கதைகள்

“பயணம்” ….. சிறுகதை ….. சோலச்சி.

சங்கர் சொந்தமாக லாரி வாங்கி அவனே ஓட்டி வந்தான். எந்தவிதமான குடிப் பழக்கமும் இல்லாதவன். கிளினர் வேலுச்சாமியோ சங்கருக்கு பயந்துகொண்டு ஒதுக்குப்புறமாக சென்று குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். தன்னை விட வயதில் மூத்தவர் என்பதால் தனது கோபத்தை வேலுச்சாமியிடம் பல நேரங்களில் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. குடித்து விட்டு வந்தால் பக்கத்துலயே சேர்த்துக்கொள்ளமாட்டான் சங்கர்.

நான்கு வழிச் சாலையில் சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் போது இரவு நேரங்களில் அயிரமலை வரும்போதெல்லாம் தன்னைறியாமல் வேலுச்சாமி குசியாகி விடுவார். எத்தனையோ முறை சங்கர் கண்டித்தும் அவர் மாறுவதாக இல்லை. மனைவியை இழந்தவர் என்பதால் காலப்போக்கில் சங்கரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான். ஆனால் பாதுகாப்போடு செல்ல வேண்டும் என்று எச்சரித்து அனுப்புவான்.

நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் அத்தனை பெட்டிக்கடைகளிலும் பாதுகாப்பு கவசங்கள் தாராளமாக விற்பனைக்கு கிடைத்தன. சிலநேரங்களில் ஆரம்பசுகாதார நிலையங்களில் முகப்பில் வைத்திருக்கும் பெட்டிகளிலிருந்து ஏழெட்டு பாதுகாப்பு உறைகளை அள்ளி வந்துவிடுவார்.

”அதையெல்லாம் மறச்சு வையிங்கண்ணே. பெத்த புள்ளைக தோளுக்கு மேல வளந்துட்டானுக….இன்னமும் ….” என்று சங்கர் பேச்சை இழுக்கும்போதெல்லாம்…

”விடு தம்பி …. மண்ணு திங்கிறத மனுசன் திங்கட்டும். ஒவ்வொரு சாமியும் ஒலகத்துல அவதாரம் எடுத்ததே அதுக்குத்தானே தம்பி. எந்த சாமியாச்சும் அவதாரம் எடுத்து இந்த

மண்ணுக்கும் மனுசனுக்கும் இன்னத பண்ணுச்சுனு சொல்லுங்க பாக்கலாம். இப்ப வரைக்கும் எந்த சாமியும் எதையும் கண்டுபுடிக்கல. கண்டு புடுச்சதெல்லாம் நாமதான். ம்……அந்தக்காலத்துலருந்தே ஆண்டவனும் அரசனும் அதுலதாயா ஆழமா முக்குளிச்சு நீராடிருக்கானுக. ஒன்னுரெண்டு அரசனுக ஒழுக்கமா வாழ்ந்துருக்கலாம். ஏதாவது நல்லது செஞ்சு… இன்னாருதான் இத இத கட்டுனாரு.. வெட்டுனாரு.. ஒட்டுனாருனு வரலாறு இருக்கு. ஆனா இந்த…” என்று தத்துவம் பேச ஆரம்பித்துவிடுவார் வேலுச்சாமி.

”அண்ணே… நீ சொல்றது எல்லாமே உண்மைதாண்ணே. இல்லேனு என்னைக்காச்சும் மறுத்து சொல்லிருக்கேனா. இல்ல வேற யாரும்தான் இல்லேனு மறுத்து சொல்ல முடியுமா… இப்பவே மணி ஒன்றையாயிருச்சு… உச்சில இருந்த நிலா மேற்கால பக்கமா சாஞ்சுருச்சு. சீக்கிரம் போய்ட்டு வந்துரு… வழவழனு இழுத்துக்கிட்டு இருக்காத. விடியக்காத்தால நாலு மணிக்கெல்லாம் செல்லையா தோப்புக்கு வண்டி போயி ஆகனும். கையி நெறையா இருக்குனு காச ரொம்ப அள்ளிக் கொடுத்துறாத”

”மனசார சந்தோசப்படுத்துறவங்க மனச நோகடிக்ககூடாது தம்பி….”

“அய்யோ… அண்ணே… ஆள விடு. அர்த்த ராத்திரில ஏதாவது தத்துவம் பேசி ஏம்மண்டைய கொடஞ்சுறாத…” என்றான் சங்கர்.

”பாதிலயே விட்டுட்டுப் போன அந்த மதினி மேலதான் எனக்கு கோபம் வருது. ஒழுங்கா நேரத்துக்கு சாப்ட்டுக்கிட்டு ஒடம்ப கவனுச்சுக்கிட்டு இருந்திருந்தா நோக்காடு வந்து சாகுற நெலம வந்துருக்குமா..? என்ன பண்ணுறது இந்த மாதிரி ஆளுகளுக்கு இப்புடி ஒரு எடம் இல்லன்னாலும் அடுத்தவன் வீட்டுக்குள்ள நொழஞ்சு பல குடும்பத்தக் கெடுத்துருவானுக” முணங்கிக்கொண்டே லாரியை புளிய மரம் ஓரமாக நிறுத்தினான்.

கும்மிருட்டில் வண்டியை நிறுத்தியதுமே கனகாம்பர செண்டு வாசனை வேலுச்சாமியை சுண்டி இழுத்தது. முத்தெடுக்கும் வித்தைகளை முறையாக கற்றுத்தேர்ந்து கண்டெத்த இன்பங்களை காசுக்காக வாரி இறைக்கும் வசீகர சீமாட்டிகள் புதர்களின் ஓரங்களிலிருந்து புற்றீசலென பறந்து வருவார்கள். பாக்கெட்டுக்கு ஏற்ற பதுமைகளை பருகிக்கொள்ளலாம். சொர்க்கத்தைக் காட்டும் சுந்தரிகளின் வருமானத்திலிருந்து காவல் நிலையத்திற்கும் பெரும் தொகை செல்வதால்தான் அயிரமலை பகுதியை காவல்துறை எப்போதும் கண்டு கொள்வதில்லை.

பின்னால் வந்து கொண்டிருந்த லாரியும் சங்கரின் லாரி அருகில் மெதுவாக நின்றது. ஊத்துக்குளி முத்துராமன்தான் அந்த லாரிக்கு ட்ரைவராக இருந்தார்.

”என்ன மாப்ள… ஒங்காளு எறங்கிட்டாரா. பாத்துயா. அந்தாளுகூட சேர்ந்து ஒனக்கும் அந்த வாடை ஒட்டிக்காம. சூடு தணிக்க போறேனு பலபேரு சீக்கிரமே வீட்டுக்குள்ளயே சொணங்கி படுத்துக்கப் போறானுக. அப்பதான் எளமயில ஆடுன ஆட்டமெல்லாம் தெரியப்போவுது”

”ஒனக்கு அந்தப்பழக்கமே இல்லயா மாமு”

”எத்தன நாள் ஆனாலும் நமக்கு வீட்டுச் சாப்பாடுதான்டி மாப்ள. ஏந்தங்கம் எத்தன நாள் ஆனாலும் காத்துக்கிட்டு இருப்பாயா. ஒங்க ஆளுக்கு இன்னமும் சின்னப்பையனு நெனப்பு போல.. வர்றேன் மாப்ள….” ஒலி எழுப்பியவாறு லாரியை ஓட்டிச் சென்றார் முத்துராமன்.

கையை மட்டும் அசைத்து புன்முறுவலோடு வழியனுப்பினான் சங்கர். ஒன்றிரண்டு வாகனங்கள் தள்ளித்தள்ளி நின்றன. அவர்களில் யாரேனும் ஒதுக்குப்புறமாக ஒதுங்குபவர்களாக இருக்கலாம். அந்தப் பகுதி பெரும் காடாக இருந்தது. அந்தப் பகுதியைச் சுற்றி பத்துக் கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்களே கிடையாது. இரவு நேரங்களில் ஆள்அரவமற்ற பகுதியாக இருந்தது.

அந்தக்காட்டுப்பகுதியில்தான் ஆண்பிணம் ஒன்று சில மாதங்களுக்கு முன் கிடந்தது. பிணத்துக்கு அருகில் அய்ந்தாறு சாராய பாட்டில்களும் தண்ணீர் பாட்டில்களும் நொறுக்குத் தீனிகளும் கிடந்தன. புதர் ஓரமாக துணியில் சுத்தியபடி வெறும் துணிப்பையும் கிடந்தது.

காவல்துறையினர் வழியில் செல்லும் வாகனங்களையும் துருவித்துருவி விசாரித்ததில் குதிரையூரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரஞ்சித் என்பது தெரியவந்தது. கட்டித் தழுவ வந்த இடத்தில் ஏற்பட்ட கொலைச் சம்பவம் என்பதை உறுதி செய்திருந்த காவல் துறையினர் கவிதா என்ற பெண்ணை கைது செய்திருந்தனர்.

புது ஆட்கள் யாராவது அந்த இடத்தில் வண்டியை ஓரங்கட்டினால்.. நெடுஞ்சாலையில் ரோந்து செல்லும் காவல்துறையினர் கொலைச் சம்பவத்தைச் சொல்லி வண்டியை

நிறுத்த அனுமதிப்பதில்லை. நீட்ட வேண்டியதை நீட்டினால் காவல்துறை வாகனம் வாங்கிக் கொண்டு சென்றுவிடுவதாகவும் இருந்தது. பழகிய ஆட்களிடம் எப்போதாவது சில்லறை அதிகம் பறிப்பதற்காக சிடுசிடுனு நடப்பது போல் முகத்தைக் காட்டிக் கொள்வர்.

அதிகாலை இரண்டு மணியளவில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டு இருக்கும்போதுதான் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையின் ஓரத்தில் குப்புறக் கிடந்தது. நான்கு வழிச் சாலையில் இதுபோன்ற விபத்துகள் நடப்பது சாதாரணமான ஒன்று. வழிப்பறி கொள்ளையர்கள் வேண்டுமென்றே வாகனங்களை கண்சிமிட்டும் நேரத்தில் விபத்துக்குள்ளாகிவிட்டு கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓடும் நிகழ்வுகளும் அடிக்கடி நிகழும். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் இதுபோன்ற விபத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

”தம்பி நீ பாட்டுக்கு வண்டிய நிறுத்தாம போய்யா. எவன் செத்தா நமக்கென்ன இல்ல பொழச்சாத்தான் நமக்கென்ன. ஏழெட்டு மாசத்துக்க முன்னாடி இப்படித்தான் நொறுங்கி கெடக்கவும் காப்பாத்துனோமே மறந்துட்டியா… அதுக்கு சாட்சி சொல்லியே இன்னும் கேசு முடியல. கோர்ட்டுக்கும் வாசலுக்குமா மாசத்துக்கு ஏழுதடவ அலைய வேண்டி கெடக்குது. நமக்கு எதுக்குய்யா ஊருஒலகத்து வம்பெல்லாம்….”

எதையும் காதில் வாங்காதவனாய் அவசர அவசரமாக வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினான் சங்கர்.

வண்டிக்குள் முன்னிருக்கையில் ஒருவரும் பின்னிருக்கையில் ஒருவருமாக இரண்டு பேர் முனங்கிக் கொண்டு கிடந்தனர். உடலெங்கும் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு தனது செல்போன் மூலம் தகவல் கொடுத்தான். ஆம்புலன்ஸ் வருவதற்குள் இருவரும் சேர்ந்து அவர்களை வெளியே தூக்கினர். அதில் ஒருவர் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார். தண்ணீர் புட்டியிலிருந்து அவர்கள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து தண்ணீர் குடிக்க வைத்தான்.

அர்த்த ராத்திரியில் கரிச்சான் குருவிகளும் ஆட்காட்டி பறவைகளும் அலறிக்கொண்டிருந்தன. ரோட்டுல எத்தனையோ வண்டிவாசில மனுச மக்க போய்க்கிட்டு இருக்கானுக. அவனுகளுக்கு இல்லாத ஈரமனசு இந்தப் பறவைகளுக்கு இருக்குதே… என்று நினைத்துக்கொண்டான் சங்கர். இந்தமுறை

காவலர்கள் சங்கரையும் வேலுச்சாமியையும் கேள்விகளால் துளைத்தெடுக்கவில்லை.

”நல்லது செஞ்சா ஆயிரம் பிரச்சினை வரத்தான் செய்யும். பயந்து ஒதுங்கியே கெடந்தா யார்தான் நல்லது செய்யிறதாம். இந்த நெலம நமக்குனு இல்ல யாருக்குமே வரக்கூடாதுண்ணே. நம்ம வாழ்க்கை ஒரு பயணம்ண்ணே. அந்தப் பயணத்துல எதுவேணாலும் நடக்கலாம். பத்தோட பதினொன்னா நாம வாழ்றதுல அர்த்தமே இல்லண்ணே…”

ம்…ம்… என்று ஆமோதித்துக்கொண்டே லாரியின் மறைவில் நின்று பீடி குடித்துக்கொண்டு இருந்தார் வேலுச்சாமி.

”அந்தக் கருமாந்திரத்தையும் விட்டுத் தொலைய மாட்ட… நாத்தம் புடுச்ச இந்தப் பீடியையும் விட மாட்ட. ஒழுங்கா தூக்கிப் போட்டுட்டு ஓரமா ஒக்காந்துக்க. பக்கத்துல வந்துறாத..” திட்டிக்கொண்டே லாரியை ஓட்டினான் சங்கர்.

லாரி ட்ரைவருக்கு பொண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டேனு சொன்ன சேவுகனை ”தூரம் தொலைவுல தெரியாத எடத்துல கட்டிக் கொடுக்குறதுக்கு.. தெரிஞ்ச எடத்துல கட்டிக்கொடுக்குறதுல என்ன தப்பு இருக்கு. அதுவும் அந்தப் பையங்கிட்ட அப்புடி இப்புடினு சொல்லறமாறி தப்பான பழக்கம் ஏதும் இல்ல. இப்புடி மாப்பள கெடக்கிறதே பெருசு” என்று சொல்லி ஒருவழியாக சம்மதிக்க வைத்தாள் வெள்ளையம்மாள்.

மாரிக்கண்ணுவும் சங்கரைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தாள். இருவருக்கும் புளியக்கருப்பர் கோயிலில்தான் திருமணம் நடந்தது. பதினைந்து நாட்கள் லாரிக்கு விடுமுறை அளித்திருந்தான் சங்கர்.

சங்கரும் மாரிக்கண்ணுவும் ஆசை தீர விளையாட தீர்மானித்து அவர்களுக்கான களத்தை அமைத்தனர். களம் கட்டுக்கடங்காமல் ஆசை பெருகிக் கொண்டே போனது. லாரிக்கான விடுமுறையை மேலும் பதினைந்து நாட்கள் நீட்டிப்பு செய்தான். உலக சொர்க்கம் இங்கல்லவா உறங்கிக் கிடக்கிறது என்று தேன் நிலவை விட்டு விலகாதவனாய் இருந்த சங்கரை வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பி வைத்தாள் மாரிக்கண்ணு.

”என்ன… தம்பி லீவு போதுமா…” என்று கிண்டலடித்த வேலுச்சாமியின் கேள்விக்கு உதடுகளை திறக்காமல் சிரித்தான். இப்படியே இல்லறமும் தொடங்கி மாதங்கள் சில கடந்தன.

மாரிக்கண்ணு நான்குமாத கர்ப்பிணியாக இருந்தபோது இரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. அவளுக்கு எச்ஐவி தொற்று இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார் டாக்டர். சங்கருக்கும் இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. சங்கருக்கும் அந்தத் தொற்று இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் வேண்டிய ஆலோசனைகளை கூறி மருந்து மாத்திரைகளையும் வழங்கினர்.

வானத்துக்கும் பூமிக்கும் குதிகுதியென்று குதித்து ஆர்ப்பாட்டம் செய்தாள் வெள்ளையம்மாள்.

”சொந்தக்காரங்கனுதானே பொண்ணக் கட்டிக் கொடுத்தேன். ஒன்னுக்கு மூனு தடவ கோயில்ல சவுனம் கேட்டேனே. சவுனம் கிச்சு கிச்சுனு சொல்லுச்சே. அந்த சாமிக்கி நெசமாலுமே கண்ணு அவுஞ்சு போச்சே. ஒத்தப் புள்ளய பொத்தி வளத்து அவனுக்கு கட்டிக்கொடுத்தா நோவு தொத்திக்கிருச்சே. நல்ல புள்ளனு ஏமாந்து தொலச்சுட்டனே..”

“வெளுத்ததெல்லாம் பாலுனு நம்பாதடினு அன்னக்கே சொன்னேனே கேட்டியா. பொண்டாட்டிங்கிறவ புருசன மதிக்கனும்.. பொதுமக்க அரசன மதிக்கனும்னு… எத்தனதடவ சொல்லிருப்பேன். இப்பப் பாரு எல்லாமே ச்சீனு போயிருச்சு..” என்று கத்திக்கொண்டே வெள்ளையம்மாளை மிதிமிதியென்று மிதித்து தள்ளிவிட்டார் சேவுகன்.

”ஒருநாளும் கை நீட்டி இப்புடிப் பண்ணாதவரு… புள்ள இந்த நெலமைக்கு ஆளாகவும் மனுசன் தவிக்கிறாரே” என்றுதான் வேதனைப்பட்டாள் வெள்ளையம்மாள்.

நல்லாருந்த சங்கர குடிகாரப்பய வேலுச்சாமிதான் கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கிப்புட்டான் என்று ஊருக்குள் சிலர் தன் காதுகேட்க பேசும்போதெல்லாம் என்ன சொல்வதென்று தெரியாமல் கூனிக்குறுகி போனார் வேலுச்சாமி.

சங்கரும் மாரிக்கண்ணும் ஒரே வீட்டில் இருந்தாலும் பேச்சுவார்த்தை அறுந்து போய்தான் இருந்தது. யாரோ எவரோ என்றுதான் மாரிக்கண்ணு இருந்தாள். மாரிக்கண்ணுவிடம் கண்ணீர்விட்டு அழ வேண்டும்போல் இருந்தது. அவளோ சங்கரை முழுவதுமாய் வெறுக்கத் தொடங்கியதால் கூனிக்குருகிப் போனான் சங்கர்.

குழந்தை பிறந்த பிறகும் சங்கர் மீது கோபம் குறையாதவளாய் இருந்தாள் மாரிக்கண்ணு. அவனைக் கழுத்த நெரிச்சு கொல்லனும் போலிருந்து. நம்பி வந்து ஓங்கிட்டதானே முந்தான விரிச்சேன். வேற ஏதோ முந்தானையில நொடங்கிப் படுத்துப்புட்டு கூசாம வந்து ஏங்கிட்டயும் படுத்து ஏம்புட்டு வாழ்க்கைய ஒன்னுமில்லாம ஆக்கிப்புட்டியே…. என எப்போதும் கடுகடுத்துக்கொண்டே இருந்தாள் மாரிக்கண்ணு.

”சங்கரு எந்த தப்பும் பண்ணலம்மா. அவனுக்கு எப்புடி இந்த நோவு வந்துச்சுனே தெரியலயே. அவன வெறுக்காதம்மா” எவ்வளவோ வேலுச்சாமி சொன்னாலும் அவள் எந்தக் காரணத்தையும் ஏற்காதவளாய் ”பன்னியோட சேர்ந்தா கன்னுக்குட்டியா இருந்தாலும் அத தின்னுதானே ஆகனும். கூட்டு சேரும்போதே கூடுறது கழுதையா குதுரயானு பாத்துட்டுல சேந்துருக்கனும். தெருவுல போகனும் நெனச்சுட்டா கல்யாணம் காச்சிய நெனச்சுப் பாக்கலாமா…” என்று எடுத்தெறிந்து பேசினாள்.

தென்றலாய் வீசிக்கொண்டிருந்தவளை சூறைக்காற்று சுருட்டிக்கொண்டு போனால் யார்தான் வேதனைப்பட மாட்டார்கள். தன் வாழ்க்கை இப்படியா போகும் என்று மாரிக்கண்ணும் வேதனையில் உக்கிப் போனாள்.

இருந்த பணமெல்லாம் வைத்தியம் செய்வதற்கே கரைந்து போனது. லாரியை விற்றுவிட்டு பழைய ட்ராக்டர் ஒன்றை வாங்கி அக்கம்பக்கத்தில் சிலகாலம் பிழைப்பு நடத்தி வந்த சங்கருக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை.

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கோபால்சாமி நிலம்வாங்குவதற்காக தனது காரில் வந்திருந்தார். ஊருக்குள் வேலுச்சாமியை பார்த்ததும் ”நீங்கதான் போன் பண்ணுனிங்களா” என்று கட்டியணைத்து கண்ணீர் விட்டார். கோபால்சாமிக்காக காத்திருந்த வேலுச்சாமிக்கு ஒன்றும் புரியவில்லை.

”ஒங்க கூட ஒரு தம்பி இருந்துச்சே. அவரு நல்லா இருக்காரா…”

தலையை அசைத்தார் வேலுச்சாமி. ரெண்டு பேரும் ஒன்னா இருக்கதால எங்கிட்டாவது பாத்துருப்பாங்க. நாம எத்தனையோபேர பாக்குறோம்.. எல்லாரையும் நெனப்புல வச்சுக்கிட்டே இருக்க முடியுமா…? யாரா இருந்தா என்ன.. எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டி வைப்போம். நமக்கு காரியம் ஆனா சரி என நினைத்துக்கொண்டார் வேலுச்சாமி.

”சார் அந்தப் பையனோட நெலத்த வாங்கத்தான் நீங்க வந்துருக்கீக…” என்றார் வேலுச்சாமி.

“அப்புடியா….” ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே இருவரும் காரில் சங்கர் வீட்டுக்குச் சென்றனர்.

சங்கரின் மூன்று வயது மகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். வாசலில் காரைப் பார்த்ததும் வேகமாக ஓடிச்சென்று மாரிக்கண்ணுவிடம் “அம்மா…காயி.. அம்மா…காயி…”என்றாள். வண்டிச் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார் சங்கர்.

காரை விட்டு இறங்கிய கோபால்சாமி சங்கரைப் பார்த்ததும் சங்கரின் கைகளைப் பிடித்து “என்னோட உசுர காப்பாத்துன சாமி நீதானய்யா… இத்தன வருசமா ஏம்புட்டு கண்ணுலயே மாட்டலயே…” என்று கண்கலங்கினார். எதுவும் புரியாதவனாய் வேலுச்சாமியைப் பார்த்து என்ன என்பது போல முகமசைத்தான். அவரும் ஏதும் தெரியாதவராக உதடுகளைப் பிதுக்கினார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் அர்த்த ராத்திரியில் நான்குவழிச் சாலையில் நிகழ்ந்த விபத்தினை நினைவுபடுத்தினார் கோபால்சாமி. ”அந்த ரெண்டு பேர்ல நானும் ஒருத்தன். இன்னொருத்தரு எங்க பெரியம்மா மயன்தான். ரெண்டு வருசத்துக்கு முன்னாடிதான் அவரும் எறந்து போனாரு…”

”எப்புடி செத்தாரு..” என்பதுபோல் புருவங்களை உயர்த்தினான் சங்கர்.

“அந்த ஆளுக்கு சபளப் புத்தி ரொம்ப தம்பி. கண்ட எடமெல்லாம் நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டு வாயி வச்சு வராத நோயி வந்துருச்சு. அன்னக்கிகூட அவருக்கு வைத்தியம் பாக்கத்தான் மதுரக்கி கூட்டிட்டு போய்க்கிட்டு இருந்தேன்….” என்று கோபால்சாமி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இடைமறித்தார் சங்கர்.

”தப்பு செஞ்சவன் ஒருத்தன் தண்டனைய அனுபவிக்கிறவன் ஒருத்தன்னாய்யா. ஒதவி செய்யப்போயி இப்ப இவன் குடும்பமே நடுத்தெருவுல நிக்கிதுய்யா….” வேலுச்சாமி சொன்னபோதுதான் விபத்தில் தன் உள்ளங்கையில் தகரம் ஒன்று கிழித்து இரத்தம் கொட்டியதும் காயத்தைக் கவனிக்காமல் இருவரையும் காப்பாற்றியதையும் நினைத்து அந்தத் தழும்பைத் தடவிப் பார்த்தான் சங்கர்.

”இனி அழுது என்ன…. ஆத்திரப்பட்டு என்ன…. விபத்து நடக்கும்போது கையில ஒறைய மாட்டிக்கிட்டா காப்பாத்த ஓட முடியும். ஏம்புள்ளக்கி அந்த நோவு வராம டாக்டருக காப்பாத்திட்டாங்க. அது போதும்” துயரம் கலந்த சிரிப்போடு மாரிக்கண்ணுவை திரும்பிப்பார்த்தான் சங்கர்.

வீட்டுக்குள் சென்ற மாரிக்கண்ணு கல்யாணப் புகைப்படத்தை கன்னத்தோடு அணைத்து அளவில்லா முத்தங்களை வாரிவழங்கியவாறு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

 

 

Loading

5 Comments

  1. அருமை. இதுக்கு தான் ரொம்ப நல்லவனா இருக்க கூடாதோ என்று நிறையபேர் தவறான வழியில் செல்கிறார்களோ.

  2. எனது படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் தோழமைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்
    ப்ரியங்களுடன்
    சோலச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.