ஜனாதிபதித் தேர்தலை நடத்த தயாராகும் ரணில் அரசாங்கம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் 31(3)(a) உறுப்புரையில், ஜனாதிபதி பதவிக்கு முதன்முறையாக நியமிக்கப்படும் ஒருவர், தான் நியமிக்கப்பட்டு 4 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த விருப்பம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், தற்போதுள்ள அரசியலமைப்பு நிலவரங்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பதவியை ராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய காலத்திலேயே அவர் பணியாற்றுகின்றார்.
2019ஆம் ஆண்டு 17 நவம்பர் ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச முதன்முதலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கமைய, அவரது முதல் பதவிக்காலத்தின் 4 ஆண்டுகள் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
கோட்டாபய ராஜபக்சவின் முதலாவது பதவிக்காலத்தின் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதால், அரசியலமைப்பின் பிரகாரம், முதல் பதவிக்காலத்தின் 4 வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர், புதிய ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆணை அவருக்கு கிடைக்கும்.
அதற்கமைய, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசாங்கத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.