கட்டுரைகள்

வாக்குமூலம்! ….. 87 ….. தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்.

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த ரி. சரவணராஜா சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை விவகாரத்தில் தனது நீதித்துறைக் கடமைகளைச் செய்த காரணத்தால் அச்சுறுத்தலுக்குள்ளானதாகக் காரணம் கூறப்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தையொட்டி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நீதிபதிக்கு ஆதரவாகவும் ‘ரெலோ’ – ‘புளொட்’ – முன்னாள் ஈபிஆர்எல்எஃப் (இந்நாள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி) – தமிழ்த் தேசியக் கட்சி – ஜனநாயக போராளிகள் கட்சி -தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்த ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் 20.10.2023 அன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவியதாக முன்னெடுத்திருந்த ஹர்த்தால் (பொது முடக்கம்) போராட்டம் அண்மையில் இதே கட்சிகளால் இதே விவகாரத்தை முன்னிறுத்தி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தைப் போலவே இதுவும் பிசுபிசுத்துப் போயுள்ளது.

இந்த விவகாரத்தை முன்னிறுத்திப் பல கேள்விகள் எழுகின்றன.

கேள்வி-1

இந்த நாட்டின் நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பை மீறிக் குருந்தூர்மலையில் விகாரை கட்டப்படுகின்றதென்றால் – தீர்ப்பை வழங்கிய நீதிபதியையும் அத் தீர்ப்பையும் விமர்சித்துப் பாராளுமன்றத்திலும் உரையாற்றப்படுகின்றதென்றால் நீதித்துறையினதும் அந்நீதித் துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையினதும் அதன் சுயாதீனத் தன்மையினதும் எதிர்காலம் என்ன? இது முழு நாட்டிற்கும் பொதுவான கேள்வி. ஒட்டு மொத்த இலங்கையரும் சாதி மத இன பேதங்களைக் கடந்து சிந்திக்க வேண்டிய விடயம்.

கேள்வி-2

சட்டத்துறை சார்ந்தவர்கள் அவர்கள் சட்டத்தரணிகளாக இருந்தாலும் சரி அல்லது நீதிபதிகளாக இருந்தாலும் சரி வழக்கு ஒன்றில் சாட்சியாக வருபவருக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் பயப்படாமல் நடந்ததை – உண்மையைச் சொல்லும்படிதான் உபதேசம் செய்வார்கள். அப்படிச் சாட்சிக்கு உபதேசம் செய்யும் நீதிபதியே அச்சுறுத்தலுக்குப் பயந்து நாட்டை விட்டு

வெளியேறுகிறார் என்றால் உபதேசம் ஊருக்குத்தானே தவிர உனக்கல்லடி என்பதா? நீதிபதி வெளிநாடு சென்றுள்ளதை முழுமையாக நியாயப்படுத்த முடியாது.

கேள்வி-3

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. (கனடா சென்றிருப்பதாகக் கதை). வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கும் அவர் பகிரங்க வெளியில் தனக்கு என்ன நடந்தது என்பது குறித்த வாக்குமூலம் எதனையும் அதுவும் ஒரு நீதிபதி இதுவரையும் வெளிப்படுத்தவில்லை. நிலைமை

?

இப்படியிருக்கும்போது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அதனை மும்முரமாகத் தூக்கிப்பிடித்ததில் அர்த்தம் உண்டா? வழமைபோல் தமிழ்த் தேசியக் கட்சிகள் இதிலும் அவசரப்பட்டு இதனை அரசியலாக்கியுள்ளன.

கேள்வி-4

மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு விடயத்தை – மக்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு விடயத்தை- மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய ஒரு விடயத்தைச் செய்தால்தான் அது சாதனையாகக் கருதப்படும். ஆனால், தமிழ் ஊடகங்களும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சாதனை நிகழ்த்தியதாக அவரைப் போற்றித் துதிபாடின. இதில் என்ன சாதனை நிகழ்ந்திருக்கிறது? நாட்டிலிருந்து சவால்களை எதிர்கொண்டு வெற்றியீட்டுவதுதானே உண்மையில் சாதனை. வாழ்க்கையை அல்லது பிரச்சினைகளை சவாலாக ஏற்று வாழ்ந்து வெற்றியிலக்கை அடைய வேண்டுமே ஒழிய பயந்து ஒளிந்து ஓடுவது சாதனையல்ல.

கேள்வி-5

தமிழர்களுடைய அரசியலில் கடந்த காலங்களில் நிகழ்ந்த – நிகழ்த்தப்பெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் -கடையடைப்பு-வீதி மறியல்-ஊர்வலம்-பேரணி-உண்ணாவிரதம் என்று எல்லாவிதமான ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவும் தமிழர்களுடைய சிறு பிரச்சினையைத்தானும் தீர்த்து வைக்காதபடியினால்த்தானே தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆயுதப் போராட்டமும் தடம் மாறியதால் இறுதியில் எதனையும் பெற்றுத்தராது அழிவுகளையே அடைவுகளாகத் தந்துவிட்டு விடைபெற்றது. அப்படியிருக்கும் போது மீண்டும் பழைய போராட்ட அணுகுமுறைகள் பலனளிக்குமா? அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதில் தமிழ்ச் சமூகம் பின்னிற்கே நிற்கிறது.

கேள்வி-6

இத்தகைய மனிதச் சங்கிலி மற்றும் ஹர்த்தால் (பொது முடக்கம்) போராட்டங்கள் சரியா? பிழையா? பலனளிக்குமா? என்பதற்குமப்பால் ஒரு

மக்கள் போராட்டமாக – வியூகமாக இவை கட்டமைக்கப்படவில்லை. மக்களின் கருத்துக்கள் பரவலாக அறியப்பட்டதாகவோ – மக்கள் முறையாக அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவோ – ஒருமித்த கருத்துருவாக்கமோ இல்லாமல் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் எனப்படுபவர்கள் மட்டும் கூடி ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போன்ற தீர்மானங்களை எடுத்து ஊடக அறிக்கைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மட்டுமே ஒரு போராட்டத்தை அறிவிப்பதானால் அப்போராட்டம் ஒரு வெகுஜனப் போராட்டமாக வடிவெடுத்து விடுமா? கட்சிகள் அல்லது தனி நபர்கள் மட்டும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் போராட்டமாகக் கொள்ள முடியாது. அதனால்தான் தமிழ் மக்கள் இப்போராட்டங்களில் இருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்கள்.

இப் போராட்டங்களில் மக்கள் நலன்கள் பெரிதாகச் சம்பந்தப்படவில்லையென்றே படுகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்கும்-தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது கையாலாகாத் தனத்தை மூடி மறைப்பதற்கும்-சில தனிநபர்கள் தங்கள் தேர்தல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும்-ஊடகங்களுக்குச் செய்தித் ‘தீனி’ போடுவதற்கும்-போராட்ட விளம்பரங்களைக் காட்டிச் சில ‘போலி’ த் தமிழ்த் தேசியவாதிகள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடமிருந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொள்வதற்குமே இத்தகைய போராட்டச் ‘சிலுசிலு’ ப்புகள் உதவுகின்றன. இவற்றினால் மக்களுக்குப் ‘பலகாரங்கள்’ எதுவுமே கிடைக்க மாட்டாது.

மேலும், முன்பு நடந்த மனிதச் சங்கிலிப் போராட்டமும் 20.10.2023 அன்று நடத்தப்பெற்ற பொதுமுடக்கப் போராட்டமும் முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கேட்டு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படியானால் அந்த நீதி என்ன? வெளிநாடு சென்றுள்ள நீதிபதியை நாட்டுக்கு அழைத்து மீண்டும் நீதிபதிப் பதவியை வழங்குவதா? அழைத்தால் மீண்டும் அவர் நாட்டுக்கு வருவாரா? வந்தாலும் நீதிபதிப் பதவியை மீண்டும் அவர் விரும்புவாரா? நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச் சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை என நீதி அமைச்சர் வேறு அறிவித்திருக்கிறார். நீதிபதிக்கு நீதி கேட்கும் இப்போராட்டத்தின் இலக்கு என்ன என்பதில் தெளிவில்லை. யாருக்கு நீதி கேட்டுப் போராட்டமோ அவர் இப்போராட்டம் குறித்து வாயே திறக்கவில்லை என்பது வேடிக்கை வேறு.

வடக்குக் கிழக்குத் தமிழர்களைப் பொறுத்தவரை இதுவரையிலான அவர்களது அரசியல் செல்நெறி எதிர்காலத்தில் நூற்றிஎண்பது (180) பாகைக்குள்ளாலே திரும்ப வேண்டியது அவசியம். அதனைத் தற்போதுள்ள ஈழத் தமிழ்த் தலைவர்கள் எனப்படுபவர்கள் செய்யமாட்டார்கள். மக்கள்தான் தீர்மானித்துச் செயற்பட வேண்டும். செயற்பாட்டுத் திறன்மிக்க மாற்று அரசியல் தலைமையொன்றினை -சக்தியொன்றினை தமிழ் மக்கள்

அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தையே இப்போராட்டங்கள் (Bore ராட்டங்கள்) மறைமுகமாகச் சுட்டி நிற்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.