“பெருந்திணை” …. சிறுகதை – 38 …. அண்டனூர் சுரா.
அம்மாவைப் பார்க்கணுமெனக் குணவதிக்குத் தோன்றியதைப் போலதான் சின்னத்தாளுக்கும் தோன்றியது, மகளைப் பார்க்க மனசு ஏங்கினாலும் கண்கள் தூசி கிடந்து உறுத்துவதைப் போல கடுத்தன. மகளை நினைத்து அழுததில் கண்ணீர் உப்பளம் கட்டி இமைகளின் விளிம்பை அரித்தது.
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாக இருக்க வேண்டியவள், காக்கைக் கூட்டில் பிறந்து, வளர்ந்ததும் பிரிந்துவிடும் குயில் குஞ்சாக ஆகிவிட்டிருந்தாள். காக்கையைப் போல தானும் ஏமாந்துவிட்டேன்தானோ, என்பதை நினைத்து சின்னத்தாள் நெஞ்சு புழுங்கினாள்.
ஊரார்கள் வேடிக்கையாகச் சொன்னதைப்போல அவள் என் மகள் இல்லைதானோ? நான் பிரசவித்து மயக்கத்திலிருக்கையில் குழந்தையை யாரும் மாற்றிவிட்டார்களோ, என அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவள் வயிற்றில் பிறந்த மூன்று மகள்களில் கடைசி மகள் குணவதி ஐமுக விளக்காக வளர்ந்தவள். இவளது அழகும் சிரிப்பும் கோபுர வாசலுக்கு ஏற்றதென அண்டை, அயல்வாசிகள் சொல்வதாக இருந்தார்கள். “ இவ நம்ம குடும்பத்தில பொறந்திருக்கக் கூடாதடி. வசதி படைத்தவர் வீட்டில் பேரப்பிள்ளையாக இருக்க வேண்டியவள்” எனத் தன் கணவர் உயிரோடிருக்கையில் பல முறை சொல்லி சின்னத்தாள் கேட்டிருக்கிறாள். “உனக்கும் எனக்கும் பிறந்தவ இல்லடி இவ. யார் குழந்தெயையோ நீ மாத்தித் தூக்கிட்டு வந்திட்ட” என்றும் கூட அவர் சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்வது! அவள் என் மகள்தான். என் வயிற்றில் பிறந்தவள்தான். சேற்றில் செந்தாமரை முளைப்பதில்லையா, அப்படித்தான் இவள் என்று சொல்லி தன்னை அவள் தேற்றியிருக்கிறாள்.
மூத்த இரண்டு மகள்களைப் போல குணவதியை அவள் ஏனோதானோவென்று வளர்க்கவில்லை. புளியைக் கரைத்து ரசம் வைத்தால் அவளுக்கென்று தனிக் கிண்ணத்தில் எடுத்துப் பரிமாறும் அளவிற்கு செல்லத்தவளாக வளர்ந்தாள். “இவளுக்கு மட்டுமென்ன செருவாடு வேண்டிக்கிடக்கு” என மற்ற இரு மகள்கள் கோபித்துக்கொள்ளவும் கோவப்படவும் செய்தார்கள். “அடியே, அவ பொறந்துதான்டி வீடு வெளிச்சம் காட்டுது. வீட்டுக்கு லெட்சணம் கூடியிருக்கு” என்று சொல்லி மகள்களது வாயை அடைப்பாள்.
குணவதியை அவள் பிள்ளைகுட்டியைப்போல வளர்க்கவில்லை. மான் குட்டியைப் போலத்தான் தாங்கினாள். அவள் தாங்கிய தாங்கலுக்கு அவள் சம்பாதித்துக் கொடுத்த பெயர், ஊர் கைகொட்டி சிரிக்கும் அவப்பெயராகவே இருந்தது. இதை நினைக்கையில் அவளது தலைக்குள் கோபம் வெடித்து கிறுகிறுத்தது. பத்து மாதங்கள் சுமந்து பெற்றதை, வளர்த்ததை, படிக்கவைத்ததை அறவே மறந்துவிட்டு, தலைப்பிரட்டை வால் இழந்ததும் தவளையாகத் தத்தித் தாவும் இரண்டாம் வாழ்வியாகவே குணவதியை நினைத்தாள்.
மூத்த இரு மகள்களைப்போல நல்ல பெயரோடு அவளைப் பிடித்துக் கொடுக்க, தலையாலே தண்ணீர் குடித்தாள். காமாசோமாவென்றாவது கல்யாணத்தை முடிக்க வேண்டுமெனத் துடித்தாள். “ நான் படிச்சிருக்கேன். என் வாழ்க்கய எனக்கு அமைச்சிக்கிற தெரியும். நீ விரல் நீட்டுற எடத்தில என்னால தலை நீட்ட முடியாது. எனக்குனு கனவு இருக்கு. அந்தக் கனவுப் படிதே என் வாழ்க்கய நான் அமைச்சுக்குவேன்” என மண்டிக்கணக்கில் பேசினாள் குணவதி.
கல்லூரியை சரியாகப் படிப்பாளென்று, மேற்படிப்புக்கு அனுப்பி வைத்தது தவறென்று சின்னத்தாளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் கல்லூரிப் படிப்போடு காதலையும் சேர்த்துப் படிக்கச் செய்தாள். தன்னைவிட இரண்டு வயது இளையவனை இழுத்துக்கொண்டு ஓடுவாளென்று சின்னத்தாள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. தாய்ப்பேச்சை மீறித்தான் தனக்கான இணையை அவள் தேடியிருந்தாள்.
அவளுடன் ஓடியவன், பெருந்தனக் குடும்பத்தவனாக இருந்தான். அண்டை ஊர். பெருந்தலைக்கட்டு. பத்து வேலி நிலத்திற்குள் பேரடுக்கு வீடு அவனுடையது. வீட்டின் மேல் மாடியிலிருந்து பார்த்தால் தெரியும்படியான பரந்துவிரிந்த பெருவேலி நிலம். தென்னையும் தேக்கும் ஏக்கர் கணக்கில் வளர்ந்து வானத்தை ஒட்டடையடித்துக்கொண்டிருந்தன. தோட்டத்தில் பயிர்களை அழிச்சாட்டியம் செய்யும் எலிகளை உணவில் விஷம் வைத்துக் கொன்று, தெருவில் தூக்கியெறியும் இரக்கமற்ற குடும்பம்.
அவள் படிக்கிற கல்லூரியில்தான் குணாவும் படித்தான். அவனது பெயர் குணாளன் என்றாலும் ஊரார் அழைப்பது குணா என்றுதான். குடும்பத்திற்கு ஒரே பையன். செல்லப்பிள்ளையாக வேறு இருந்தான்.
குணவதி, யாரையும் ஒருமையில் பேசி அவளது தலைக்கனத்தைக் காட்டிக்கொள்கிறவளாக வளர்ந்திருந்தாள். அத்தகையவள், ஒருவனை மட்டும் அவர், இவர் என்று மரியாதையாக விளித்துப்பேசியது சின்னத்தாளுக்கு வியப்பாகவே இருந்தது. “ யாரடி அவன், அவர் இவருனு மூச்சுக்கு முந்நூறு தடவ சொல்றீயே?” எனக் கேட்டாள் சின்னத்தாள். “ அவர்தான்ம்மா குணா” என்றாள். அவளது பதிலில் ஒரு நளினத்தனமும் வெட்கமும் தொடுக்கி இருந்தன.
“குணான்னா யாரடி?”
“குணாளன் ”
இதை அவள் சொல்லும் நேரம் பார்த்து, ஊர்ப்பெண்கள் அவளது வாசலில் நடந்து செல்வதாக இருந்தார்கள். அவர்களுக்காக ஒன்றும் பேசாமல் சற்றுநேரம் வாயடைத்து இருந்தவள், அவர்களின் தலை தூரத்தில் மறைந்ததும், “ யாரடி பெருந்தனக்காரர் மவனயா சொல்றே?” எனக் கேட்டாள்.
“ஆமாம் ” என்றாள் குணவதி. இதைச் சொல்கையில் அவளது முகம் பூரித்து மலரச் செய்தது.
“அடி அவன் ஒன்ன விட சின்னவன்டி.”
“அதனாலென்னம்மா. என்னை அவருக்கு ரொம்பவே பிடிக்கும்..” என்றவள், சற்று நேரம் தாயின் முகத்தைப் பார்த்தபடி நின்றாள். “உனக்கு?”, எனத் தாய் கேட்பாளென எதிர்பார்த்திருந்தாள். அவள் கேட்காததால் கேட்டதாக நினைத்துக்கொண்டு “எனக்கும் பிடிக்கும்” எனச் சொல்லி, உள்ளுக்குள் பூரித்தாள்.
வாசலைப் பெருக்கிக்கொண்டிருந்த சின்னத்தாள், கையில் தூர்வையோடு அவளை நோக்கி வந்தாள். “என்னடி சொன்னே, உனக்கும் பிடிக்குமா. என்னெ யார்னு நெனச்சே. அறுத்துக் கோத்துப்புடுவேன் கோத்து” அவளது நாசியும் வாயும் சொல்லும் கொல்லுமாக வெடித்தது.
தாயின் கோபத்திற்கும் முன் குணவதி அம்சடங்கி நின்றாள். அதேநேரம் தன் காதலுக்காக நான் எதையும் செய்வேன் எனச் சொல்வதைப் போல அவளது நிற்றல் இருந்தது. அவள் படித்த உடற்கல்விக்கும் அவளை விடவும் சின்னவனை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டாள், என்கிற ஊர்ச்சொல்லுக்கும் பொருத்தமிருந்தது.
ஊர் அதைமட்டுமா சொல்லியது? அவன் முடியாதென சொல்லிருப்பான். இவள் தூக்கிக்கொண்டு ஓடியிருப்பாள். ஓட்டக்காரிக்குச் சொல்லவா வேணும்? அப்படி ஓடத்தானே அவள் தாய் அவள வெளையாட்டுக் கல்லூரியில சேர்த்துவிட்டாள். தாய்க்குத் தெரியாமலா அவள் ஓடியிருப்பாள்? இப்படியெல்லாம் ஊர்வாய் எலும்புக்கடியாய் கடித்துப் பேசியதை நினைக்கையில் தொண்டையும் நெஞ்சும் பித்தமாகக் கசக்கச் செய்தன.
குணவதி பிறந்த வீட்டுக்கும், அவள் வாக்கப்பட்டு போன வீட்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இவள் குடிசைவாசி. அவன் பெருவீட்டுக்காரன். சாதியில் வேறு ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. இவள் குழிப் பணியாரம் என்றால் அவன் உசந்த கைப்பணியாரம். எலிக்கும் புலிக்கும் சரியாகுமா? அந்த வீட்டுக்குத்தான் குணவதி அம்மி மிதிக்க, படி அளக்க, விளக்கேற்ற மருமகளாகியிருந்தாள்.
“அடியே கொன்று போட்டுறுவான்க” பஞ்சடிபதவடியாய் தவித்துச் சொன்னாள், சின்னத்தாள். “அப்படி நான் செத்தா அவர் மடியிலே செத்துக்கிறேன்” எனப் பதிலுக்குப் பதில் பதிலடி கொடுத்தாள் குணவதி. சொன்னவள் வாயிலேயே அடித்தாள், சின்னத்தாள். அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அவள் பொதி மூட்டையைப் போல உட்கார்ந்திருந்தாள்.
குழந்தைப் பருவம் தொட்டே நன்றாக ஓடக்கூடியவள், குணவதி. வேகமாக ஓடுவதைப் போல பேசவும் செய்கிறவள். கொல்லைக் காடுகளில் ஆடு,மாடுகள் மேய்ந்தால் வேட்டை நாயைப்போல ஓடி விரட்டி அடிக்கிறவள், பெரிய மனுஷியாட்டம் வாய்க்கு வந்ததைப்பேசி சண்டைக்கும் நிற்பாள். அவளது அழகுக்கும் முகக்களைக்கும் அவள் பேசும் பேச்சு சற்றும் பொருத்தமில்லாதிருந்தது. இவள் பிள்ளைப் பருவமாக இருக்கையில் யாரும் அவளை அடித்துவிட்டு ஓடிவிட முடியாது. விரட்டிப்பிடித்து பதிலுக்குப் பதில் அடி கொடுத்தவள். இந்த ஓட்டம் அவளுக்கு அவளே தேடிக்கொள்ளும் வரனுக்கும் உதவுமென்று அவளேகூட எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
குணவதி குறித்த நினைவு வரும்பொழுதெல்லாம் உள்ளுக்குள், “ஓடுகாலி முண்ட” எனத் திட்டுவதாக இருந்தாள். பொழுது விடிந்தால், இருட்டினால், “விட்டிரடி, வேண்டாமடி, நமக்கும் அவங்களுக்கும் ஆவாது. அவங்க வேற நாம வேற..” எனப் படிப்படியாய் படித்துச் சொன்னதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகியிருந்தது.
மாடு, கட்டுத்தடியிலே தங்கலைன்னா, மூக்கக் குத்திப்புடணும், இல்ல வித்துப்புடணும், என ஊரார்கள் சாடை மாடையாகப் பேசியதை வைத்து, அவளை அண்ணன் மகனுக்குக் கட்டிக்கொடுக்க நினைத்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, இன்னும் ஒரு வருடம், படிக்கட்டுமே . பிறகு பார்க்கலாம், எனக் காலத்தைத் தள்ளிப்போட்டாள். மகளின் போக்கு முன்னைவிடவும் பெரும்போக்காக மாறியிருந்தது.
அண்ணன் மகன் படிக்கவில்லையென்றாலும் உழுவ நிலமும் இரண்டு தலைமுறை இருந்து வாழ மனையும் இருந்தன. அண்ணன் வீட்டிற்குச் சொல்லாமல் கொள்ளாமல் சென்று முதல் ஆளாகப் பேச்சுக்கொடுத்தாள். குணவதியின் போக்கு தெரிந்திருந்தும் அவளை ஏற்றுக்கொள்ள அண்ணன் மகன் முன் வந்தான். இவள் வயதேதான் அவனுக்கும்.
நாளைக்கே வெற்றிலை பாக்கு மாத்தியாகணும். கோயில்ல வச்சி முடிச்சிக்கலாம். ஜாதகம் பார்க்க வேண்டாம், பொருத்தம் பார்க்க வேண்டாம், என் மகள் இந்த வீட்டில்தான் விளக்கு ஏத்தணும்,..என சொல்ல வந்ததை அத்தனை அவசரமாகச் சொல்லி முடித்தாள் சின்னத்தாள். அண்ணனும் மகனும் சம்மதம் என்றார்கள். அண்ணன் மனைவி, கால் வைப்பதற்கு முன்னதாக ஆழம் பார்த்துவிட நினைத்தாள்.
“என்னங்கண்ணி தயக்கம்?” கேட்டாள் சின்னத்தாள்.
“நேர்ல வந்து ஓ மகக்கிட்ட கேட்கேன். அவளுக்கு விருப்பமுனா ஏ மவனுக்கு ஏத்துக்கிறேன் “.
மறுநாளே நேரில் வந்து கேட்கவும் செய்தாள். நேரில் கேட்ட கேள்விக்கு குணவதி நேராகவே பதில் சொன்னாள். ” நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன். என்னை விடவும் அவர் என்னை ரொம்ப விரும்புறார். அவர்கூட எங்கும் நான் சுத்திருக்கேன். என்னை அவர் கட்டிக்கிறதில் உறுதியா இருக்கார். அவருக்கு நான் துரோகம் செய்ய விரும்பல. அவர விடுத்து வேற யாரையும் நான் ஏத்துக்கப் போறதில்ல” எனப் பதிலாகச் சொன்னாள்.
அண்ணியார் அதற்கும் மேல் ஒன்றும் பேசவில்லை. வீட்டை விட்டுக் கிளம்புகையில், கடைசியாக ஒரு முறை குணவதியைத் திரும்பிப் பார்த்துவிட்டு சென்றாள். குணவதியின் முகமும் லெட்சணமும் அப்படியாகத் திரும்பிப் பார்க்கும்படியாக இருந்தன. ஊளைச்சதை இல்லாத தேகக்கட்டு. நாடியான உடம்பு. நடையில் தடகள வீராங்கனைக்குரிய நளினம் சேர்ந்திருந்தது.
அண்ணியார் பேசிச் சென்ற கையோடு வெளியூரில் திருமணம் செய்துகொடுத்திருந்த இரண்டு மகள்களையும் மருமகன்களோடு வரவைத்தாள். வந்தவர்கள் குணவதியிடம் மூச்சுக்கட்டி பேசினார்கள்.
பேசியவர்களின் தொண்டை கட்டிக்கொண்டதே தவிர, அதைக் கேட்டுக்கொண்டிருந்த குணவதியின் மனம் கட்டிக்கொள்ளவில்லை.
“யாரோ பெத்த பிள்ளைதானோ இவள். நான்தான் மாத்தித் தூக்கிட்டு வந்திட்டேனோ. என் மகளாக இருந்திருந்தால் நான் சொல்வதைக் கேட்டிருப்பாள்தானோ”, என்பதாகச் சொல்லி, நெஞ்சுக்குள் புழுங்கினாள்.
அண்ணியார் உதறிவிட்டுச் சென்ற உறவை அண்ணன் அதிகாலையில் வீடு தேடி வந்து, திண்ணையில் அமர்ந்து பேசிப் பார்த்தார். குடும்பச்சூழல், ஊர்நடப்பு, சாதி சமூகம் ,… எனப் பேசிய மாமன் பேச்சுக்கு, ம்…கொட்டியபடி இருந்தவள், ” ஏ மவன கட்டிக்க” என்றதும் எச்சிலை விழுங்கியவளாய் வெட்டவெளியைப் பார்த்தாள்.
மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி, என்பதாக எடுத்துக்கொண்ட மாமன், கல்யாண வேலையை அன்றைய தினமே தொடங்கினார். “நாளையே ஊரைக்கூட்டி வெத்திலை பாக்கு மாத்திக்கொள்ளலாம்”, என வாக்குக் கொடுத்துச் சென்றார். அன்றைய இரவே குணவதி, குணாவுடன் ஓடிவிட்டிருந்தாள்.
தன்னோடு சேர்த்துத் தன் அண்ணனையும் தலைகுனிய வைத்துவிட்டதாக நெஞ்சுக்குள் பொங்கினாள், சின்னத்தாள். அவமானம் தாங்கமுடியாமல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மகளைத் தேடச் செய்தாள். “பாரு, குட்டிய ஓட்டிவிட்டுட்டு தேடவும் செய்றாள்” என ஊர்வாய் அவள் காதுபடவே நழுங்கிக் கொட்டியது. அச்சொற்கள் அவளுக்குள் நுழைகையில் செத்துவிடலாம் போலிருந்தது. அவள் ஓடிப்போன மூன்றாம் நாள், இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்ட விசயம் ஊர் வழியே அவளது காதை வந்தடைந்தது. தன் மகள் செத்துவிட்டதாகத் தலை மூழ்கினாள். என் வயிற்றில் அவள் பிறக்கவில்லையென நெஞ்சுரம் கொண்டாள்.
இருவரும் தலை மறைவாகி ஒரு மாதம் வெளியில் இருந்தார்கள். பிறகு தனக்கென்று வாயும் வயிறும் இருப்பதை உணர்ந்துகொண்டு, ஊரையொட்டிய நகரத்தில் ஒரு வாடகை வீடு எடுத்துக்கொண்டு தங்கினார்கள்.
குணாவின் அப்பா, மகனைத் தனியே பிரித்துவிட மூச்சுக்கட்டி பேசினார். தனக்கும் தன் சாதிக்கும் இந்தக் கல்யாணம் ஆகாது, என்றார். குடும்பக் கவுரவம், சாதிக் கவுரவம் பற்றியெல்லாம் பேசி வார்த்தைகளை வாரியிறைத்தார். பாசக்கயிற்றை வீசி அவனை மட்டும் தனியே பிரித்துவிட முயற்சித்தார். குணா, குணவதியின் இறுகப் பிடித்த கையை விடுவதாக இல்லை. எனது உயிர் அவளுக்கானது. அவளில்லாமல் என்னால் எங்கேயும் வாழ முடியாது எனச் சொல்லித் திருப்பி அனுப்பினான்.
குணாவின் இந்தக் கல்யாணம் அவனது தாயைப் பெரிதும் முடக்கியிருந்தது. மனதால் வாடி உடலால் சொடுங்கியிருந்தாள். மகனையே நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்ததில், மாரடைப்பால் ஒரு நாள் இறந்துவிட்டிருந்தாள். அவள் இறப்புக்குக் காரணம் மகன் செய்துகொண்ட கல்யாணம் என்று ஊர்வாய் பேசித்திரிந்தது. அப்படியாகப் பேசியது குணவதியின் காதில் விழவும் செய்தது. இந்தப் பேச்சு சின்னத்தாளை ரொம்பவே முடக்கியது. அவள் கூட்டிக்கொண்டு ஓடியதை விடவும் இந்தச் சொல்கேடு அவளது வைத்துக்கொண்டிருந்த உயிரை நெக்குற வைத்தது.
பெருந்தனக்காரரின் வீட்டில் நல்லது, கேட்டது என்றால் ஊரோடு ஊராகக் கலந்து கொள்கிற சின்னத்தாள், இந்த மரணத்திற்கு வீட்டிலிருந்தபடியே அழுது முடித்தாள். “ஓ சம்மந்தி இறந்துட்டாங்களாமே” எனத் தெருப்பெண்கள் குத்திக்காட்டி செய்தி சொல்லிச் சென்றார்கள். இது அவளுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது. தன் மகளால் இந்த மரணம் நிகழ்ந்துவிட்டதாக நெஞ்சுக்குள் கருகினாள். துக்கமும் அவமானமும் அவளது கிடக்கைக்குள் மூட்டம் கட்டின.
கட்டியவளோடு வருவதாக இருந்தால், என் மகன் வீட்டு வாசற்படியை மிதிக்கக் கூடாது, எனப் பெருந்தனக்காரர் சொல்லிக்கொண்டிருந்தார். மாமியாரின் துக்கத்திற்கு மகள் போவாளா, அவளது கணவன்
அவளை அழைத்துக்கொண்டு போவாரா? சாதிசனம் அவளை வீட்டுக்குள் அனுமதிக்குமா, அவளை முன்னிட்டு கலகம் எதுவும் நடந்துவிடுமோ, எனப் பயங்கொண்டிருந்தாள் சின்னத்தாள். மகளை அவள் எப்படி ஒதுக்கினாலும் நினைவெல்லாம் அவள் மீதே இருந்தது. அவளை நினைக்கையில் வயிறும் நெஞ்சும் பஞ்சடி பதவடியாய் தவித்தது.
குணா, விடாப்பிடியாய் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். துக்கம் விசாரிக்க வந்தவர்கள் கூடி நின்று குணவதியை வேடிக்கை பார்த்தார்கள். ஒரு காமாட்சி விளக்கு கை கால் வைத்து நடந்து வருவதைப் போலதான் அவளது நடை இருந்தது. துக்கத்திற்கென வந்திருந்தவர்கள் அவளது அழகில் மயங்கி, சொக்கிப்போய் நின்றார்கள்.
அவளை யாரும் வீட்டிற்குள் வா, என அழைக்கவில்லை. கண்ணீரும் கம்பலையுமாய் பந்தக்காலைப் பிடித்தபடி நின்றாள்.
மூன்றாம் நாள் சடங்கு முடிந்ததும் வாடகை வீட்டிற்குத் திரும்பினாள். மூன்று நாட்கள் அந்த வீட்டில் தங்கியிருக்கையில், அவள் நடத்தப்பட்ட விதம் அவளை அப்படியாகத் திரும்ப வைத்தது.
குணாவின் அப்பா அவளை மருமகளாக ஏற்க முன்வரவில்லை. என்ன நடந்தாலும் சரி, சொந்த வீட்டில் இருந்தாக வேண்டும், என்கிற முடிவுக்கு வந்தான் குணா. அவளைக் கட்டாயப்படுத்தித் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று குடி வைத்தான்.
குணவதி அந்த வீட்டில் கூலியில்லாத ஒரு வேலைக்காரியாக நடந்துகொண்டாள். குளியலறை, கழிப்பறையைக் கூட்டிக் கழுவுவது, வாசலைக் கூட்டுவது, பாத்திரங்களைத் தேய்ப்பது, துணிகளைத் துவைப்பது,..அவள் செய்யும் வேலைகளாக இருந்தன. இப்படியாகவே அவளது நாட்கள் சென்றன.
குணாவின் அப்பா, அவளிடம் மெல்ல மனமிரங்கி வந்தார். அவரது நடத்தையிலும் நடவடிக்கையிலும் மாற்றம் இருந்தது. அவள் மீது பாசம் காட்டவும் இரக்கம் காட்டுவதுமாக மாறி வந்தார்.
இரவு படுக்கையில் குணவதி கணவனுடன் இதைச் சொல்லி முகம் மலர்ந்தாள். ” உங்க அப்பா முன்னே மாதிரியில்ல. என் கூட நல்லாப் பேசுறார். பாசம் காட்டுறார். என் மீது அக்கறையா இருக்கார். சாப்பிட்டீயானு கேட்கிறார். வேற நல்ல சேலையா எடுத்துக் கட்டிக்கோனு சொல்றார்,…” எனச் சொல்லி, கன்னத்தில் ஆனந்தக்கண்ணீர் வடிய முகம் பூரித்தாள். அவள் அப்படியாகச் சொன்னது, குணாவுக்குப் பிடிக்கவே செய்தது. மனைவியை இறுகக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தான். “இந்தச் சொத்தெல்லாம் அப்பா ஒற்றையாளாக சம்பாதிச்சது. அவர் யாரிடமும் மரியாதை எதிர்பார்க்கிறவர். அவர் நினைக்கிறபடி எல்லாம் நடக்க வேண்டுமென நினைப்பார். குடும்ப விசயம் எதுவும் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதில் கறாராக இருப்பார். அவருக்கு யாரையும் பிடிச்சிப்போச்சுனா அவருக்காக எதையும் செய்வார். அப்பாவை யாரும் புரிஞ்சிக்கிறது கஷ்டம். புரிஞ்சி நடந்துக்கிட்டா குழந்தையாக மாறிவிடுவார். அவர் மனசுல இன்னும் நீ எடம் பிடிக்கப் பாரு. அவர் மனம் நோகாதபடி நடந்துக்கோ…” எனச் சொன்ன குணா தினமும் படுக்கையின் போது இதைச் சொல்லிவந்தான்.
குளியலறை, கழிப்பறைகளைக் கழுவவும், துணிமணிகளைத் துவைக்கவும் பாத்திரங்களைத் தேய்த்து, வீடு வாசல்களைப் பெருக்குவதுமாக இருந்த குணவதி, சமையற்கட்டு வரைக்குமாக முன்னேறி இருந்தாள். அவளது சமையல் மாமனாருக்கு ரொம்பவே பிடித்துப் போயிருந்தது. அவளுடன் அதிகம் பேசிக்கொண்டிருப்பதை விரும்புவதாக இருந்தார்.
குணவதி குடும்பத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட செய்தி, ஊர்வாய் மூலமாக சின்னத்தாள் காதினை எட்டியிருந்தது. அதை நினைத்து அவள் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். ஒரு நாள் மகளை வீடு தேடி பார்த்துவர நினைத்தாள். தான் அப்படியாகச் சென்றால் பெருந்தனக்காரரின் கவுரவத்தைப் பாதிக்குமோ, எனத் தயங்கவும் செய்தாள். வீட்டிற்குள் நடக்கும் எந்தவொரு செய்தியும் வெளியில் தெரியக்கூடாதென, கங்கணம் கட்டும் அவரது குணம் அவளுக்கும் தெரிந்தே இருந்தது. அதற்காக வீடு
தேடி மகளைச் சந்திக்கும் முடிவை மாற்றிக்கொண்டாள். வெளியூரில் வைத்து மகளைச் சந்திச்சிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தாள். மகள் கர்ப்பம் தரிக்கையில் அவளைச் சந்தித்திட வேண்டுமென மனதில் எழுதிக்கொண்டாள். அந்த நாளுக்காக அவள் காத்திருக்கவும் செய்தாள். அந்நாளை எதிர்நோக்கியே அவளது நாட்கள் நகர்ந்தன.
பெரியதனக்காரர் வீட்டுக்குப் போய்வருகிறவர்களிடம், தன் மகளின் கர்ப்பநிலை குறித்து விசாரிக்கச் செய்தாள். ஒரு நாள் அவளது காதினில் நல்ல பதில் வந்து விழுந்தது.
குணவதி, தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணிடம், நாளைக்கு இந்நேரத்திற்கு, ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, தன் தாயை அங்கு வரச்சொல்லி செய்தி அனுப்பினாள். இந்தவொரு அழைப்புக்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தவளைப் போல சின்னத்தாள் துள்ளச்செய்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மகளை வெறுங்கையோடு சந்திக்க மனமில்லாது, அவளுக்குப் பிடித்த சீடை, பணியாரம் செய்து கட்டிக்கொண்டு அவள் சொன்ன நேரத்திற்குள் மருத்துவமனையை வந்தடைந்தாள்.
மகளின் முகமும் உடம்பும் எடுத்திருந்தது. நிறத்தால் மேலும் சற்றே வெளிர்த்திருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மகளைப் பார்க்கிற பூரிப்பில் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். மகளை ஓடிச்சென்று கட்டிப்பிடித்தாள். நெற்றியில், கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். மகளின் கன்னத்தை உருவி, நெட்டிபறித்தாள். அவளது கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டாள். “நீ ரொம்ப சமத்துக்காரிதான்டி ” அவளது முகவாயை உருவிக் கொஞ்சினாள்.
தாயை நீண்ட நாட்கொண்டு பார்க்கிற திகைப்பில் குணவதியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அம்மாவின் கைகளைப் பிடித்து உள்ளங்கைகளைப் பார்த்தவள், கையை கன்னத்தில் ஒற்றிக்கொண்டாள்.
சின்னத்தாளுக்கு அழுகை வந்தது. அவளது அழுகையில் ஆனந்தக் கண்ணீ்ர் வழிந்தது. அவள் மெல்லக் கையை எடுத்து, மகளின் அடி வயிற்றைத் தடவிக் கொடுத்தாள். மகளின் வயிறு மேடு எடுத்திருந்தது.
“எத்தன மாசமடி?” கேட்டாள் சின்னத்தாள்.
“தெரியலம்மா ” என்றாள் குணவதி.
“என்னடி தெரியலங்கிற. கணக்கு வச்சிக்கிறதில்லையா?” எனக்கேட்டவள், மகளின் கொடும்பை இடித்துச் சிரித்தாள். அவளது கண்கள் கலங்கச்செய்தன.
“என்ன சொல்லிட்டேனு இப்படி கலங்குறே..” இடித்த இடத்தை உருவி முத்தம் கொடுத்தாள்.
“இந்தக் குழந்த வேண்டாம்மா, கலச்சிறலாம்” என்றாள் குணவதி. இதை அவள் சொல்கையில், தொண்டைக்குழி கேவச் செய்தது.
“என்னடி சொல்றே?” தாய் பரிதவித்துக் கேட்டாள்.
“நம்ம சாதியில பொறந்து அந்தக் குடும்பத்திலே வாழ்ந்து காட்டணுமென நாம நிறைய இழக்க வேண்டிருக்கும்மா. என் மாமியார் இறந்தது என்னாலே தானாம். இதைச் சொல்லியே என் மாமனார் என்னை,…” அதற்கும் மேல் அவளால் ஒன்றும் சொல்ல முடிந்திருக்கவில்லை. தாயை இறுக அணைத்தபடி குமுறினாள்.
சின்னத்தாளின் வயிற்றில் நெருப்பு பற்றுவதைப் போலிருந்தது. அவளது தலையைக் கருவண்டு குடைந்தெடுத்தது . அவளுக்கு என்னவோ ஒன்று புரியவந்தது. அவள் புரிந்துகொண்டதை நினைக்கையில் நெஞ்சு தாங்கியது.
மகளை இறுக்கிய பிடியை மெல்ல விலக்கி, அவளது முகத்தைப் பார்த்தபடி கேட்டாள். ” இதெல்லாம் ஒன் புருசனுக்குத் தெரியுமா?” என்று. இதற்கு என்ன பதில் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. கைகளைப் பிசைந்துக்கொண்டு விதிர்விதிர்த்து நின்றாள்.
மகளின் இந்தக் கோலத்தால் சின்னத்தாளின் நெஞ்சு வெடித்துவிட்டதைப் போலிருந்தது. நெஞ்சுக்கும் தொண்டைக்குமாக குமுறியவள், நாசியோடு சேர்த்து கண்களைத் துடைத்துகொண்டு மகளின் முகவாயை இரு கைகளால் தாங்கியபடி, “என்கூட வந்திரடி. ஒனக்கு வேற வாழ்க்க அமைச்சிக்கொடுக்கிறேன்” என்றாள்.
தாயின் மார்பில் தலை சாய்த்திருந்த குணவதி, மெல்ல தலையை எடுத்து, “ நான் அந்தக் குடும்பத்துக்கு வாக்கப்பட்ட புதுச்சொத்தும்மா. என்னை அழகாக வச்சிக்கிறதும் , அசிங்கப்படுத்தி பார்க்கிறதும் அவங்க கையில்தான்ம்மா இருக்கு. நான் வாழணுமெனதானே போனேன். வாழ்ந்து காட்டிறேன்ம்மா ” எனச்சொல்லி அம்மாவைத் தேற்றினாள்.
மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டு வந்தது. மருத்துவமனை, டோக்கன் எண்ணோடு குணவதியின் பெயரைச் சொல்லி உள்ளே அழைத்துக்கொண்டிருந்தது.
Fantastic