கதைகள்

நடுகைக்காரி! …. 60 …. ஏலையா க.முருகதாசன்.

சைக்கிளை உருட்டியபடி நடந்து வந்து கொண்டிருந்த மகளைக் கண்டதும் புஸ்பகலாவின் தாயார் இவள் ஏன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வருகிறாள் என்னவாக இருக்கும் காத்துக் கீத்து போயிருக்குமோ அதுவும் கொலிஜ் முடியமுந்தி நேர்த்தொடை வாறாளே என்று யோசித்தவாறு புஸ்பகலா முற்றத்தடிக்கு வரும்வரை காத்திருந்தவள்,அவள் தன்னருகில் வந்ததும் என் நேரத்தோடை வாறாய் அதுவும் சைக்கிளை உருட்டிக் கொண்டு வாறாய் என்ன நடந்தது என்று கேட்க பீரியட் வந்ததிட்டுது அதுதான் சீற்றிலை ஏறி இருந்து ஒடிக் கொண்டு வந்தால் யூனிபோமிலை பட்டாலும் படலாம் என்றதாலை சைக்கிளிலை ஏறி உட்கார்ந்து ஓடாமல் உருட்டிக் கொண்டு வந்தனான் என்கிறாள் புஸ்பகலா.

எங்கை நடந்தது கொலிஜ்ஜிலையோ இல்லாட்டில் என்று தாயார் இழுக்க, அம்மா! மங்களேஸ்வரிக்கு காய்ச்சல் என்று பார்க்கப் போறெனென்று சொன்னனானல்லோ அவளின்ரை வீட்டிலைதான் நடந்தது என்று புஸ்பகலா சொல்லி முடிக்க முந்தி மாவிட்டபுரக் கந்தா என்ரை வயித்திலை பாலை வார்த்திட்டாய் என்று தன்னையுமறியாமல் புஸ்பகலாவின் தாய் சொல்ல அம்மா ஏன் இப்படிச் சொல்கிறார் என அதிர்ச்சியடைந்தாள்.

பெண்களுக்க மாசாமாசம் வரும் இயற்கையான விடயம் இந்த மாசம் இரண்டு நாள் பிந்தி வந்திருக்கு அது உடம்பின் பிரச்சினை அதை அம்மா ஒரு பெரிய விடயமாக எடுத்தது ஏனென்று அவளுக்குப் புரிஞ்சுது.

குப்பையிலை கிடந்த மருந்துச் சிரட்டையிலிருந்து வந்த மருந்தின் மணந்தான் அம்மாவின் வேண்டாத நினைப்புக்கு காரணம் என்று நினைச்சுக் கொண்டே சைக்கிளை முற்றத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு படியேறி தனது அறைக்குள் போகிறாள் புஸ்பகலா.

உண்மைகளைப் பேசுகிற போது சொற்கள் தங்குதடையின்றி வரும்,கேள்விக்கு அலட்சியமாக தானாக பதில் வரும் அவை பயம் கலந்த வார்த்தைகளாகவோ தடுமாற்றமான வார்த்தைகளாகவோ இருக்காது.ஆனால் பொய் சொல்லும் போது என்னதான் பொய் சொல்பவர் இயல்பு நிலையை நிலைநிறுத்த முயற்சித்தாலும் ஒருவர் பொய் சொல்லகிறார் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.

எப்பொழுதுமே ஏதாவது கேட்டால் போகிற போக்கில் அலட்சியமாக பதில் சொல்பவள் இன்று ஏன் நின்று நிதானித்து கவனமாகப் பதில் சொல்கிறாள் அதுவும் மங்களேஸ்வரி என்ற பெயரை சில விநாடிகள் தாமதித்தே சொன்னதால் தாய்க்கு இவள் ஏதோ ஒன்றை மறைக்கிறாள் என்ற ஐமிச்சம் வரவே செய்தது.ஆனால் மகளுக்கு பீரியட் வந்த சந்தோசத்தில் அவளின் தாமதித்த பதிலை பெரிதுபடுத்தவில்லை.

தான் மங்களேஸ்வரிக்குக் காய்ச்சல் பார்க்கப் போகிறன் என்று பொய் சொல்லி தாயிடம் கொர்லிக்ஸ் போத்தலொன்றை வாங்கிக் கொண்டு போய் காய்ச்சலில் கிடந்த ஞானத்தைப் பார்க்கப் போக அங்கை தனக்கு பீரியட் வந்ததும் அதற்கு ஞானத்தின் தாய் உதவி செய்ததையும் நினைத்தவாறு

அறைக்குள் போனவள் புத்தகங்களை வைச்சுக் கொண்டு போன சீலைப் பையை மேசையில் வைக்கும் போதுதான் தான் ஞானத்தின் வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த வெற்றிலைகளின் ஞாபகம் வர தாயாரிடம் கொடுப்பமென்று அதனை எடுத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியே வர தாய் அவளின் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

மகள் தனக்குச் சொன்னதில் ஏதோ பொயிருப்பது போல அவளுக்குத் தோன்றியிருக்கிறது.

தனதறையை நோக்கி தாய் வருவதும் தாயின் முகத்தில் கேள்வி ரேகைகள் ஒடுவதைக் கண்ட புஸ்பகலா தான் பொய் சொன்னதை அம்மா கண்டுபிடித்துவிட்டாரோ எனப் பதட்டமடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தாய்க்கு அக்கறையுடன் வெற்றிலை வாங்கிக் கொண்டு வந்ததாக காட்டுவதாக நடித்தவள் அம்மா இந்தாங்கோ வெற்றிலை என்று குடுக்கிறாள்.

வெற்றிலையை வாங்கிய தாய் பீரியட் வந்த பொம்பிளையள் வெற்றிiலையத் தொடக்கூடாதே இவள் என்னெண்டு தொட்டு வாங்கிக் கொண்டு வந்தாள் என ஏதோ நடக்காதது நடந்துவிட்டது போல ஐயையோ நீ என்னண்டு தொட்டு வாங்கிக் கொண்டு வந்தனி என்று கேட்ட தாய், அடுத்து அது சரி இந்த வெற்றிலையை யார் தந்தது என்று கேட்க தடுமாறிய புஸ்பகலா மங்களேஸ்வரியின் அம்மாதான் தந்து விட்டவா என்று சொல்ல இவ்வளவு வெற்றிலைiயா என்று கேட்க அம்மா அவையின்ரை வளவுக்குள்ளை ஏழெட்டு வெற்றிலைக் கொடிகள் நிற்குது அதிலிருந்து ஆய்ஞ்சு தந்தவை என்று வேகமாக பதில் சொல்கிறாள்.

தாயார் தோண்டித் தோண்டி கேள்வி கேட்டு உண்மையை அறிய முற்படுகிறாரோ அதற்கு விடக்கூடாது என்று முடிவெடுத்த புஸ்பகலா வேறை என்னம்மா, அம்மா எனக்க வாய் ஏதோ மசக்கு மசக்கென்று இருக்குது வெற்றிலை பாக்குப் போடவா என்று கேட்க தயங்கிய தாய் சரி இண்டைக்கு மட்டும் போடு என்கிறாள்.

பாக்கு வெற்றிலைத் தட்டத்தை எடுக்கப் பொன புஸ்பகலாவைத் தடுத்த தாய் நான் சீவித்தாறன் தட்டத்திலை தொடதை என்கிறாள்.

பாக்கை பாக்குவெட்டியால் சீவிய போது அது கயர்ப் பாக்காக இருந்ததை கவனித்த தாய் இதைவாயிலை போட்டால் தனது மகளுக்கு தொண்டை கட்டிவிடுமே என நினைச்சவள் அதை அப்படியே பாக்குத் தட்டத்தில் போட்டிட்டு வெள்ளைப் பாக்கை எடுத்து சீவி வெற்றிலைக்குள் வைச்சு மடிச்சுக் குடுக்கிறாள்.

குடுக்கும் போது, நீ நினைக்கிறாயாக்கும் உன்னிலை ஐமிச்சப்படுகிறன் என்று,பொம்பிளைப் பிள்ளையளை வைச்சிருக்கிற தாய் தகப்பன்தங்கடை பொம்பிளைப் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து குடுக்கும் வரை நெருப்பை மடியிலை கட்டிக் கொண்டிருக்கிற மாதிரித்தான் வாழ்கிறார்கள்.

உன்ரை மச்சாள் மன அடக்கமில்லாமல் சபலப்பட்டு வயித்திலை வாங்கிப் போட்டு பிறகு யாழ்தேவி ரயிலுக்கு முன்னால் பாய்ஞ்சு தற்கொலை செய்தது இப்பவும் கண்ணுக்குள்ளை நிற்குது.

நடந்தது நடந்து போச்சுது என்று துணிவோடு வாழ்ந்திருக்கலாம் அந்தத் துணிச்சல் அவளுக்கு இல்லாமல் போச்சுது.காசு பணமோ நகைநட்டோ வீடு வாசலோ முக்கியமில்லை மானம் மரியாதைதான் முக்கியம் என தாய் ஒரு பிரசங்கமே செய்தாள்.

அம்மா! நானும் பார்க்கிறன் எப்ப மருந்துமணம் வந்த சிரட்டையை குப்பைக்குள்i கண்டியளோ அன்றிலிருந்து அதையும் என்னையும் வைச்சு என்னவெல்லாமோ கற்பனை செய்கிறீர்கள் என்று சொல்லியவள், அம்மா எனக்கு உடம்பு அலுப்பாக இருக்குது நான் படுக்கப் போகிறன் என்று சொல்லிக் கொண்டே கதவை நீக்கல் விட்டுச் சாத்துகிறாள்.

யோசனையுடன் தாய் அடுப்படியை நோக்கிப் போகிறாள்.கட்டிலில் படுத்திருந்தபடியே தான் மங்களேஸ்வரியை வருத்தம் பார்க்கப் போறன் என்று பொய் சொல்லிவிட்டு ஞானத்தை வருத்தம் பார்க்கப் போனதை என்:றோ ஒருநாள் அம்மா அப்பா அறிஞ்சிட்டால் என்ன நடக்குதோ தெரியாது என்று யோசிச்சுக் கொண்டேயிருந்தாள் புஸ்பகலா.

அவளால் நித்திரை கொள்ள முடியவில்லை.மங்களேஸ்வரியின் தாயையோ தகப்பனையோ என்றைக்குமே அம்மா சந்திக்கும் வாய்ப்பு வராது, ஆனபடியால் நான் பொய் சொன்னது அம்மாவுக்கோ அப்பாவுக்கோ ; தெரியவர வாய்ப்பில்லை என்று நினைச்சாள்.

ஞானத்தைப் பார்க்கப் போன அன்று காலமை மங்களேஸ்வரியிடம் தான் ஞானத்தைப் பார்க்கப் போறன் அதை யாருக்கும் சொல்லாதை அம்மாவுக்கோ அப்பாவுக்கோ அது தெரிய வராது,தற்செயலாய் அவை இரண்டு பேரையும் நீயோ இல்லாட்டில் உன்ரை அப்பா அம்மாவோ சந்திச்ச்சால் தான் உன்னை வருத்தம் பார்க்க வந்தது என்று சொல்லு, சாடையாய் உன்ரை அம்மாவிடமும் சொல்லி வை நீலலோஜினிக்கு ஞானத்தைப் பார்க்கப் போறதை அசிகையிலும் காட்டிக் கொள்ளாதை என்று புஸ்பகலா மங்களேஸ்வரியிடம் சொல்லி வைச்சிருந்தாள்.

புஸ்பகலா ஞானத்தின் வீட்டிலிருந்து போனதும்,ஞானத்தின் தாய் புஸபகலாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஞானம் அறைக்குள் போய்ப் படுத்துவிட்டான். கணவன் சுப்பையாவும் வடக்குப்புற விறாந்தையில் சாப்பிட்ட களைப்பக்கு படுத்து நித்திரையாகிவிட்டார்.

விறாந்தைக் கதிரையில் இருந்த ஞானத்தின் தாய் பலவாறு யோசித்துக் கொண்டிருந்தாள்.தன்னை மாமி என்று பாசமாய் கூப்பிட்டது மாத்திரமல்ல தான் ஞானத்தை விரும்புவதைத் துணிச்சலாகச் சொன்னதையும் நினைச்சு வியப்படைந்தாள்.

ஒரு குமர்ப்பிள்ளை சினேகிதியை வருத்தம் பார்க்கப் போறன் என்று தாய்க்குப் பொய் சொல்லிவிட்டு தனது மகனை வருத்தம் பார்க்க வந்ததை எப்போ ஒருநாள் தாயும் தகப்பனும் அறிஞ்சால் எங்களையும் அல்லவா குறை சொல்லுவார்கள்.

வடிவான குணமான பிள்ளைதான் எங்களுக்கு மருமகளாக வந்தால் சந்தோசந்தான் ஆனால் அந்தப் பிள்ளையின் தாய் தகப்பன் அதற்கு சம்மதிப்பினமோ தெரியாது என்று யோசித்துக் கொண்டிருந்த ஞானத்தின் தாய் கதிரையில் உட்கார்ந்தபடியே தன்னையுமறியாமல் கண்ணயர்கிறாள்.

என்ன கோழித்தூக்கமோ என்று குரல் கேட்டு கண்முழிதச்ச ஞானத்தின் தாய் முற்றத்தில் மார்க்கண்டுவின் மனைவி நிற்பதைக் காண்கிறாள்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.