கட்டுரைகள்

அரபு நாடுகளின் இஸ்ரேலுடனான ஒப்பந்தங்கள்: பாலஸ்தீனத்தை சிதைக்கும் அகண்ட இஸ்ரேல் திட்டம்! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(அரபு நாடுகளான எகிப்துஜோர்டான்பின்னர் அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலுடன் செய்த அமைதி ஒப்பந்தங்களால்சமாதானத்தை பேணுவதாக இஸ்ரேல் வெளி உலகிற்கு காட்டிக் கொண்டாலும்சிறிது சிறிதாக பாலஸ்தீன தாயகம் சிதைக்கப்பட்டது என்பதே உண்மையாகும்இந்த உடன்படிக்கைகளின் மூலமே அகண்ட இஸ்ரேல் திட்டத்தை விரிவாக்கி வருகிறது)
நீண்டகால பகைமை கொண்ட பாலஸ்தீன – இஸ்ரேல் முரண்பாடு மேலும் வலுவாகி, தற்போது
பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, தீவிரமான முற்றுகைப் போர் காசாவில் நடைபெறுகிறது. பாலஸ்தீனத்தை சிதைத்து அகண்ட இஸ்ரேல் திட்டத்தை விரிவுபடுத்த இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த அகண்ட இஸ்ரேல் திட்டத்தை விரிவாக்கத்தில் அரபு நாடுகள் இஸ்ரேலுடன் செய்த அமைதி ஒப்பந்தங்களால், பாலஸ்தீன தாயகம் பறிபோகிறதா என்ற கருத்தும் வெளியாகி உள்ளது. உண்மையில் அரபு நாடுகளுடன் சமாதானத்தை பேணுவதாக இஸ்ரேல் வெளி உலகிற்கு காட்டிக் கொண்டாலும், சிறிது சிறிதாக பாலஸ்தீன தாயகம் சிதைக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.
 
எகிப்து – இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம்:
1977 ஆம் ஆண்டு எகிப்து ஜனாதிபதி அன்வர் சதாத் இஸ்ரேலுக்கு விஜயம் செய்த 16 மாதங்களுக்குப் பின்னர், தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 26 மார்ச் 1979இல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக பரஸ்பர அங்கீகாரம், சூயஸ் கால்வாய் வழியாக இஸ்ரேலியக் கப்பல்களை இலவசமாகச் செல்வதற்கும், 1967ல் எகிப்தால் தடைசெய்யப்பட்ட திரான் மற்றும் அகாபா வளைகுடாவை சர்வதேச நீர்வழிப் பாதைகளாக திறந்து அங்கீகரிப்பதற்கும் வழிகோலப்பட்டது.
1948 அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு இருந்த போர் நிலையை நிறுத்துதல், இருதரப்பு உறவுகளை இயல்பாக்குதல் மற்றும் இஸ்ரேல் கைப்பற்றிய சினாய் தீபகற்பத்தில் இருந்து தனது ஆயுதப்படைகளை இஸ்ரேல் திரும்பப் பெறுதல்.
1967 இல் ஆறு நாள் போரின் போது. எகிப்து சினாய் தீபகற்பத்தை இராணுவ மயமாக்கப்பட்டதை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டது. இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் பிரதேசங்களில் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு முழு சுயாட்சியை நிறுவ இந்த ஒப்பந்தம் வரையப்பட்டது.
ஜோர்டான் – இஸ்ரேல் சமாதான உடன்படிக்கை:
எகிப்துக்குப் பிறகு இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டாவது அரபு நாடு ஜோர்டான் ஆகும். 26 அக்டோபர் 1994 இல், ஜோர்டானும் இஸ்ரேலும் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
இஸ்ரேல் பிரதம மந்திரி ராபின் மற்றும் ஜோர்டான் பிரதம மந்திரி அப்தெல்சலாம் அல்-மஜாலி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இஸ்ரேல் ஜனாதிபதி எஸர் வெய்ஸ்மான் ஜோர்டான் மன்னர் ஹுசைனுடன் கைகுலுக்கினர். அன்றைய அமெரிக்க தலைவர் பில் கிளின்டன், வெளியுறவுத்துறை செயலர் வாரன் கிறிஸ்டோபருடன் கலந்து கொண்டனர்.
முதலில் 1987 இல் இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி ஷிமோன் பெரஸ் மற்றும் ஜோர்டான் மன்னர் ஹுசைன் ஆகியோர் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு இரகசியமாக முயற்சி செய்தனர். அதில் இஸ்ரேல் மேற்குக் கரையை ஜோர்டானிடம் ஒப்படைக்க முனைந்தது. மத்திய கிழக்கு அமைதி மாநாட்டிற்கான கட்டமைப்பை வரையறுக்கும் ஒப்பந்தத்தில் இரு அரசும் கையெழுத்திட்டன.
இதனால் இஸ்ரேலுக்கும் பிஎல்ஓவிற்கும் இடையே அமைதியான ஒஸ்லோ தீர்மானத்திற்கு ஆதரவாக மேற்குக் கரை மீதான தனது உரிமையை இஸ்ரேல் கைவிட்டது. இதற்காக 1994 இல் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் சிரிய அதிபர் ஹபீஸ் அல்-அசாத் ஆகியோருடன் ஹுசைன் ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மன்னர் ஹுசைனை சமாதான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடவும் அழுத்தம் கொடுத்தார் என்பதும் உண்மையே. அத்துடன் ஜோர்டானின் கடன்கள் மன்னிக்கப்படும் என்று அவருக்கு உறுதியளித்தார்.
இம்முயற்சிகளின் வெற்றியினால், ஜோர்டான் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இஸ்ரேலும் ஜோர்டானும் உத்தியோகபூர்வ பகைமை நிலையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாகவும், இரத்தம் சிந்துவதற்கும் துயரத்திற்கும்்ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்காக பேச்சுவார்த்தைகளை தொடங்கும் என்றும் பிரகடனம் செய்தனர்.
இந்த ஒப்பந்தத்தை எகிப்து வரவேற்றது, ஆயினும் சிரியா அதை புறக்கணித்தது. லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லா உடன்படிக்கையை முழுமையாக எதிர்த்தது.
இஸ்ரேல்– ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைதி ஒப்பந்தம்:
2020 செப்டம்பரில் இஸ்ரேல்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. முன்பு 1979ல் எகிப்தும், 1994ல் ஜோர்டானும் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. அக்காலத்தில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து பகைமை போக்கையே கொண்டிருந்தது.
இஸ்ரேல் 1948ம் ஆண்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டதன் பின், அப்பிராந்தியத்தில் உள்ள பாலஸ்தீனம், லெபனான், எகிப்து, ஜோர்டான், ஈராக் உள்ளிட்ட அரபு நாடுகள் இஸ்ரேலை தனி நாடாக ஏற்கவில்லை. இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலை எதிரி நாடாக, நீண்டகால விரோதிகளாக இருந்து வந்த இவ்விரு நாடுகளுக்கும் இடையே, சமரச முயற்சியால் 2020இல் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன் மூலம், இருநாடுகளுக்கும் இடையே தூதரக, வர்த்தக உறவுகள் ஏற்பட்டன. இதன் பின்னர், பாலஸ்தீனத்தை ஒட்டியுள்ள மேற்கு கரை பகுதியை தனது நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடுவதாக இஸ்ரேல் அறிவித்தது.
ஈரானை தனிமைப்படுத்தும் திட்டம்:
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் நீண்டகால எதிரியான ஈரானை தனிமைப்படுத்த தனது நட்பு நாடுகளை அமெரிக்கா ஓரணியில் திரட்ட இன்னமும் முயற்சிக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஈரானின் பலம் குறைய வாய்புள்ளதாக ஊகிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்கு ஈரான், துருக்கி, பாலஸ்தீனம் எதிர்ப்பை தெரிவித்தன. இஸ்ரேலுடனான எந்தவொரு அரபு நாடும் இஸ்ரேலுடன் செய்து கொள்ளும் எந்த ஒப்பந்தமும் இறுதியில் அந்த நாட்டுக்கே அச்சுறுத்தலாக அமையும். இஸ்ரேலை அங்கீகரிக்கும் அரபு நாடுகளுக்கு அழிவே மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் அரபு நாடுகளின் உறவை நாடியதன் மூல காரணம், ஈரானுக்கு அருகில் ஒரு இராணுவ மற்றும் பொருளாதார மையம் ஒன்றை அமெரிக்கா சார்பாக அமைப்பதேயாகும். இதன்மூலம் அரபு நாட்டை ஈரானுக்கு எதிரான ஒரு தளமாக பயன்படுத்த முயல்வார்கள்.
இந்த விரிவாக்கத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு அகண்ட இஸ்ரேலை உருவாக்குவது தான்.
2020 செப்டம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதற்கு அரபு எமிரேட்ஸ், பஹ்ரைனியர்கள் இத்திட்டத்திற்கான உதிரிகளாக பயன்படுத்தப்பட்டனர்.
இஸ்ரேலுடனான இந்த ஒப்பந்தங்களில் சவூதி அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடுகளான எமிரேட்ஸும் பஹ்ரைனும் கையெழுத்திட்டிருக்கின்றன. இதன் போது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாஷிங்டனுக்கான சவூதி தூதராக பணியாற்றிய இளவரசர் பந்தர் பின் சுல்தான், பலஸ்தீனிய தலைவர்கள் இஸ்ரேலிய ஆட்சியுடன் தீர்வு காணும் வாய்ப்புகளை தவற விட்டு, தொடர்ந்து தோல்வி கண்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
பாலஸ்தீன – இஸ்ரேல் ஒஸ்லோ உடன்படிக்கை தோல்வி:
பாலஸ்தீனிய விடுதலை (PLO) அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 1993 இல் ஒஸ்லோவில் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாலஸ்தீனிய அதிகார சபை உருவாகியது. ஆயினும் ஒஸ்லோ சமாதான முன்னெடுப்பு உரிய முறையில் செயல்படுத்தப்படாததால் யூத குடியேற்றங்களின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்தத் தவறி விட்டமை பின்னர் நிரூபிக்கப்பட்டது.
இந்த ஒஸ்லோ உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த நாள் முதல் பாலஸ்தீனர்களுக்கு தோல்வியாகவே இருந்தது. ஏனெனில் இது ஒரு அரசியல் ஒப்பந்தம் அல்ல, ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் மாத்திரமேயாகும் என ஒஸ்லோ உடன்படிக்கையை வடிவமைத்த அபு மஸென், முன்னைய பாலஸ்தீனிய அதிகார சபையின் தலைவர் அறிவித்தார்.
பாலஸ்தீன பகுதியை ஆக்கிரமிக்கும் யூத தீவிரவாதிகள் தங்கள் மூதாதையர்கள் வசித்த நிலங்களுக்குத் திரும்புவதாகக் கூறுகின்றனர்.
அந்நிலம், அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பாலஸ்தீனர்க்கு சொந்தமானது. யூதர்கள் ஐரோப்பாவிலிருந்து இடம்பெயர்ந்து வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அந்நிலத்துக்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீனியர்கள் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள்.
சர்வதேச உலக சாட்சியத்துடன் உருவான ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் கூட இஸ்ரேல் அது அமைதியைப் பின்தொடரும் ஒரு ஆட்சி அல்ல என்பதை நிரூபித்து விட்டது. இதற்கு திட்டமிட்ட யூத குடியேற்றங்களின் விரிவாக்கமே முக்கிய காரணமாகும்.
பிரதமர் இட்ஷாக் ராபின் படுகொலை:
 
ஒஸ்லோ உடன்படிக்கையை உருவாக்கிய இஸ்ரேல் பிரதமர் இட்ஷாக் ராபினும் பலஸ்தீன் விடுதலை இயக்க தலைவர் யாஸிர் அரபாத்தும் மரணித்ததோடு ஒஸ்லோ உடன்படிக்கையும் உயிரிழந்து விட்டதாகவே கருதப்படுகிறது.
யூத இனவாத வன்முறைக்கு ஒஸ்லோ உடன்படிக்கையை உருவாக்கிய இஸ்ரேல் பிரதமர் ராபின் 1995 இல் ஒரு இஸ்ரேலிய தீவிர தேசியவாதியால் படுகொலை செய்யப்பட்டார்.
2004இல் அரபாத்தின் மரணம் இஸ்ரேலிய உளவு அமைப்பால் நஞ்சூட்டப்பட்டதால் ஏற்பட்டது என்றும் சிலர் குற்றம் சாட்டினர்.
சியோனிச இயக்கத்தின் பாரிய பலத்தின் மூலம் அச்சுறுத்தி காரியம் சாதிக்கும் வகையில் பாலஸ்தீன மண்ணை முழுமையாக அபகரிக்கின்றது.
இஸ்ரேல் மனித உரிமைகளையோ அல்லது சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளையோ மதிக்கும் ஒரு அரசல்ல, பலத்தைக் கொண்டு எதுவும் செய்யலாம் என்பதற்கு தற்போது நிகழும் காசா படுகொலைகள் சான்று பகர்கின்றது.
அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டான், பின்னர் அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலுடன் செய்த அமைதி ஒப்பந்தங்களால், சமாதானத்தை பேணுவதாக இஸ்ரேல் வெளி உலகிற்கு காட்டிக் கொண்டாலும், சிறிது சிறிதாக பாலஸ்தீன தாயகம் சிதைக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.