கதைகள்

“செம்பத்தி” ….. சிறுகதை – 39 …. – அண்டனூர் சுரா.

சாவுக்குக் குழிப் பறிக்கையில், பாடைக்கு மரம் வெட்டுகையில் கையில், காலில் காயமோ கீறலோ படக்கூடாது என்பது சுப்பிரமணிக்குத் தெரிந்ததுதான். சனிப் பிணமும் சாவுப் புண்ணும் ஆகாதது. சனிப்பிணம் துணைக்கொரு பிணம் கேட்கும். சாவுப்புண் யார் செத்து புண்ணானதோ அவர் செத்து அறுபது நாட்களுக்குள் அவரைக் கூட அழைத்துக் கொள்ளும். இவை சுப்பிரமணி மயான வேலைக்கு வந்த புதிதில் அவரது துரோணாச்சாரி பெரமையன் சொல்லிக் கேட்டது.

பெரமையன் சொல்வதைப் போல நடந்தேறியிருந்தால் இந்நாளைக்குள் சுப்பிரமணி இறந்து, எரிந்து, சாம்பலாகி; அச்சாம்பலிலிருந்து புல்லோ புதரோ முளைத்து, அது பூத்து காய்த்து, கனிந்து மடிந்தொழிந்திருக்கும். ஒரு காலமும் மயானம் மனிதர்களை அழைப்பதில்லை. மனிதர்கள்தான் மயானத்தைத் தேடிப் போகிறார்கள்.

அவ்வூரில் மொத்தம் ஒன்பது சாதிகள் இருந்தன. ஒன்பதுக்கும் பத்து மயானக் காடுகள். இது தவிர கிறிஸ்தவ, முஸ்லீம் காடுகள் வேறு. எப்பொழுது யார் இறப்பார், யார் தன்னை அழைப்பாரென அவருக்குத் தெரியாது. ஒன்பது ரெண்டு பதினொரு சாதியிலும் எப்போதேனும் நடந்தேறும் மரணத்திற்குப் பிறகு தொற்றுக் கிருமியைப் போல மண்டி முளைக்கும் புதர், முட்களை வெட்டி அப்புறப்படுத்துகையில் கை, கால், தொடையில் ஒரு முள்ளேனும் தைக்காமல் விடாது. அப்படியாகத் தைத்த புண்கள்தான் இவ்வளவும். அவரது உடம்பிலுள்ள வடுப்புண்களை எண்ணினால் கௌதமமுனி இந்திரனுக்கு விடுத்த வெட்டுண்ட சாபப் புண்களின் எண்ணிக்கையைத் தொடும்.

சுப்பிரமணி மயான வேலைக்கு வந்த இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ தீக்காயம், முட்காயம், மனக்காயங்கள். அவரே ஆற்றிக்கொண்ட அதுவாகவே ஆறிக்கொண்ட புண்களைப் போல அவரது கைப்புண் ஆறியிருக்கவில்லை. இருந்து எரியும் பிணத்தைப் போல, கைப்புண் நின்று எரிந்துகொண்டிருந்தது. கனிப் புண் என்றால் உடம்பைத் துளைத்து வதைத்துவிடாது. அவரது கையிலிருந்தது செங்காய்ப் புண். இப்புண்ணை வைத்துக்கொண்டு எப்படியாம் மருத்துவர், செவிலியர்களின் பணியினைப் பாராட்டி கைக்கொட்டி மரியாதை செலுத்துவதாம் என்கிற கவலை அப்போது அவருக்கு!

கைக்கொட்டல் மீது ஒருவிதமான ஏக்கம் அவருக்கு இருக்கவே செய்தது. எப்போதேனும் நான் பார்க்கும் வேலைக்கு இப்படியாக கைக்கொட்டி மரியாதை செய்திருப்பார்களா, இதுவரையில்லையானாலும் இனிமேலேனும் கொட்டுவார்களா, அதைப் பார்த்துவிட்டு சாகும் வாய்ப்பை நான் பெறுவேனா? கேள்விகள் அவருக்குள்ளாக சுருளெடுத்தன.

இந்த ஏக்கம் அவருக்குள் நீண்ட நேரம் இருந்திருக்கவில்லை. இது என்ன வகை சிறுபிள்ளைத்தனம்? இதுநாள் வரை இப்படியான ஏக்கம் எனக்குள் வேர்விட்டதில்லையே. இன்றைக்கென்ன புதிதாக. எப்படியாம் எனக்குள் இது விழுதுவிட்டது? அதை நினைத்து வருந்தி வெட்கினார்.

இந்நாள்வரை யாருக்காகவும் சுப்பிரமணி கைக்கொட்டியதில்லை. காட்டில், கழனியில், வீட்டில், தெருவில் எனப் படுக்கையில் அவரை மொய்க்கும் ஈக்கள், கொசுக்கள், ஒலுங்குகளைப் புறங்கையால் விரட்டியிருக்கிறாரே தவிர அதை இரு கைகளால் அடித்தது கிடையாது. அரசியல் கட்சிக்கூட்டம், ஊர்த் திருவிழாக்கால நாடகம், சினிமா,..இவற்றைப் பார்க்கையில் அவர் சிரிக்க மட்டும் செய்திருக்கிறார். நினைவுதெரிந்து ஒரே ஒரு முறை, உரக்கக் கைக்கொட்டிச் சிரித்திருக்கிறார். ஏனென்றோ, எப்பொழுதென்றோ அவருக்கு அவ்வளவாக நினைவில்லை. ஆனால் அத்தனை நீளச் சிரிப்பை ஒரே மூச்சில் சிரிக்க முடியாததால் கைகளைக் கொட்டிக்கொணடு சிரித்திருக்கிறார். அதுதான் அவர் கடைசியாகக் கைக்கொட்டியது.

இன்று கைக்கொட்டி வாழ்த்துகள் தெரிவிக்கலாமென நினைத்தார். இந்த மருத்துவரும் செவிலியர்களும் எத்தகைய உயர்ந்தவர்கள்! இவர்கள் இல்லையென்றால், நான் பிறந்திருக்க முடியுமா? என் மகன், அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்? அவர்களது பணியையும் சேவையையும் நினைத்துப் பார்க்கையில் அவர்கள் மீது வியப்பும் மதிப்பும் கூடி வந்தது. அவர்களை நினைக்கையில் கூடவே துப்புரவாளர்கள் நினைவுக்கு வந்தார்கள். பொழுதுவிடிகையில் சந்தைக் கடைகளைக் கூட்டிப்பெருக்கும் முத்தாயி, ராமுக்கண்ணு, மாடன், குமுதவள்ளியை அவர் பெருமிதமாக நினைத்தார். இவர்களில் குமுதவள்ளி அவருக்கு நெடுநெருக்கம். அவள் சுப்பிரமணியை எங்கேயேனும் பார்த்துவிட்டால், கூப்பிட்டு உரிமையுடன் வம்பிழுப்பவள். கடைசியாக அவளுடனான அளாவல் நினைவிலாடியது. “சுப்பிரமணியண்ணே, பேரனோட இவ்ளோ வெரசா எங்கே போறீக?”

“ டாக்டரப் பார்க்கப் போறேன் வள்ளி”

“ நாங்களும் டாக்டர்தே”

“ என்னது நீங்களுமா?”

“ பின்னே இல்லையா, அவங்க வந்த நோய்க்கு வைத்தியம் பார்க்குறாங்க, நாங்க நோய் வராமலிருக்க வைத்தியம் பார்க்கோம்”

அவள் சொன்னது எத்தனை சத்திய வார்த்தை! அவளுக்காக வேணும் உரக்கக் கைக்கொட்ட நினைத்தார் சுப்பிரமணி. நினைத்தென்ன, கைக்கொட்ட முடியாதளவிற்கு அவரது கையில் செங்காய்ப்புண் அல்லவா இருக்கிறது!.

மயானப் புண் அத்தனை இலேசில் ஆறாதென பலரும் சொல்லிக் கேட்டதுதான். இப்பொழுதான் அதை உள்ளூர உணர்ந்தார். இப்புண் ஆறாததற்குக் காரணம் மயானப் புண் என்பது மட்டும் காரணமல்ல. அவரது வயோதீகம். மூர்க்கமிழந்த இரத்தத்தின் சூடு. அச்சூட்டினால் கொதித்த உப்பும் சர்க்கரையும்.

சூரை அல்லது காரை இரண்டில் ஒரு முள் அவரது கையைத் தைத்திருந்தது. வெந்தயம் அளவுக்குக் கொப்புளமாகக் காய்த்து அதுவே உள்ளங்கை நெல்லிக்கனி அளவாக சீழும் சலமும் பிடித்து, அது மெல்ல ஆறி தோல் உரிந்து வருகையில் அதற்கும் பக்கத்தில் ஒரு செங்காய்ப்புண். இதற்கும்முன் எத்தனையோ காயங்களை அவரது ஊனுடம்பு கண்டிருக்கிறது. காயம் கொள்வது தெரியாது, ஆறுவது தெரியாது. ஆனால், இப்புண் வராத விருந்தாளி கொஞ்சக் காலம் தங்கிப் போவதற்கென வந்ததைப் போலிருந்தது. “இப்புண்

ஆறும்வரைக்கும் ஊரில் யாரும் இறந்துவிடக்கூடாது” எனச் சுடுகாட்டுச் சிவனை நினைத்து வேண்டிக்கொண்டார். அப்படியாக வேண்டுகையில் சுப்பிரமணிக்குத் தாத்தாவின் நினைவு வந்தது.

சுப்பிரமணியின் தாத்தாவை ஊரார்கள் வெட்டி என்றுதான் அழைப்பார்கள். அவரது காலத்தில்தான் காலரா வந்திருந்தது. ஒரு மாதக்காலம் தாண்டவமாடிய காலரா, பலரின் உயிரை பின்வாசல் குதம் வழியே உருவிப்போட்டதில் அம்மாதம் முழுவதும் தாத்தா இடுகாடு, சுடுகாடென தங்கி பிணங்களை எரிக்க, புதைக்க இருந்திருக்கிறார்.

இடுகாட்டு வேலையை ஊரார்கள் அத்தனை இலேசாக நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் கல் மனசு வேண்டுமடா. பிணத்தை எரிக்க மரக்கட்டையை அடுக்கும்போதே தெரிந்துபோகும், இதில் எரியப் போகிறவர் எப்படியெல்லாம் வாழ்ந்தாரென்று. பிணத்தின் நிறைவேறாத ஆசைகளை, தீ தன் நாக்கால் சொல்லும். நெஞ்சு கல்லாகக் கொண்ட ஒருவனால் மட்டும்தான் பிணத்தை எரிக்கவும் புதைக்கவும் முடியும். இதெல்லாம் ஊருக்கும் சனத்திற்கும் எங்கே தெரியப் போகிறது?” என அவருக்கவரே கேட்டுக்கொண்ட கேள்வி சுப்பிரமணியின் காதிற்குள் எதிரொலித்தது.

ஒரு வாரமாக யாரும் இறக்காதது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியே இருந்துவிட்டால் தன் பெயருக்குப் பின்னே ஒட்டிக்கொண்டிருக்கும் காரணப் பெயர்க்கூட வழக்கொடிந்து போகும். அப்படியெல்லாம் நடந்துவிடுமா என்ன? பிறப்பென்று இருந்தால் இறப்பென்று ஒன்று இருக்கும்தானே! மரம் கொழுவிய நிழலில் கண்ணொடுங்கி படுத்திருக்கையில் வாலிபர்களின் பிரசங்கம் அவரது காதினில் விழுந்தது.

“ சுப்பிரமணியண்ணே “

தன் கைக்கு வேலை வந்துவிட்டதோ, பரிதவித்தவராய் கேட்டார் “ யாரு?”

“ நாங்கதான்..”

சுப்பிரமணி எழுந்து உட்கார்ந்தார். அவர் முன் ஊர் இளைஞர்கள் நான்கைந்து பேர் நின்றிருந்தார்கள்.

“ சொல்லுங்க தம்பி”

“ இன்றைக்குச் சாயந்தரம் டாக்டர் நர்ஸ்ங்களுக்கு மரியாதை செய்யணும். நாலு மணிக்கு மறக்காம கைக்கொட்டுங்க..”

அவர்களைப் பார்க்க சுப்பிரமணிக்கு ஆனந்த மமதையாக இருந்தது. இந்தத் தலைமுறைக்கு உண்மையாக உழைப்பவர்களின் அருமை பெருமை தெரிந்திருக்கிறதே. அவர்களை அடையாளம் கண்டு மரியாதைச் செய்கிறார்களே, அவரது கண்களில் நீரரும்பு பூத்தது.

ஐம்பது வருடக் காலம் பிணங்களை எரிக்க, புதைக்கவென இருந்திருக்கேன். நான் செத்துப்போகையில் பத்துப் பேரேனும் எனக்காக கண்ணீர் சிந்தாமலா போய்விடுவார்கள்? அந்தப் பத்துப்பேர் இவர்களாகத்தான் இருக்கப் போகிறார்கள் என நினைத்தவர் அவர்களைப் பார்த்து வியந்தார்.

சுப்பிரமணிக்கென்றும் ஒரு வீடு இருக்கிறது. வீட்டில் அவருக்குத் துணைவியார்தான் இல்லையே தவிர மகன், மருமகள், இரண்டு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். ஊரே ஊரடங்கி அவரவர் லெட்சுமணக் கோட்டை வட்டமாக வரைந்து வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் அவருக்கும்

பேரப்பிள்ளைகளைப் பார்க்கவும் அவர்களினூடே இருக்கவும் தோன்றியது. வீட்டுக்குச் செல்லலாமென நினைத்தார். சென்றால் என்ன நடக்கும்?

“ சாவுக்குக் குழி வெட்டப் போறேன், மரவெட்டப் போறேனு போகாது வீட்டுக்குள்ளேயே இருக்கிறதா இருந்தால் இருங்க. போவேன்தான், போய்ப் பார்ப்பேன்தானெனச் சொன்னால் வீட்டுக்குள்ளே வராதீங்க..” மருமகள் கடிந்து சொல்லிவிடுவாள். சொன்னதோடு நிறுத்திக்கொள்பவள் அல்ல. தன் பேச்சை மீறினால் என்ன நடக்குமென்பதைச் செய்முறை விளக்கமாகக் காட்டவும் செய்வாள். வாணலியில் எண்ணெயூற்றி அடுப்பை மேலும் எரியூட்டி கடுகு வெந்தயத்தைத் தாழித்து அதற்குள் நறுக்கிய வெங்காயத்தைக் கொட்டுகையில் எழும் பொரிபொரிப்பு சத்தத்தினூடே எதையும் சொல்லி முடிக்கிறவள்.

எத்தனை நாட்கள்தான் வீட்டுக்குள்ளேயே அடங்கியிருக்க முடியும். புகையிலைப் பொட்டலம் வாங்கிவரலாமெனக் கடைக்கு வந்தார். கடைக்காரர் பொட்டலத்தை எடுத்து இடதுகையில் வைத்தார். சுப்பிரமணிக்குக் கோபம் வந்தது.

“ என்ன தம்பி, பீச்சாங்கையாலே வக்கிறீக?”

“ சோத்தாங்கை வழியேதான் கொரோனா அதிகமாப் பரவுதாம்”

அவர் வலது கையை உசத்தியான கை என்று இத்தனை காலம் நினைத்திருந்தார். வலது கைக்குக் கிடைக்கும் மரியாதையில் நகநுனியளவு இடது கைக்குக் கிடைப்பதில்லையே என்கிற கோபம் அவருக்கு நீண்ட காலம் இருந்து வந்தது.

இத்தனை காலமும் வியாதிக்கும் தொற்றுக்கும் காரணம் இடதுகை என்பதாக நினைத்துக்கொண்டிருந்த சுப்பிரமணி, கடைக்காரர் இப்படியாகச் சொன்னதும் இடதுகையால் புகையிலையைக் கொடுத்ததும் இடவலமாகச் சுற்றிக்கொண்டிருந்த பூமி வல இடமாக சுற்றுவதைப் போலிருந்தது. எல்லாமுமாக இருக்கும் இடதுகைக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ள நினைத்தார்.

இந்தப் புண் ஆறுவதற்கே இத்தனை நாளாகையில் கிருமித் தொற்றினால் எத்தனை நாளாகுமோ, அவரால் பயப்பிடாமல் இருக்க முடியவில்லை. யார் கொடுப்பதையும் வாங்கித் தின்னவோ யாரிடம் எதையும் கேட்டுப்பெறவோ கூடாதென நினைத்தவருக்கு வலது கையிடமிருந்து இடது கையைக் காப்பாற்றிக் கொள்வது பெரும் சவாலாக இருந்தது. வயதானால் சாவு மீது வரும் ஒரு விதப் பயம் அவருக்கு வந்தது. அந்தப் பயம்தான் அவரை, வீட்டை நோக்கி உந்தித் தள்ளியது.

மருமகள் நந்தினி நினைவுக்கு வந்தாள். அவள் கடுகு பொரிவதைப் போல பொரிந்துத் தள்ளினாலும் அவளுக்குள்ளும் இதயம் இருந்தது. அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வீட்டிலேயே இருந்தால் அவள் எனக்கு இன்னொரு தாய், என நினைத்தவராய் தெருவை நெருங்குகையில் பலரும் வாசலில் நின்று கைக்கொட்டிக்கொண்டிருந்தார்கள்.

“ சுப்பிரமணியண்ணே, நீங்க கைக்கொட்டலையா?”

கொட்டலாம்தான், கொட்டினால் வலதுகை கிருமி இடதுகைக்குத் தொற்றிவிடுமே, எனச் சொல்ல நினைத்தார். வாய் வரைக்குமாக வந்துவிட்ட சொற்களை தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டு, “ கையிலே புண்ணப்பா ” என்றார்.

“ எங்கே காட்டுங்க…” அவரை உள்ளங்கையைப் பார்த்தார்கள்.

“ இதெல்லாம் ஒரு புண்ணா? இந்தப் புண்ணுக்காகவா நீங்கக் கைக்கொட்டலை” கேலியாகக் கேட்டார்கள்.

“ கைக் கொட்டுங்க, கொரோனா கால டாக்டர்களுக்கு நாம செய்கின்ற மரியாதை இது “

“ வேண்டாம் தம்பி, அந்தக்கை கிருமி இந்தக் கைக்குத் தொத்திக்கிரும்”

கைக்கொட்டிக் கொண்டிருந்தவர்கள் அவரைக் கோபவெறிக் கொண்டு பார்த்தார்கள். “பிணத்தோட புழங்கிற ஆள்தானே நீ. உனக்கு டாக்டரப் பத்தியும் அவங்க சேவையைப் பத்தியும் என்ன தெரியும்”

கொல்லும் சொற்கள் என்பது இதுதான்! “பிணத்தோட புழங்குகிற ஆள்தானே நீ…” சொற்கள் அவரைக் குடைந்தெடுத்தது.

வீதியில், வாசலில், மாடியில் நின்று கைக்கொட்டியவர்களின் ஒலிப்பு அவரைக் கேலிச் செய்வதைப் போலிருந்தது. அவரால் அதற்கும் மேல் அவ்விடத்தில் நிற்க முடியவில்லை. அவருக்குள் வெகுண்டெழுந்த மூர்க்கத்தின் வேகம் அவரை வீட்டுக்குக் கொண்டுவந்து நிறுத்தியது.

சுப்பிரமணி, வீட்டுக்கு வந்ததும் உடுத்தியிருந்த ஆடையோடு ஒரு குடம் தண்ணீரெடுத்து தலையில் ஊற்றிக்கொண்டார். ஆண்கள் குளிக்கையில் அழுதால்தான் உண்டு. மருமகள், சோப்புக்கட்டியைக் கொண்டுவந்து வைத்தாள். பேரன் மாற்று வேட்டியுடன், “தாத்தா…” என்றபடி முகம் சிரித்தான். தலையில் வழிந்த நீரை துடைத்தெடுத்துக்கொண்டு, பேரனைப் பார்த்துச் சிரித்தார் சுப்பிரமணி.

“ இனி எங்கேயும் போகாதே தாத்தா. எங்கக் கூடவே இரு”

கலங்காத கண்கள் கலங்கிவிட்டால் எல்லாவற்றுக்கும் கலங்கும். குளித்து, தலைத் துவைட்டி படியேறுகையில், மருமகள் சொன்னாள். “யார் கூப்பிட்டும் வெளியே போறதில்லைன்னா வீட்டுக்குள்ளே வாங்க. இல்லைன்னா, திண்ணையிலேயே ஒதுங்கிக்கோங்க..”

சுப்பிரமணி மருமகளைக் கருணையொத்த கண்களால் பார்த்தார். நந்தினியின் சுரந்த முகத்தில் செம்பத்தி தெரிந்தது. தன் தாயைப் போல பசியறிந்து நேரமிருந்து சமைத்துக் கொடுப்பவள்தான். என்ன ஒன்று, அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வீட்டுக்குள்ளாக பெட்டிப் பாம்பாக அடங்கியிருக்க வேண்டும்.

“ என்ன சொல்லிட்டேனு இப்படி கண் கலங்குறீக?”

சுப்பிரமணி, மருமகளைத் திரும்பிப் பார்த்தார். கண்களுக்குக் கலங்கத்தான் தெரியும். காரணம் சொல்லத் தெரியாது.

“ ஏனம்மா, தாத்தாவைத் திட்டுனே…” பேரன் அவருக்காகப் பரிந்து தாயைப் பேசினான். பாசம் எத்தனை பிசுபிசுப்பானது. சுப்பிரமணி, குனிந்து பேரனைத் தூக்கப்போனார்.

“ தூக்காதீங்க..” மருமகளின் ஒரு கை தடுத்தது.

“ ஒரு வாரத்துக்கு யாரும் அவருக்கிட்ட போகக் கூடாது, அவர் எங்கெல்லாம் போனாரோ, யாரையெல்லாம் தொட்டாரோ…?”

வார்த்தைக்கு பற்கள் உண்டு. கடிக்க மட்டுமல்ல. குதறவும் செய்யும்.

“ சரிங்கம்மா “ பதிலுக்குக் குழந்தைகள்.

சிறிய வீடுதான் அது. ஆனாலும் அவருக்கென்று ஒரு மூலை இருந்தது. ஒதுங்கிக்கொண்டார்.

சுடுகாடு, இடுகாடு, பாடை, புதைக்குழி, வாய்க்கரிசி, பொட்டுக்காசு, கால்கட்டு, கொள்ளி… எனத் தன்னைச் சுற்றி கொக்கரிக்கும் சொற்களுக்கிடையில், “தாத்தா” என்கிற ஒற்றைச் சொல் எத்தனை கனமானது. செய்யும் தொழிலெல்லாம் தெய்வம்தான். ஆனால் எல்லாத் தெய்வமும் ஒன்றில்லையே. மனிதனை வைத்து தெய்வத்தை அளக்கும் காலத்தில் தொழிலை வைத்து மனிதனை அளப்பதொன்றும் புதிதில்லையே.

மயான சடங்குச் சொற்கள் காதினில் விழுந்திடாத ஒரு வாரக் காலம் அவருக்குப் பொற்காலம்தான். இந்நாட்களில் இரு துக்கங்கள் நடந்தேறியிருந்தன. ஆனாலும் அவர் மயானம் பக்கம் போகவில்லை.

சுப்பிரமணிக்குத் தேவையான பீடி, புகையிலை, வெற்றிலைப் பாக்குகளை மருமகளே கடைக்குப்போய் வாங்கிவந்து கொடுத்தாள். அடுத்த ஒரு வாரமும் அமைதியான நாட்களாகவே கழிந்தன.

ஒரு நாள் காலையில் அவரை விசாரித்தபடி வாசலில் இரண்டுபேர் நின்றார்கள். சுப்பிரமணி பேரனை சமிக்ஞையால் அழைத்து, தாத்தா இல்லே, எனச் சொல்லச் சொன்னார். அவனும் கிளிப் பிள்ளையைப் போல சொன்னதைச் சொன்னான். வாசலில் சற்றுநேரம் நின்றுவிட்டு திரும்பிச் சென்றவர்கள் திரும்பவும் அவரைத் தேடி வந்தார்கள். இந்த முறை மருமகளிடம் கேட்டார்கள் “ சுப்பிரமணி வந்திட்டாரா?”

“ இல்லைங்களே ”

அவர்கள் திரும்பிவிடவில்லை.

“ யாரெனக் கேளேன்” சுப்பிரமணி நந்தினியைக் கேட்கச் சொன்னார்.

“ யாரு?”

“ டாக்டர் சேது “

எல்லா இறப்பும் சுப்பிரமணிக்கு ஒன்றுபோல இருப்பதில்லை. சிலரின் மரணம் அவரை ரொம்பவே கலங்கடித்துவிடும். அப்படியாகத்தான் மருத்துவர் சேதுவின் மரணச் செய்தி இருந்தது. சுப்பிரமணிக்கு நெருக்கமானவர். அவர் வயதையொத்தவர். பேரப்பிள்ளையை அழைத்துச் சென்றால் பணம் வாங்காமல் வைத்தியம் பார்த்துவிடுகிறவர்.

சுப்பிரமணியின் நெஞ்சு பதைத்தது. இப்போது அவருக்கு கைப்புண்ணின் வதை பெரிதாகத் தெரியவில்லை.

“ எப்படினு கேளேன்”

“ எப்படி இறந்தாரு?”

“ கொரோனாதான். ஊர் மக்களெ காப்பாத்தத் தெரிந்தவருக்கு, அவரக் காப்பாத்திக்கிற தெரியல”

நந்தினியின் முகத்தில் படர்ந்த சலனம் சுப்பிரமணியின் முகத்திலும் படர்ந்தது.

“ சரி போங்க. மாமனாரை வரச் சொல்றேன்…”

வாசலில் நின்றவர்கள் சட்டைப்பையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து, நந்தினியிடம் நீட்டினார்கள். நந்தினி கை நீட்டி வாங்க யோசித்தாள். “ வாங்கிக்கோங்க. டாக்டர் உசிரோட இருந்திருந்தா சுப்பிரமணிக்குக் கொடுக்கிற பணம்தான்”

“ வேணாம், மாமனாருக்கிட்டேயே கொடுங்க” என்றவாறு வீட்டுக்குள் நுழைந்தாள்.

“ புதைக்கிறதெனச் சொல்லுங்க. பிரேதம் வந்துக்கிட்டிருக்கு”

சுப்பிரமணி கவச உரைகளை மாட்டிக்கொண்டு, புதைகாட்டை நோக்கி நடந்தார். காட்டில் நான்கைந்துபேர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர் காட்டை நெருங்குவதற்கும் பிரேதம் வருவதற்கும் சரியென இருந்தது. எத்தனை பெரிய மனிதர் இவர்!. சொற்ப ஆட்களே இறுதி ஊர்வலத்தில் கலந்திருந்தார்கள். இதற்கு முன்பு இப்படியான ஊர்வலத்தை அவர் கண்டதில்லை.

பிரேதத்தை இறக்கியவர்களுக்கும் வாயிலில் நின்றிருந்தவர்களுக்குமிடையே தகராறு எழுந்தது. பிறகு அது கைகலப்பானது. இரண்டு பேர் பிரேதத்தைத் தடுத்தார்கள். தடுத்தவர்களின் கைகளைக் காவல் துறையினர் தடுத்தார்கள். சற்றுநேரத்திற்குள் அவ்விடத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காவலர்களின் லத்திச் சுற்றலுக்குப் பிரேதத்தை இறக்கியவர்கள் தெறித்தார்களே தவிர தடுத்தவர்கள் அல்ல. நேரம் ஆக ஆக தடுத்தவர்களின் கைகள் ஓங்கின.

இங்கே என்ன நடக்கிறது, மருத்துவரை ஏன் இங்கு அடக்கம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள்?. ஒரு வாரத்திற்கு முன்புதானே இந்த ஊரார்கள் மருத்துவர்களுக்குக் கைக்கொட்டி மரியாதை செய்தார்கள். சுப்பிரமணிக்கு ஒன்றும் புரியவில்லை. மருத்துவருக்காக குரல் கொடுக்க வேண்டும் போலிருந்தது. “ஏனப்பா தடுக்குறீங்க. எத்தகைய மனிதர். எத்தன உசிர்களக் காப்பாத்திருக்கார்?”

உரத்தக்குரலில் கேட்டதில், அவரது தொண்டை கனன்றது.

“ பிணத்தோட புழங்கிற ஆள்தானே நீ. தொத்து வியாதி பத்தி உனக்கென்ன தெரியும், இவரே இங்கே புதைச்சு தொத்து ஊருக்குள்ளே பரவினா என்ன செய்றதாம்”

சுப்பிரமணி சொன்னவனின் கண்களை உற்றுப் பார்த்தார். இதற்கு முன்பு கண்டிருந்த அதே கண்கள். “ பிணத்தோட புழங்கிற ஆள்தானே நீ” கேட்டிருந்த அதே குரல்.

இப்பொழுது சுப்பிரமணிக்குக் கோபமோ, சிரிப்போ வரவில்லை. அதற்குப் பதிலாக அவரது வாயில் வேறொன்று வந்தது.

Loading

2 Comments

  1. செம்பத்தி சிறுகதை மனதில் தைத்த வடு

    கங்காமுத்து, ஆவுடையார்கோவில்

  2. மருத்துவர்களுக்கே தெரியாத

    புண்ணின் வகைகள்..

    இலக்கியவாதி
    இப்படித்தான்
    தன்னை

    Encyclopedia வாக
    மாற்றுக்கொள்கிறான்!

    செம்பத்தி சிறுகதை சிறப்பு Sir❤️

    டாக்டர் தெட்சிணாமூர்த்தி
    அறந்தாங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.