கட்டுரைகள்

எழுத்தும் வாழ்க்கையும்! …. ( இரண்டாம் பாகம் ) …. அங்கம் – 83 …. முருகபூபதி.

கூகுளை ( Google ) கண்டுபிடித்தவர்களுக்கு நன்றி சொல்வோம் !

முருகபூபதி.

கல்லிலிருந்து கணினிக்கு வந்த தமிழின் அதிசயங்கள் தொடர்பாகவும், Download Journalism – Cut and Past Journalism பெருகும் காலத்தில் வாழ்கின்றோம் என்பது பற்றியும் கடந்த 82 ஆவது அங்கத்தில் சில செய்திகளை எழுதியிருந்தேன்.

இச்செய்தியானது முற்றுப்பெறாமல் தொடருகின்றமையால், மேலும் சில தகவல்களை இங்கே பதிவுசெய்கின்றேன்.

28 பெண் ஆளுமைகள் பற்றி கடந்த ஆண்டு அனைத்துலக பெண்கள் தினத்தின்போது ஒரு மின்னூலை ( யாதுமாகி ) வெளியிட்டிருந்தேன்.

இந்நூலை வாசகர்கள் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.

இதில் இடம்பெற்றிருந்த கட்டுரைகளும் ஏற்கனவே என்னால் எழுதப்பட்டு ஊடகங்களில் வெளியானவைதான்.

ஒரு நாள் கொழும்பிலிருந்து ஒரு பேராசிரியை என்னைத் தொடர்புகொண்டு, “ தன்னைப்பற்றி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையின் Word Document ஐ தனக்கு அனுப்பமுடியுமா..? “ எனக்கேட்டிருந்தார்.

“ என்ன…? திடீரென்று கேட்கிறீர்கள்..? “ என வினா தொடுத்தேன்.

“ இங்கே ஒரு அமைப்பு என்னை பாராட்டி கௌரவித்து விருது வழங்கப்போகிறதாம். அதற்கு என்னைப்பற்றிய விரிவான குறிப்பு தேவைப்படுகிறதாம். உங்கள் பதிவு விரிவானது. காத்திரமானது. இயலுமானால் அனுப்புங்கள். “ என்றார்.

நானும் அனுப்பினேன். அதன்பிறகு என்ன நடந்தது? என்பது எனக்குத் தெரியாது.

மற்றும் ஒரு நாள் எனக்கு நெருக்கமான ஒரு சிரேஷ்ட பத்திரிகையாளர் தொடர்புகொண்டு, அவருக்கு நன்கு தெரிந்த ஒரு சட்டத்தரணிக்கு ஒரு தலைப்பில் பத்து நிமிடங்கள் பேசுவதற்கு ஒரு உரை தேவைப்படுகிறது. எழுதி அனுப்பமுடியுமா..? எனக்கேட்டு, தலைப்பினையும் தந்தார். கேட்டிருந்தவாறு எழுதி அனுப்பினேன். அதன் பின்னர் என்ன நடந்தது ? என்பது எனக்குத் தெரியாது.

மற்றும் ஒருநாள் கிழக்கிலங்கையில் ஆசிரியையாக பணியாற்றும் வளர்ந்துவரும் புதிய தலைமுறை எழுத்தாளரான ஒரு யுவதி தொடர்புகொண்டு, கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை ஒன்றை எனக்கு அனுப்பி, அதற்கு நயப்புரை எழுதி அனுப்பமுடியுமா..? எனக்கேட்டார்.

“ எதற்கு..? “ எனக்கேட்டேன்.

“ தங்கள் பிரதேச தமிழ்த்தின விழா போட்டி நடக்கவிருக்கிறது. குறிப்பிட்ட நயப்புரையை ஆதாரமாக வைத்து மாணவர்களுக்கு பேச்சு தயாரித்து கொடுக்கவேண்டும் “ என்றார்.

அவர் கேட்டவாறு அந்த நயப்புரையை எழுதி அனுப்பினேன்.

அதன்பிறகு என்ன நடந்தது ? என்பது எனக்குத் தெரியாது.

90 ஆண்டுகளை கடந்திருக்கும் இலங்கையின் பிரபல பத்திரிகையில் பணியாற்றிய ஒரு பெண் ஊடகவியலாளர் ஒரு நாள் நடு இரவில் ( அப்போது நேரம் நடுச்சாமம் 2-00 மணி ) தொலைபேசியில் தொடர்புகொண்டு, “ சேர்… 90 ஆண்டுகளை முன்னிட்டு, எங்கள் பத்திரிகை ஒரு விசேட இணைப்பினை தயாரிக்கிறது. அதன் பயணத்தில் இலக்கியத்திற்கான வகிபாகம் பற்றி ஒரு கட்டுரையை தாமதிக்காமல் அனுப்ப முடியுமா..? காத்திருக்கின்றேன். பக்கம் வடிவமைக்கவேண்டும். “ என்றார்.

அந்த நடுநிசியில் படுக்கையைவிட்டு எழுந்து, ஒரு தேநீர் தயாரித்து அருந்திக்கொண்டே அவர் கேட்டிருந்தவாறு ஒரு கட்டுரையை எழுதி தாமதிக்காமல் அனுப்பினேன்.

அதற்கு என்ன நடந்தது? என்பது மாத்திரம் தெரிந்தது. குறிப்பிட்ட அந்த பெண் ஊடகவியலாளர், எனது ஆக்கம் வெளியான பத்திரிகையின் இணைப்பினை அடுத்த சிலநாட்களில் அனுப்பியிருந்தார்.

இது இவ்விதமிருக்க, நான் வதியும் அவுஸ்திரேலியாவிலும், கனடா உட்பட வேறும் சில நாடுகளிலிருந்தும் எப்போதாவது ஒரு தொலைபேசி அழைப்பு, கல்வெட்டு எழுதித்தருமாறு வரும். மறைந்தவரின் வாழ்க்கை குறிப்புகளை கேட்டுப்பெற்று எழுதிக்கொடுத்திருக்கின்றேன்.

இவை தவிர, எங்கள் எழுத்தாளர்கள் சிலர், தாங்கள் வெளியிடவிருக்கும் நூல்களுக்கு அணிந்துரையோ, முன்னுரையோ கேட்பார்கள். எழுதிக்கொடுத்து வருகின்றேன்.

அந்தப்புத்தகங்கள் எனக்கு வந்து சேருமா என்பதும் தெரியாது.

இந்த வேடிக்கைகளை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எனது மனைவி மாலதி, ( இவர் ஒரு தமிழ் சிறப்பு பட்டதாரி முன்னாள் ஆசிரியை ) எனக்கு “ சப்ளையர் – Supplier “ என்றும் ஒரு புனைபெயரைச் சூட்டியிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் வதியும் நண்பர்கள் எழுத்தாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தியும், வீடியோ ஒளிப்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து, எனது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி என்ற ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டனர்.

அதில் தனது கருத்துக்களை பதிவுசெய்த எனது மனைவி, என்னை “ ஒரு ரோபோ – Robot “ என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு குடும்பத்திற்குள்ளும் சில புனைபெயர்களை சுமந்துகொண்டுதான் இந்த எழுத்தூழியத்தில் ஈடுபடுகின்றேன்.

அண்மையில் ஒரு மனக்கணக்கு பார்த்தேன். வருடத்தில் எத்தனை ஆக்கங்கள் எழுதுகின்றேன் என்பதை அறியும் மனக்கணக்கு அது.

வாரத்தில் குறைந்தது எட்டு ஆக்கங்கங்கள். ஒரு வருடத்தில் ஏறக்குறைய நானூறு ( 400 )

இது இவ்விதமிருக்க கடந்த ஆண்டு கனடாவில் வதியும் ஒரு எழுத்தாளர் ( அவர் ஆவணப் படத்தயாரிப்பாளருமாவார் ) சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி மெய்நிகரில் நடந்தது. எனக்கும் அழைப்பும் இணைப்பும் கிடைத்தது. நான் பார்வையாளனாக மாத்திரமே இணைந்துகொண்டேன்.

தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு பெண்மணி ( அவர் முனைவர் ) குறிப்பிட்ட கனடா எழுத்தாளரை அறிமுகப்படுத்திப் பேசினார்.

அவரது உரையை கூர்ந்து செவிமடுத்தேன். அவ்வுரையில் இடம்பெற்ற வரிகள் அனைத்தையும் எங்கோ படித்தது போன்று இருந்தது.

பின்னர்தான் தேடிப்பார்த்தேன். அந்த எழுத்தாளர் பற்றி நான் முன்னர் எழுதியிருந்த கட்டுரையை அந்த முனைவர் அப்படியே ஒப்புவித்திருந்தார்.

நான் மறையும்போது, நான் மற்றவர்களைப்பற்றி எழுதி வைத்துள்ள எனது ஆக்கங்கள் எவருக்கேனும் வெட்டி ஒட்டிப் பேசுவதற்கும், தரவிறக்கம் செய்து உசாத்துணையாக பயன்படுத்திப் பேசுவதற்கும் உதவும் என்ற மனத்திருப்தியுடன் கண்களை மூடலாம்.

அடுத்து வெளிவரவிருக்கும் காலமும் கணங்களும் என்ற நூலில் யார் …. யார் … இடம்பெறுகிறார்கள் என்று முன்னைய 82 ஆவது அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.அந்த எண்ணிக்கையும் நூறைக் கடந்திருந்தது.

கடந்த சில வருடங்களாக உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் கலை, இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றி தொடர்ந்தும் எழுதி வருகின்றேன்.

இதுவரையில் நான் யார், யாரைப்பற்றி எழுதியிருக்கின்றேன் என்பதை இங்கே எனது மனப்பதிவிலிருந்து சொல்லிவிடுகின்றேன்.

1. எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் ‘ பூரணி ‘ என். கே. மகாலிங்கம் ( கனடா )

2. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ( கனடா )

3. ‘ தமிழர் தகவல் ‘ எஸ். திருச்செல்வம் ( கனடா )

4. ஆவணப்பட இயக்குநர் கனடா மூர்த்தி ( கனடா )

5. எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா ( கனடா )

6. நூலகர் என். செல்வராசா ( இங்கிலாந்து )

7. எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ( இங்கிலாந்து )

8. கலைஞர் ஆனந்தராணி பாலேந்திரா ( இங்கிலாந்து )

9. எழுத்தாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ( இங்கிலாந்து )

10. எழுத்தாளர் கலா ஶ்ரீரஞ்சன் – பூங்கோதை ( இங்கிலாந்து )

11. எழுத்தாளர் நவஜோதி யோகரட்ணம் ( இங்கிலாந்து )

12. இலக்கிய ஆவணப்பதிவாளர் பத்மநாப ஐயர் ( இங்கிலாந்து )

13. ஊடகர் ‘ மாலி ‘ மகாலிங்கசிவம் ( இங்கிலாந்து )

14. எழுத்தாளர் மு. நித்தியானந்தன் ( இங்கிலாந்து )

15. எழுத்தாளர் ரத்னசபாதி ஐயர் ( இங்கிலாந்து )

16. எழுத்தாளர் புஷ்பராணி ( பிரான்ஸ் )

17. ‘ ஈழநாடு ‘ எஸ். எஸ். குகநாதன் ( பிரான்ஸ் )

18. சமூகப்போராளி ராயப்பு அழகிரி ( பிரான்ஸ் )

19. எழுத்தாளர் ஷோபா சக்தி ( பிரான்ஸ் )

20. எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் ( பிரான்ஸ் )

21. எழுத்தாளர் தேவா ஹெரால்ட் ( ஜேர்மனி )

22. எழுத்தாளர் இராம. கண்ணபிரான் ( சிங்கப்பூர் )

வெளிநாடுகளில் மறைந்தவர்கள்

 

1. குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம் ( கனடா )

2. கமலா தம்பிராஜா ( கனடா )

3. தமிழ்ப்பிரியா ( ஜெர்மனி )

4. ‘ தேனீ ‘ ஜெமினி கெங்காதரன் ( ஜெர்மனி )

5. கலைஞர் ஏ. ரகுநாதன் ( பிரான்ஸ் )

6. தொலைக்காட்சி வானொலி ஊடகர் விமல் சொக்கநாதன் ( இங்கிலாந்து )

7. எழுத்தாளர் ‘ நடு ‘ கோமகன் ( பிரான்ஸ் )

8. கமலி பிரேம்ஜி ஞானசுந்தரன் ( கனடா )

9. சோவியத் அறிஞர் அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி ( ருஷ்யா )

10. கலாநிதி விதாலி ஃபுர்னிக்கா ( ருஷ்யா )

11. எழுத்தாளர் பீர்முகம்மது ( மலேசியா )

இலங்கையில்

1. ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்.

2. எழுத்தாளர் திருமதி ஞானலக்ஷமி ஞானசேகரன்.

3. பேராசிரியர் எம். ஏ. நுஃமான்.

4. பேராசிரியர் சி. மௌனகுரு.

5. பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு.

6. எழுத்தாளர் சி. கருணாகரன்.

7. எழுத்தாளர் – கலைஞர் த. கலாமணி.

8. எழுத்தாளர் க. சட்டநாதன்.

9. எழுத்தாளர் திக்குவல்லை கமால்.

10. எழுத்தாளர் கோகிலா மகேந்திரன்.

11. எழுத்தாளர் – அரசியல் ஆய்வாளர் செங்கதிரோன் கோபால கிருஷ்ணன்.

12. பேராசிரியர் செ. யோகராசா.

13. எழுத்தாளர் சி. வன்னியகுலம்.

14. எழுத்தாளர் – பத்திரிகையாளர் திருமதி அன்னலட்சுமி ராஜதுரை.

15. எழுத்தாளர் – பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம்.

16. எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோன்.

17. கவிஞர் மேமன்கவி.

18. எழுத்தாளர் உமா வரதராஜன்.

19. எழுத்தாளர் எதிர்மன்னசிங்கம்.

20. எழுத்தாளர் செ. குணரத்தினம்.

21. தன்னார்வத் தொண்டர் இன்பரூபன்.

22. எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா.

23. எழுத்தாளர் மல்லியப்பு திலகர்.

24. பத்திரிகையாளர் வித்தியாதரன்.

25. எழுத்தாளர் அ. யேசுராசா.

26. மொழிபெயர்ப்பாளர் மடுள்கிரியே விஜேரட்ண.

27. அறிவிப்பாளர் பி. எச். அப்துல்ஹமீத்.

28. எழுத்தாளர் ச. முருகானந்தன்.

29. எழுத்தாளர் எஸ். எல். எம். ஹனீபா.

30. எழுத்தாளர் புலோலியூர் இரத்தினவேலோன்.

31. கலைஞர் அந்தனி ஜீவா.

32. எழுத்தாளர் ( அமரர் ) கெக்கிராவ சகானா.

33. எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் ( அமரர் ) தேவா.

34. வானொலி ஊடகர் ( அமரர் ) வி. ஏ. திருஞானசுந்தரம்.

இவர்களின் பெயர்களுக்கு அருகில் எனது பெயரையும் பதிவுசெய்து கூகுளில் தேடினால் குறிப்பிட்ட கட்டுரை கிடைக்கும்.

 

கூகுளை கண்டுபிடித்தவர்களுக்கு நன்றி சொல்வோம்.

 

( தொடரும் )

letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.