எதையோ சொன்னது. துரை எதையோ கண்டுவிட்டதைப் போல உக்கிரமாகக் குரைத்தது. வேகமாக வெட்டிக் கழித்தார். அதற்குள் ஒரு பாம்பு ஊர முடியாமல் ஊர்ந்து சுருண்டிருந்தது.

பாம்பை அடிக்கக் கம்பை ஓங்கினார் பஞ்சன். “வேண்டாம்ப்பா, பயமா இருக்கு” என்றான் கூத்தன். “நம்ம எலிய தின்னு செரிச்சது இந்தப் பாம்பு தாண்டா” என அடிக்கப் பாய்ந்தவர், என்ன பாம்பென்று பார்த்தார். புடையன். பாவம், அதன் மீது இரக்கம் காட்டியவராய் மண்வெட்டியால் ஒரு கொட்டு மண்ணை வெட்டி பாம்பின் மீது போட்டுவிட்டு அடுத்தடுத்த வளைகளைத் தேடினார்.

அவருக்குள் வயிறொன்று இருப்பது நினைவுக்கு வந்தது. அப்படியாக அவர் நினைத்த கணத்தில், “அப்பா வசிரு குமையுதுப்பா, போயிடலாம்ப்பா” என்றான் மகன் கூத்தன். தன் பசியைப் பொறுப்பதைப் போல மகனின் பசியைப் பொறுப்பவரல்ல பஞ்சன். அவன் சொன்ன வேகத்தில் நடையை வீட்டை நோக்கித் திருப்பினார். போகும் வழியில் ஒரு வளை இருந்தது.

” இதுதே கடைசி வளை. இதுக்குள்ளே எலி இருந்தா போச்சு. இல்லே கிளம்பிட வேண்டியதுதே ” என்றவராய் வளையைக் குடைந்தார். ஒரு தேள் குட்டிகள் போட்டு பெருங்கொத்தாக இருந்தன.

” இன்னைக்கு நமக்கு நாள் சரியில்லை” என்றவாறு மண்வெட்டியைத் தோளில் தொங்கவிட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.

வயற்காட்டிலிருந்து ஒழுங்கை பிரியுமிடத்தில் ஒரு புதர் இருந்தது. அந்தப் புதருக்குள் ஒரு காட்டெலி நுழைவதைப் பார்த்தான், கூத்தன். அவன் பார்த்த சடுதியில் துரையும் பார்த்திருந்தது. எலியைத் துரை விரட்ட, எலி வளைக்குள் நுழைந்துகொண்டது.

பஞ்சன் தலையைச் சிலிப்பிக்கொண்டார். “ஆம், இன்னைக்கு நல்ல வேட்டெதே” தொடையைத் தட்டிக்கொண்டார். கூத்தனை ஓரிடத்தில் நிறுத்தி, எப்படி இந்த எலியைப் பிடிக்கவேண்டுமெனச் சொல்லிக்கொடுத்து நிறுத்தினார். அவனது கையில் கவட்டைக் கம்பு இருந்தது. எலி அவசரக் காலத்தில் வளையிலிருந்து வெளியேற ‘பொடைப்பான்’ வைத்திருக்கும். வளையின் பின்வாசல் இது. குறுகலாக வளை தோண்டி அந்தத் துளை தெரியாதபடிக்கு மண்ணைக் கொண்டு மூடியிருக்கும். அந்தத் துளையை கண்டுவிட்டால் எப்படியும் எலியைப் பிடித்துவிடலாம்.

வளையின் முகப்பை அடைப்பதற்கு முன்பாக பொடைப்பானைத் தேடினார். வளையைச் சுற்றிலும் நடக்கையில் மண் நேரத்தில் அமுக்கு வாங்கியது.

“ எலே கூத்தா, இதான்டா பொடைப்பான்” என்றவராய், அந்த இடத்தை மண்வெட்டியால் அடையாளப்படுத்திவிட்டு, வளையின் முகப்பிற்கு ஓடி வந்தார். ஒரு கொட்டு மண்ணால் முகப்பை மூடி வளையின் பொடைப்பானைப் பாரையால் குடைந்தார்.

வளை ஒரு குகையைப் போல சென்றது. வெட்டிக்கொண்டே இருந்தார், பஞ்சன். ஒரு வெட்டில் அவர் மிரண்டுதான் போனார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் தங்கக் குவியலாக நெல்மணிகள் இருந்தன. “அடேய் கூத்தா, இன்னைக்கு நாம நரி மொகத்துல முழிச்சிருக்கோம்டா” என்றவராய் ஒரு குதி குதித்துக்கொண்டவர், நெல்மணிகளை அள்ளி முத்தம் கொடுத்தார். நெல்லின் கருக்குவாசனை நாசியைத் துளைத்தது.

பஞ்சன் தலையில் கட்டியிருந்த உருமாக்கட்டை அவிழ்த்து, தரையில் விரித்து இரண்டு கைகளால் நெல்மணிகளை அள்ளி நெற்றிக்குக் கொடுத்து, வேட்டியில் கொட்டினார். துரை நெல்லை ஒரு முறை நுகர்ந்து பார்த்துவிட்டு, வாலை ஆட்டி, குலாவியது. வளையின் பின்புறத்தைத் தோண்டத் தோண்ட நெல்லாக வந்தது. அவ்வளவு நெல்லையும் முட்டி காலிட்டு வேகமாக அள்ளியவர், வேட்டியில் அம்பாரம் போலக் குவித்தார்.

மொத்த நெல்லையும் கூட்டி அள்ளியவர், வளையைச் சரிக்கத் தொடங்கினார். எலியின் மீசைகள் வெளியே எட்டிப் பார்த்தன. நெடுஞ்சாண்கிடையாக படுத்து எலியைப் பார்த்தார். எலி கண்களை உருட்டித் திரட்டிப் பார்த்தது. ” கூத்தா, அந்தோதண்டி எலிடா. உன்னத்தான்டா தேடுது ” என்றதும் அவன் குதூகலித்தான். வளையின் முன்னே ஓடிவந்தான். ” இதெ நான் பிடிக்கிறேன்ப்பா” என்றவன் தரையில் படுத்து, கிடுக்கியை மெல்ல வளைக்குள் நுழைத்து, தலையைக் கோர்த்து வெளியே இழுத்தான். துரை அவன்மீது தாவல் போட்டது. கீச், கீச் என்ற எலி, கால்களால் அடித்துக்கொண்டு வாலால் அதன் தலையைத் தடவிக்கொடுத்தது. ” நீ பொழச்சிக்குவேடா கூத்தா” என்ற பஞ்சன் மகனின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார்.

கிடுக்கிப் பிடியோடு வீட்டுக்குச் சென்றான் கூத்தன். எலி நான்கு கால்களையும் அடித்துக்கொண்டது. அவனுக்கும் முன்னே அவனது துரை சென்று, இன்றைய வேட்டையைக் குரைத்தும் குலாவியும் எஜமானியிடம் சொன்னது.

எஜமானி பஞ்சாலை, துரையின் தலையைத் தடவிக்கொடுத்தாள். ஒழுங்கை தடத்தில் தலையில் பெருமுடிச்சோடு வந்துகொண்டிருந்த பஞ்சனிடம், ” ஏன்ங்க நெல்லுமா கெடச்சது, துரை புதுசா குலையுதே” எனக் கேட்டாள். ” நான் சொல்றதுக்கு முன்னே துரை சொல்லிருச்சா” என்றவர் முகம் பூரித்தவராய் தலையிலிருந்த பொதியைக் கீழே இறக்கி, முடிச்சை அவிழ்த்தார்.

ஒரு மரக்கால் அளவிற்கு நெல் இருந்தது. நெல்லை உள்ளங்கையால் அள்ளி ஓரிறுக்கு இறுக்கிப் பார்த்தவள், ” அய்ய்…எவ்ளோ நெல்லு தங்கமணியாட்டம்”, ஒரு நெல்லை எடுத்து அரிசிப் பற்களால் நறுக்கென கடித்து “பதமா இருக்குங்க” என்றவள் பெருவாய் பிளந்தாள். பின்னால், கிடுக்கியோடு ஓடிவந்தான் கூத்தன்.

அவளது பார்வை மகனின் மீது குவிந்தது.

” இன்னைக்கு செம விருந்து” நாக்கால் சொட்டாரம் போட்டான். இந்த வேட்டையில் எனக்கும் பங்குண்டு, எனச் சொல்வதைப்போல துரை குரைத்தது.

எலியைக் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுவித்து, கழுத்தைப் பிடித்து தூக்கினாள். இதைக் கொன்று அறிந்து ஆய்ந்தால் கட்டோரா சட்டியில் அரைச்சட்டி தேறும், என மனதிற்குள் அளந்தவளாய் எலியின் முகத்தைப் பார்த்தாள். எலியின் பற்கள் கெஞ்சுவதைப்போல வெளியே துருத்திக்கொண்டிருந்தன.

” இந்த நெல்லு எங்கே கிடைச்சது. இந்த எலிய எங்கே பிடிச்சீங்க? ” கேட்டாள் பஞ்சாலை.

” ரெண்டுமே ஒரு வளையிலேதே ” என்றான் கூத்தன். இதை அவன் சொல்கையில் அவனது தலை ஆனந்தமயமாக ஆட்டம் கண்டது. மகன் சொன்னதை ஆமோதிப்பதைப் போலச் சிரித்தும் தலையாட்டியும் வைத்தார் பஞ்சன்.

பஞ்சாலையின் முகம் மாறி இறுக்கம் கண்டது. அவளது மனக்கிடங்கில் ஒரு மாற்றம். அவளது கண்கள் இடுங்கி எலியின் முகத்தைப் பார்த்தன. எலியின் தவிப்பும் பரிதவிப்பும் அவளது இதயத்தை இரங்க வைத்தது.

” வேண்டாம்ங்க இந்த எலி. விட்டுருவோம். நம்ம வயித்துக்குச் சோறு கொடுத்த சாமிங்க இது. இதைக் கொன்னுத் திங்கிறது பாவம்ங்க” என்றவள் புருசனின் கண்களைத் துருவிப் பார்த்தாள். அவர் கூத்தனின் பக்கமாகத் திரும்பினார். அவன், என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றவன், எலியைச் சற்றுநேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டு, ஒரு சிரிப்பு சிரித்து வைத்தான்.

பஞ்சாலை எலியைப் பிடித்திருந்த பிடியைச் சற்றே தளர்த்தி தரையில் வைத்தாள். எலி, கீச்சிட்டுக்கொண்டு துரையின் காலடியையொட்டி ஓடியது. துரை, அந்த எலியை விரட்டவில்லை, பிடிக்கவில்லை. வாலை ஆட்டியபடி நின்றுகொண்டிருந்தது.

Loading

One Comment

  1. இது மாதிரி எளிய மனிதர்கள் தான் தனக்கு போதும் என்ற மனம் கொண்டவர்கள். வயிற்றுக்கு போக வேற எதுக்கும் ஆசை படாதவர்கள். அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.