ஐங்கரன் விக்கினேஸ்வரா!…. (படைப்பாளி)….அவுஸ்திரேலியா.
ஐங்கரன் விக்கினேஸ்வரா ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலமாக அறிமுகமானவர். சார்ள்ஸ், நவீனன் எனும் புனைபெயர்களாலும் நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவகார ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருபவர். இவரது படைப்புகளால் பலரதும் கவனத்தை ஈர்த்தவர்.
இதுவரை 12 கவிதைத் தொகுதிகளை படைத்துள்ளார். இவற்றில் மூன்று தொகுதிகள் ஹைக்கூ கவிதைகளாகும். அணையாத அறிவாலயம், விடியலின் கானம், இன்னும் இருட்டினில், உறக்கம் தேடும் உலகிற்காய், வெண்பனிச் சுவடுகள், காற்றோடு பேசுதல், அக்னிப் பிரவேசம், உள்மன யாத்திரை
புதுக்கவிதை தொகுதிகளும், உனக்குள்ளேயே உள்ளிருப்பு, இழப்புக்களை இழப்போம், கல்லறைக்குள் கதிரவன் ஆகிய ஹைக்கூ கவிதைத் தொகுதிகளையும் படைத்துள்ளார். கல்லறைப் பூக்கள், இன்னொரு விழிப்பு ஆகியன நூலுருப்பெறாதவையாகும்.
அத்துடன் வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் படுகொலைகளை நினைவு கூறும் எட்டு இளங்கவிஞர்களின் “கல்லறை மேலான காற்று’ கவிதை தொகுதியை 1988இல் தொகுத்தளித்தவரும் இவரே.
ஈழ போரின் வலியை சுமந்த அகிலன் திருச்செல்வம் கவிதைகள் நூலை தொகுத்தவரும் இவரே.அகிலனின் முதலாவது ஆண்டு நினைவாக 1990இல் ஈழத்தில் “மரணம் வாழ்வின் முடிவல்ல” என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
இளைய வயதிலேயே ”சிறுவர் இலக்கியம்” பற்றிய நீண்ட இலக்கிய ஆய்வினையும் மேற்கொண்டவர். சிறுவர் பத்திகைகள், சிறுவர் இலக்கிய நூல்கள், ஈழத்துச் சிறுவர் இலக்கியம் பற்றிய ஆய்வினையும் மேற்கொண்டவர். சிறுவர் இலக்கியம் பற்றிய நாற்பது தொடர் கட்டுரைகள் தினகரன் பத்திரிகையில் 1990களில் வெளியானது.
யாழ் பொதுசன நூல்நிலையம் அழிக்கப்பட்ட கொடிய செயல் உணர்வுக் கூர்மையுள்ள இளம் வயதினரை கடுமையாக தாக்கியுள்ளது. ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய ‘அணையாத அறிவாலயம்’ கவிதைதொகுப்பின் அடிநாதமாக ஒலிப்பது ஓர் எழுச்சிக் கீதம் நாம் பெற்றுக்கொண்ட விழிப்பினை நீடித்து வைத்துள்ளது எனகவிஞர் இ. முருகையன் இந்நூலின்முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளில் சிறப்பான கவனத்தை ஈர்ப்பவராக இவர் விளங்குகின்றார்.
மாஸ்கோவில் மருத்துவம் பயின்று, தற்போது கங்காரு நாட்டினில் கதிரியியக்க துறையில் பணியாற்றுகிறார்.