கதைகள்
“நித்திரையும் எழுதலும்” …. சிறுகதை …. சங்கர சுப்பிரமணியன்.
மனிதனுக்கு நித்திரை எவ்வளவு அவசியமானது என்பதை நித்திரையின்றி அவதிப்படுபவர்களால் மட்டுமே உணரமுடியும். எப்படி முயன்றும் தூக்கம் வராது தவிக்கும்போது தூக்கமாத்திரையின் உதவியை நாடுகிறார்கள். அப்படி என்ன தூக்கத்தின் அவசியம் மனிதனுக்கு தேவைப்படுகிறது என்றவாறே எழில் கப்பன்
பாக் துவக்கத்தில் இருந்து அல்சூரை நோக்கி மகாத்மா காந்தி ரோட்டில் நடந்தபடி நண்பன் கதிரிடம் கேட்டான். மாலை நேரத்தில் உடற்பயிற்சிக்காகவும் பொழுது போக்காகவும் அல்லது கொஞ்சநேரம் வீட்டில் பிய்த்தல் புடுங்கலில் இருந்து தப்பிக்கவும் இந்த வாக்கிங் என்பது பயன்படுவதுபோல் இந்த நண்பர்களுக்கு எதற்காக பயன்படுகிறதோ தெரியவில்லை. ஆனால் தினமும் இவ்வளவு தூரம் நடந்து அலசூர் காளியம்மன் கோவில் தெருவில் இருக்கும் அவர்களின் வீட்டை அடையும்போது உண்டாகும் அந்த புத்துணர்ச்சியை அவர்களால் உணர முடிந்தது. இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத கதிர் ஒரு பட்டதாரியான எழில் ஏன் இப்படி சிறுபிள்ளைத் தனமாக கேள்வி கேட்கிறான் என்று நினைத்தாலும் அந்த எண்ணத்தை கட்டுப்படுத்திக் கொண்டான். இப்படியும் சில மனிதர்கள். என்னடா இந்த மாதிரி அசட்டுத்தனமான கேள்வியெல்லாம் கேட்கிறாய் என்று ஒருவேளை கதிர் கேட்டால் சும்மா கேட்டண்டா இதைப்போய் இவ்வளவு சீரியஸா எடுத்துட்டியா என்று கதிரை முட்டாளக்கி விடுவான். இப்படியும் சில நண்பர்கள். இப்போதெல்லாம் பறவைகள் பலவிதம் என்ற பாடலில் வருவதைப்போல நண்பர்களிலும் ஒவ்வொருவரும் ஒருவிதம். இவர்களின் நட்பு எவ்விதமகவும் இருந்துவிட்டு போகட்டும் நாம் கதைக்கு வருவோம். கேள்விகேட்ட எழிலிடம் உனக்கு எல்லாமே தெரிந்தும் இப்படி இடக்குத் தனமான கேள்வி கேட்பதெல்லாம் உனக்கு வேலயாப்போச்சசு. இருந்தாலும் சொல்றன். கொஞ்சநேரம் காலாற நடந்துவிட்டு வந்ததற்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்போது ஒருநாள் கடின உழைப்பின் பின் இரவின் நித்திரையில்தான் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கிடைக்கிறது என்பது பட்டதாரியான உனக்கு தெரியாதா என்றான். “அதெல்லாம் தெரியாமலில்லை. ஆனால் பக்கத்து வீட்டு மாமா பரந்தாமன் தூக்கமாத்திரை போட்டும் தூக்கம் வரவில்லை என்று பினாத்துறாரே?” “ஓ அவரா? எத்தனைபேர் தூக்கத்தை கெடுத்துருப்பார் அவர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதான் போலிருக்கு” “அப்படி என்ன மற்றவர்கள் தூக்கத்தை கெடுத்துவிட்டார்?” “சொல்றன் விவரமா கேள்” என்று சொல்லத்தொடங்கி விரிவாக சொன்னான் கதிர். உலகையே படைத்து படியளந்து காக்கிற கடவுளுக்கு எப்ப தூங்கவேண்டும் எப்ப எழவேண்டும் என்பது கூடவா தெரியாது? அவருக்கு இவர் என்னவோ பி. எ மாதிரி காலையில் எழுப்பி விடுவார். நாம் காலையில் எழவேண்டுமானால் கூட அலாரம் வைத்து அது அடிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நம்ம வீட்டில இருக்கிறவங்களுக்கு கூட தொந்தரவு கொடுக்க கூடாது என்று அலாரமடிப்பதை உடனே நிறுத்தி விடுகிறோம் என்றான் கதிர். கதிர் இவ்வாறு சொன்னதும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போட நினைப்பதே உனக்கு வழக்கம். இப்ப அதேபோலத்தான் சொல்லுற. அலாரத்த நீ நிறுத்துவதற்கும் பரந்தாம மாமா நித்திரையின்றி அவதிப் படுவதற்கும் என்னடா சம்பந்தம் என்றான் எழில். இருக்கு இருக்கு ரொம்பவே சம்பந்தம் இருக்கு. ஒன்னுமில்லாமலா சொல்றன். கடவுள எழுப்புகிறேன் பேர்வழியென்று மனிதர் நான்கு மணி அல்லது ஐந்து மணிக்கே பள்ளியெழச்சி பாடலை அரைமணி நேரத்துக்கும்மேல் அலறவிடுவார். இவருக்கு தூக்கம் வரவில்லை என்பதாலா அல்லது இவர் பக்தியை பலருக்கு பறைசாற்றவா என்பதுதான் புரியவில்லை. அது சரி நம்மை வழிநடத்தும் எம்பெருமான் கூறுகெட்டத்தனமாவா தூங்கிக் கொண்டிருப்பார்? அதுபோகட்டும் ஒன்றிரண்டு முறை அதட்டிச் சொன்னாலே முரண்டு பிடிக்கும் குழந்தைகூட சொன்ன பேச்சு கேட்கும். எம்பெருமானுக்கு “அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்” என்பதுபோல் அன்பால் பள்ளியெழுச்சி தினமும் பாடினாலும் ஒரு நாளாவது சமத்தா அவர் எழுந்திரிக்க கூடாதா? என்றான். கடவுள் எழுந்திருக்கட்டும் அல்ல எழுந்திருக்காமல் போகட்டும் உனக்கு என்னடா பிரச்சனை? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் கடவுளை எழுப்புகிறேன் பேர்வழி என்று காலையிலே பாடலைப்போட்டு எத்தனைபேரின் நித்திரையை கெடுத்திருப்பார்? எத்தனை சிறு குழந்தைகள் விழித்து எழுந்து அழுதிருக்கும். இரவு முழுதும் குழந்தையுடன் விழித்திருந்து தூங்கவைத்த தாய்மார்கள் சிறிதே கண்ணயர்ந்த வேளையில் பள்ளியெழுச்சி என்று பாடலைப்போட்டு எத்தனை தாய்மார்களின் நித்திரையை கெடுத்திருப்பார்? தேர்வுக்காக அதிகாலையில் எழுந்து படிக்கும் மாணவர்களின் மனநிலையையே இது பாதிக்காதா? நம்மவர்களுக்கு வெள்ளையர்களின் பழக்க வழக்கங்களில் மோகம் என்று வெள்ளையர்களின் நாடுகளில் இருந்துகொண்டே நம்மவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதில் தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒர்க் ஒய்ல் யு ஒர்க் பிளே ஒய்ல் யு பிளே என்ற பாடலை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டே நம் மக்கள்தான் சம்பந்தமில்லாமல் வேறொன்றை செய்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் போகட்டும், அமைதியான சூழலக்கெடுத்து எத்தனை நோயாளிகளின் தூக்கத்தை கெடுத்திருப்பார் இந்த மாமா என்று கூறி ஆதங்கப்பட்டான் கதிர். “சரிதான்” “என்ன சரிதான்? இந்த சரிதானுக்கு என்ன அர்த்தம்.” “இல்லடா, நீ சொல்றது சரியாத்தான் தெரியுது. ஆனால் இத நீ சொன்னால் மட்டும் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நாத்திகன் என்கிறார்களே?” நீ நினைக்கிறதும் சரிதான். பூமியை உருண்டை என்று சொன்னவரேயே முட்டாள் என்று சொன்ன உலகில் யார் யாரையும் எதுவும் சொல்லலாம் என்று வாழ்வதை எண்ணும்போது பெருமையாகத்தான் இருக்கு என்ற சொன்னபடியே நண்பர்கள் இருவரும் தத்தம் வீடு நோக்கி நடந்தனர். -சங்கர சுப்பிரமணியன்.