உலகம்

400 நாள் போர் நிறைவு; ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் சூளுரை

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்தது. எனினும், ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசும்போது, இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது நிலத்தில் ரஷியாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம்.

எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் 400 நாட்களாக தொடர்ந்து வருகின்றன. நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம்.

உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும், நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்த மற்றும் பாதுகாத்து வரும், உதவி செய்து மற்றும் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம்.

உக்ரைன் பயங்கர நாட்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்து உள்ளோம். இந்த வார்த்தைகளுக்கு பின்னால், பெரிய முயற்சிகள் இருந்துள்ளன என கூறியுள்ளார். கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், எங்களுடைய கார்கிவ் பகுதிக்கு மீண்டும் நாங்கள் திரும்பி வந்துள்ளது, கெர்சன் நகருக்கு திரும்பி வந்தது, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தது, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது என்று அவர் கூறியுள்ளார்.

 

 

 206 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.