இறைவனிடம் கையேந்துங்கள்!… ( கவிதை ) ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
இறைவனிடம் கையேந் துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லு வதில்லை
கருணையுடன் கேட்டுப் பாருங்கள் – அவன்
காட்சிதர மறுப்பது மில்லை
ஆணவத்தை அகற்றிப் பாருங்கள் – அவன்
அரவணைக்கக் கரத்தை நீட்டுவான்
நாணயாமாய் நடந்து பாருங்கள் – அவன்
நாளுமெங்கள் அருகில் வந்திடுவான்
உணர்வுடனே பாடிப் பாருங்கள் – அவன்
உள்ளமதில் வந்து நின்றிடுவான்
தெளிவுடனே தினமும் தேடுங்கள் – அவன்
சீக்கிரமாய் உதவ வந்திடுவான்
ஏழ்மையுடன் இரங்கிப் பாருங்கள் – அவன்
எங்களுடன் இணைந்து நின்றிடுவான்
தோழமையாய் இருந்து பாருங்கள் – அவன்
துயர்துடைக்க வந்து நின்றுடுவான்
கண்மணியே என்று பாடுங்கள் – அவன்
கருணைமழை பொழிந்து நின்றிடுவான்
கண்ணீரால் நனைத்து ப்பாருங்கள் – அவன்
காலமெலாம் உதவி நின்றிடுவான்
சினமதனை அகற்றிப் பாருங்கள் – அவன்
தனைமறந்து பக்கம் வந்திடுவான்
தனிமையிலே இருந்து பாருங்கள் – அவன்
இனிமையெலாம் தந்து நின்றிடுவான்
காதலுடன் பாடிப் பாருங்கள் – அவன்
கணப்பொழுதில் வந்து நின்றிடுவான்
சோதியென நினைத்துப் பாடுங்கள் – அவன்
சுகமனைத்தும் தந்து நின்றிடுவான்
நெறியுடனே நின்று பாடுங்கள் – அவன்
நீதிதர மறுப்பது மில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் – அவன்
பூரணமாய் தந்து நின்றிடுவான்.