கட்டுரைகள்

மனதுக்கு பிடித்த மலேசியப் பயணம்! …. 2 …. அருணாசலம் லெட்சுமணன்.

11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 – கோலாலம்பூர்.
“இப்போது எல்லோரும் பறக்கலாம்” “Now everyone can fly” இதுதான் நாம் பயணிக்கவுள்ள விமானத்துக்கு சொந்தமான விமான சேவை நிலையமான எயார் ஏசியா நிறுவனத்தின் மகுடவாசகமாகும். இந்த மகுடவாசகத்தை உருவாக்கிய ஆளுமையின் பெயர் டோனி பெர்னாண்டஸ். 1993 டிசம்பர் 20 அன்று தனது முதல் சேவையை தொடங்கிய இவ்விமானசேவை 1996 வரையில் அரசுக்குச் சொந்தமானதாகவே இயங்கியது. தென்கிழக்காசிய வட்டாரத்தில் விமான நுழைவு சீட்டு, இருக்கை பதிவு இல்லாமல் சேவையை தொடங்கிய நிறுவனமாக தடம் பதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான தடம் பதித்தலோடு சேவையை தொடர்ந்தாலும் பெரும் கடன் சுமையால் பாரிய நட்டத்தை எதிர்கொண்டது.நாற்பது மில்லியன் ரிங்கிட் கடனோடு நிறுவனத்தை பொறுப்பேற்ற டான்ஸ்ரீ அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் தனது திட்டமிட்ட செயற்பாடுகளின் காரணமாக ஆசியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக எயார் ஏசியாவைக் கட்டியெழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது. எயார் ஏசியா நிறுவனத்தோடு துணை நிறுவனங்களாக எயார் ஏசியா இந்தோனேசியா, எயார் ஏசியா பிலிப்பைன்ஸ், எயார் ஏசியா தாய்லாந்து, எயார் ஏசியா இந்தியா ஆகியவை விளங்குகின்றன. 165க்கும் மேற்பட்ட நாடுகளோடு தொடர்புபட்ட பயண சேவையுடன் 255க்கும் மேற்பட்ட விமானங்களை சொந்தமாகக் கொண்டிருப்பதும் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களை தன்னகத்தே கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் என்று அழைக்கப்படும் இவர் மலேசிய பொருளாதாரத்துக்கு வலிமை சேர்த்தவர்களில் முக்கியமானவராக திகழ்கிறார். பொதுமக்களுக்கு மேற்கொள்ளும் சேவையை மதித்து மலேசிய அரசாங்கத்தால் வழங்கப்படும் விருதே டான்ஸ்ரீ விருதாகும். “பாங்லிமா மாங்கு நெகாரா” “பாங்லிமா செத்தியா மக்கோத்தா” ஆகிய விருதுகளே டான்ஸ்ரீ விருது என அழைக்கப்படுகிறது. இவ்வாறே மலேசியாவில் பிரயோகத்தில் உள்ள விருதுகள் வித்தியாசமான பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவ்வப்போது அவ் விருதுகளின் பக்கம் பார்வையை செலுத்தலாம்.“எயார் ஏசியா” என்றவுடன் கிவ்- 28501 விமானம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. டிசம்பர் 28.2014 அன்று 162 பயணிகளுடன் விபத்துக்குள்ளான, இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம். காணாமல் போனதாக அறியப்பட்ட இவ் விமானம் பின்னர் அதன் பாகங்கள், இறந்த பயணிகளின் உடல்கள் என மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. விமான தகவல்கள் அடங்கிய கறுப்புப்பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டது.கறுப்புப்பெட்டி என்றவுடன் கறுப்பு நிறமாக இருக்கும் என்ற பலரும் நினைப்பதுண்டு. ஆனால் இது செம்மஞ்சள் நிறமுடையது. விமானத்தில் அதிகம் சேதமடைய மாட்டாதெனக் கருதப்படும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். கறுப்புப்பெட்டி இரு பகுதிகளை கொண்டதாக அமைக்கப்பெறும்.விமானியின் அறைக்கும் தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையிலான இரண்டு மணி நேர உரையாடலின் குரல் பதிவு இதில் சேமிக்கப்பட்டிருக்கும். மற்றைய பகுதியில் விமானத்தின் வேகம், கருவிகள் மற்றும் பொறிகளின் செயற்பாடுகள், காற்றழுத்தம் உட்பட நானூறு காரணிகள் வரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தீயினால் எரிந்து சேதமுறாது. கடலுக்குள் மூழ்கினாலும் சில காலங்கள் பழுதடையாமல் காணப்படும். உயரத்தில் இருந்து விழுந்தாலும் இலகுவில் உடையாமல் எங்கு விழ்ந்ததோ அங்கிருந்தும் தகவல் அனுப்பும் தன்மையை பெற்றிருப்பது அதன் சிறப்பம்சமாகும். இதன் ஊடாகவே பல விமான விபத்துக்கள் தொடர்பான ஊகிப்புகளை உறுதிப்படுத்தப்படுகின்றன.18 ஆகஸ்ட் 2023 அன்று இடம்பெற்ற மலேசிய தனியார் விமான விபத்தில், பத்து பேர் பலியாகிய சம்பவம் மலேசியாவை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. லங்காவி தீவிலிருந்து கோலாலம்பூருக்கு மேற்கே சிலாங்கூருக்கு பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. இவ் விமானம் நெடுஞ்சாலையில் மோதுண்டதால் பாதையில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உட்பட வாகனங்களில் இருந்தவர்களும் பலியாகியமையும் குறிப்பிடத்தக்கது.இலங்கையில் விமான விபத்து என்றவுடன் 1974 டிசம்பர் 04 அன்று இரவு 10.10 மணிக்கு மஸ்கெலியா, நோட்டன் பிரிஜ், தெப்டன் பகுதியில் 191 உயிர்களைக் காவுகொண்ட மாட்டின் எயார் டி.சி 8 ரக பயணிகள் விமான விபத்தே நினைவுக்கு வரும். சப்த கன்னியர் மலை என சிறப்பிக்கப்படும் ஏழு கன்னியர் மலைத்தொடரின் ஐந்தாவது மலையில் மோதுண்டு இவ்விமானம் சிதறியுள்ளது. இறந்தவர்களில் 190 பேரின் உடல்களை தெப்டன் தோட்டம் கொத்தலென பகுதியில் புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் விமானத்தில் பணிப்பெண்னாக பணியாற்றிய பெண்னின் உடலை மாத்திரம் அவளது காதலன் இந்தோனேஷியாவுக்கு விசேட ஹெலி​ெகாப்டர் மூலம் எடுத்து சென்று அடக்கம் செய்ததாக அறிய முடிந்தது. இந்தோனேஷியா சுராபயாவில் இருந்து மக்கா நோக்கி செல்லும் போதே மேற்படி விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் விபத்தின் நினைவாக விமானத்தின் டயர் நோட்டன் நகரத்தில் நினைவு அடையாளமாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.2018ஆம் ஆண்டு கம்போடியாவில் “உலகத் தமிழர் மாநாடு” இடம் பெற்றது. அம் மாநாட்டில் “இலங்கையில் தமிழர் தொன்மங்கள்” -இராமாயணம் காட்டும் ஆதாரங்கள் குறித்த பார்வை- எனும் ஆய்வுக் கட்டுரையுடன் மாநாட்டில் பங்கேற்றேன். இவ் ஆய்வுக்கு தேவையான ஆதாரங்களாக இவ் விபத்து இடம்பெற்ற சூழலும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இராவணனின் புஷ்பக விமானம் நிறுத்தும் ஓடு பாதையோடும் தொடர்புபட்ட தளத்திற்குரிய ஆதாரங்களையும் கொண்டமைந்துள்ளமையும் கவனிக்கத்தக்கது. இன்று இராவணனின் இன அடையாளத்துடன் தொடர்புபட்ட வாதப்பிரதிவாதங்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில் அதற்கு தெளிவான பதிலாக மேற்படி தலைப்பிலான எனது கட்டுரை அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.அன்றைய தினம் (18.07.2023) என்னை அறியாமலேயே விமான விபத்துக்கள் பற்றிய எண்ண ஓட்டமே மனதில் நெருடிக்கொண்டிருந்தது. நான் அதிபராக தொழில் புரியும் பாடசாலையில் முறையாக கடமைகளை பொறுப்பளிக்க வேண்டியது, சுற்றுநிருபத்தின் கடப்பாடும் ஆகும். முறையாக பெற்றுக்கொண்ட அனுமதியின் பிரகாரம் சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் பதிந்து கடமையை பொறுப்பேற்கும் ஆசிரியர் திருமதி சுகந்தி கனகராஜிடம் பொறுப்புகளை ஒப்படைத்தேன். பின்னர் ஆசிரியர்களை காரியாலத்திற்கு அழைத்து அவர்களோடு உரையாடினேன். அவ் உரையாடலில் பொறுப்புடன் கடமையை செய்யுங்கள் என வலியுறுத்தியதோடு என்னையும் அறியாமல் தொடர்ந்து நான் வராவிட்டாலும் உங்கள் பொறுப்புகளை சரியாக செய்யுங்கள் என்றேன். ஆசிரியர்களிடமிருந்து ஏன் சேர் அப்படிச் சொல்கீறீர்கள்? என வினாத் தொடுக்கப்பட்டது. எதுவும் நடக்கலாம். விமானம் விபத்துக்கும் உள்ளாகலாம். என்ற எனது பதிலும் என்னில் ஓர் நெருடலை ஏற்படுத்தியது. நடுத்தர வருவாயில் பொருளாதார சுமையையும் பொருட்படுத்தாது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் வாசிப்பு, இலக்கியம், ஆய்வு முயற்சிகள் என்பதெல்லாம் எத்தனை அனுபவங்களை தந்திருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். என் தியாகங்களோடு இணைந்த பொறுத்துக்கொள்ளும் எனது மனைவி, பிள்ளைகள் என்றும் போற்றுதற்குரியவர்கள். அவ்வப்போது ஆறுதல் அளிக்கும் உறவுகள், நட்புகளையும் நினைத்துக்கொள்கிறேன். அனுதினமும் ஆறுதலையும் உற்சாகத்தையும் பகிர்ந்தளிக்கும் முகநூல் நட்புகள் என்னுள் காணப்படும் உணர்வை மதித்து வழங்கும் தூண்டுதலை எண்ணி அகம் மகிழ்ந்தேன்.நிலா நாயகன் என வர்ணிக்கப்படும் பி.வீரமுத்துவேலின் சந்திராயன் – 3 வெற்றியினை பார்த்து அகமகிழும் அவரது தந்தையின் உணர்வை பார்த்து ஏங்கியவானாக இதனை பதிகிறேன். எனது தந்தை உயிருடன் இருந்தபோது அண்மைய நகரத்தில் கருத்தரங்குக்குச் சென்றாலும் கூட என்னை முத்தமிட்டு நாவலப்பிட்டி நகருக்கு வந்து வழியனுப்புவார். அம்மாவின் ஆசீர்வாதமும் இணைந்திருக்கும். அந்த சுகானுபவங்களை இழந்த துரதிர்ஷ்டவாதியாக என்னை நொந்துக்கொள்வதுமுண்டு. விமான நிலையம் நோக்கிய கண்டியிலிருந்தான பஸ் பயணத்தின் போது என்னில் மிகுந்த தாக்கம் செலுத்தும் உறவினர்கள், நண்பர்களின் தொலைபேசி தொடர்பும் அந்த வேளையில் என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. அந் நல்லுள்ளங்கள் பற்றிய தகவல்களையும் அவ்வப்போது பதிவு செய்வேன்.தாய், தந்தை பற்றிய ஏக்கங்கள் மனதில் நிறைந்திருந்தாலும் சகோதரிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஆறுதல் அளித்த வண்ணமே, எனது கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிய நகர்வும் அமைந்திருந்தது.18.07.2023 இரவு 10:55க்கு சரியான நேரத்தில் விமானம் ஓடு பாதையில் நகர ஆரம்பித்தது. மறுநாள் பொழுது மலேசியா, கோலாலம்பூரில் புலர்ந்தது. காலை வணக்கம் மலேசியா…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.