கட்டுரைகள்

வாக்குமூலம்! …88 …. தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.

விவேகமற்ற தமிழ்த் தலைமைகளின் வெட்டிப் பேச்சால் வில்லங்கத்துக்குள்ளாகும் தமிழ் மக்கள்.

‘அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் மாவை சேனாதிராசா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்தக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்’ எனும் செய்தியை ஈழநாடு 23.10.2023 இதழ் முன் பக்கத்தில் பிரசுரித்துள்ளது.

1978 ஆம் ஆண்டின் நிறைவேற்று ஜனாதிபதிமுறை அரசியலமைப்பின் கீழான முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982 ஒக்டோபரில் நடைபெற்றது

அப்போது காலம்சென்ற தமிழ் அரசியல் தலைவர்களான மு. சிவசிதம்பரம் அவர்களைத் தலைவராகவும் அ. அமிர்தலிங்கம் அவர்களைச் செயலாளர் நாயகமாகவும் (இன்று உயிர்வாழும் வீ. ஆனந்தசங்கரி, இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராசா ஆகியோரும் இணைந்திருந்த) கொண்டு விளங்கிய அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி, சிங்கள ஸ்ரீலங்காவுக்கான ஜனாதிபதியைத் தெரிவு செய்யப்போகிற ஜனாதிபதித் தேர்தலில் தமிழீழத் தனிநாட்டுத் தமிழர்கள் அக்கறைப்படத் தேவையில்லையென்று காரணம் கூறி (இப்படித்தான் அன்றும் தமிழ்த் தேசிய அரசியல் என்பது வெறும் ‘ஏட்டுச் சுரக்காய்’ அரசியலாகத்தான் இருந்தது) வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை அத்தேர்தலில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது பகிஷ்கரிக்கும்படி வேண்டிக் கொண்டது.

ஆனால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் காலஞ்சென்ற குமார் பொன்னம்பலம் (கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை) அதற்கு மாறாக, 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழீழத் தனி நாடு அமைக்க தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கிய ஆணையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அத்தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகத் தமிழ் மக்கள் சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துத் தனக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழீழத்திற்கான வாக்குகள் ஆகும் எனப் பிரகடனம் செய்து அத்தேர்தலில் போட்டியிட்டார்.

நடந்ததோ வேறு.

அவர் எதிர்பார்த்த அளவு தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. மட்டுமல்லாமல் யாழ்குடா நாட்டு மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பகிஷ்க்கரிப்பு வேண்டுகோளையும் புறக்கணித்து அத்தேர்தலில் யு.என்.பி. வேட்பாளரான ஜே ஆர் ஜெயவர்த்தனாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவவுக்குக் கணிசமான தொகையினர் வாக்களித்தார்கள். அதற்குக் காரணம் 1970 – 1977 காலத்தில் ஆட்சியிலிருந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக விளங்கிய கொப்பேகடுவ கடைப்பிடித்த விவசாயக் கொள்கை மற்றும் நடவடிக்கைகள் காரணமாக யாழ்குடா நாட்டு விவசாயிகள் பொருளாதார ரீதியாக பல பாரிய நன்மைகளைப் பெற்றிருந்தார்கள். அதற்கு நன்றிக்கடனாகவே 1982ல் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட கொப்பேகடுவவுக்கு தங்கள் வாக்குகளை வழங்கத் தானாகவே முன்வந்தார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பகிஷ்க்கரிப்புக் கோரிக்கையும் குமார் பொன்னம்பலத்தின் தமிழீழ நிலைப்பாடும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் அடிபட்டுப் போயிற்று.

இத் தேர்தலில் குமார் பொன்னம்பலத்திற்கு அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் ஆக 173,934 ஆகும். இத்தேர்தலில் வெற்றியீட்டிய ஜே ஆர் ஜெயவர்த்தன பெற்ற 3,450,811 வாக்குகளுக்கும் இரண்டாவதாக வந்த தோல்வியுற்ற ஹெக்டர் கொப்பேகடுவ பெற்ற 2,548,438 வாக்குகளுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 902,373 ஆகும். இந்த வாக்கு விவரங்களை வைத்துப் பார்க்கும் போது, ஜே ஆர் ஜெயவர்த்தனா மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ ஆகியோரின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில்தானும் குமார் பொன்னம்பலம் பெற்றுக் கொண்ட 173,934 வாக்குகள் தாக்கம் செலுத்தவில்லை என்பது நிரூபணமாகிறது.

அடுத்து ஓர் அரசியல் ‘கோமாளித்தனம்’ தமிழர்களுடைய அரசியலில் நடைபெற்றது.

அது என்னவென்றால், 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களில் ஒருவராகத் தமிழர்கள் சார்பில் ‘ரெலோ’ வைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் (அப்போது ஸ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் ‘ரெலோ’ வில் ஒன்றாக இணைந்திருந்தார்கள்) போட்டியிட்டு விழுந்தும் மீசையில் மண்படாமல் நின்றார்.

இத்தேர்தலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகள் 9,662 மட்டுமே. இத்தேர்தலில் 6,015,934 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய மகிந்த ராஜபக்சேவுக்கும் 4,173,185 வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக வந்த சரத்பொன்சேகாவுக்கும்

இடையில் வாக்கு வித்தியாசம் 1,842,749 ஆகும். இந்த விவரங்களைப் பார்க்கும்போது சிவாஜிலிங்கம் பெற்ற 9,662 வாக்குகள் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் கிட்டவும் நெருங்கவில்லையென்பது புலனாகிறது.

மேலும், இந்த ஜனாதிபதி தேர்தல் (2010) முள்ளிவாய்க்கால் யுத்தம் 2009 மே இல் நடந்து முற்றுப்பெற்றுச் சில மாதங்களிலேயே நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரித்தது. யுத்தம் முடிந்த கையோடு நடைபெற்ற இத்தேர்தலில் தமிழர்கள் மஹிந்தவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட ராஜபக்சாக்கள்தான் தமிழர்களுடைய வாக்குகள் சரத்பொன்சேகாவுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டுச் சிவாஜிலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தினர் என்ற சந்தேகங்களும் அப்போது சந்தைக்கு வந்திருந்தன. இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரித்து நின்றமைக்கும் சிவாஜிலிங்கம் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டமைக்கும் பின்னணியில் திரைமறைவு அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருந்தன எனும் சந்தேகங்களும் பொதுவெளியில் பேசப்பட்டிருந்தன.

மேற்கூறப்பெற்ற இந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல் அனுபவங்களும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் ஒருத்தர் போட்டியிடுவது எத்துணை ‘மதியீனம்’ ஆனது என்பதை பகிரங்கமாகப் பறைசாற்றி நிற்கின்றன.

பெரும்பான்மைச் சிங்களத் தேசியக் கட்சிகள் பிளவுபட்டுத் துண்டு துண்டாக இருக்கின்ற இந்தக் காலத்தில் ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்படும் செல்லுபடியாகக்கூடிய வாக்குகளில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஐம்பது சதவீதத்திற்கும் சற்று (ஒரு வாக்குத்தானும்) பெரும்பான்மை பெறுவதற்கு சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவு இன்றியமையாததாக அமையும். இந்தச் சூழ்நிலையைத் தமிழ்த் தேசியத் தலைமைகள் தமிழ் மக்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அரசியல் வியூகங்களை வகுக்காமல் மாறாக விவேகமற்றுக் கோமாளித்தனமாக தமிழர் ஒருவரை வேட்பாளராக நியமிக்கும் தீர்மானம் மதிகெட்ட செயலாகும்.

‘சூடு கண்ட பூனை அடுப்படி நாடாது’ என்பது முதுமொழி. ஆனால், தற்போதுள்ள தமிழ்த் தேசியத் தலைவர்களுக்குச் சூடு சொரணை ஒன்றும் கிடையாது போலிருக்கிறது.

ஏனெனில், அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி எதனைச் சாதிக்கப் போகிறார்கள்? எதுவுமேயில்லை.

இவர்களின் தேவைப்பாடு என்னவென்றால் இப்படியான அரசியல் ‘ஸ்ரண்ட்’ டுகள் மூலம் வடக்குக் கிழக்குத் தமிழர்களைக் கொதிநிலையில் வைத்துக்கொண்டு தமக்கு விளம்பரம் தேடுவதுதான். இது பூனைக்கு (தமிழ்த் தேசியத் தலைவர்களுக்கு) விளையாட்டாக இருக்கலாம். ஆனால், எலிக்கு. (தமிழ் மக்களுக்கு) இது மரணமாகும். தற்போதைய தமிழ்த் தேசிய அரசியலுக்குப்

“பூனைக்கு விளையாட்டு எலிக்கு மரணம் அரசியல்” எனப் பெயர் சூட்டினாலும் அதுவும் பொருத்தமே. இவ்வாறான மதியீனமான தமிழ்த் தேசியத் தலைமைகளின் வெற்று வேட்டுக்களினால் நிலைதடுமாறுவது தமிழர்களின் தலைவிதியே……   ……      தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.