அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி…!
காங்கிரஸ் கட்சிக்குத் திருப்புமுனையாக அமைந்த ‘பாரத் ஜோடோ’ யாத்திரையுடன் தனது இன்னிங்ஸ் (அரசியல் பயணம்) முடிவடைவது மகிழ்ச்சியளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலம் – நவராய்ப்பூரில் நேற்று முன்தினம் (24.02.2023) ஆரம்பமான காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் மாநாட்டில் பங்கேற்ற சோனியா காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இது சவாலான நேரம். நாட்டின் அனைத்து நிறுவனங்களையும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றி நாசமாக்கியுள்ளது. ஒருசில தொழிலதிபர்களுக்குச் சாதகமாக இருப்பதால் சீரழிந்துள்ளது.
மன்மோகன் சிங்கின் தலைமையில் 2004ஆம் ஆண்டு மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தலில் எனக்குத் தனிப்பட்ட முறையில் திருப்தியளித்தது. ஆனால், காங்கிரஸின் திருப்புமுனையாகப் பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் நிறைவடைவதுதான் எனக்கு மகிழ்ச்சி. இந்திய மக்கள் நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சமத்துவத்தை விரும்புகிறார்கள் என்பதை இந்தப் பாரத் ஜோடோ யாத்திரை நிரூபித்துள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி, தனது இன்னிங்ஸ் நிறைவடைவது குறித்துப் பேசியிருப்பது அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து உணர்த்தும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும், 2024ஆம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்கள் செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்படப் பலர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.