மறதி நோயால் முகவரி தெரியாமல் 16 ஆண்டுகள் சுற்றி அலைந்த கேரள ராணுவ வீரர்! சோகமான பின்னணி!
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக தனது ஓய்வூதிய பலன்களை பெறாமலே இருந்தது தற்போது தெரிய வந்திருக்கிறது.
அவரைப் பற்றிய விவரங்களை அறிய பாதுகாப்பு ஓய்வூதிய வழங்கும் அலுவலகம் (DPDO) மேற்கொண்ட நடவடிக்கையில், அந்த நபர் ஆலப்புழா மாவட்டத்தின் மன்னார் பஞ்சாயத்தைச் சேர்ந்த பாவுக்கார பகுதியைச் சேர்ந்த ஏ.ஜி.சசீந்திரன் (70) என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என மனோரமா செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவர் கடந்த ஜூன் 2007ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றதற்கான பென்ஷன் பணங்களை பெற தவறவீட்டிருக்கிறார். இதனால் 21 லட்சத்து 61 ஆயிரம் ரூபாயை 16 ஆண்டுகளாக பெறாமல் இருந்திருக்கிறார்.
ஏனெனில் டிமென்ஷியா எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டதால் மனநலம் சரியில்லாம்ல போய் சசீந்திரன் தனது வீட்டை விட்டு வெளியேறி, தனது சொந்த ஊர் மற்றும் வீடு எங்கே என்று நினைவுக்கு வராமல் கோட்டயம் நகர பகுதிகளில் அலைந்து திரிந்து வந்திருக்கிறார்.
பல ஆண்டுகளாக சசீந்திரனை தேடிவந்தது பாதுகாப்பு ஓய்வூதிய வழங்கும் அலுவலகம். இப்படி இருக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோட்டையத்தைச் சேர்ந்த நிவாரண இல்லம் ஒன்றுதான் சசீந்திரனை கவனித்துக் கொண்டது. சசீந்திரன் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதை அறிந்த நிவாரண இல்ல காப்பாளர், அவரது அடையாள அட்டையை மீட்டு, சசீந்திரனை அழைத்துக் கொண்டு DPDO-டம் செய்து ஓய்வூதியத்தை பெற முயன்றிருக்கிறார்.
ஆனால் உயரதிகாரிகளின் உத்தரவு வராததால் நிலுவைத் தொகையை அவர்களிடம் வழங்க முடியாமல் போயிருக்கிறது. இந்த நிலையில், நிவாரண இல்லத்தில் இருந்து சசீந்திரன் காணாமல் போனதால், அவரை மீண்டும் இரண்டு ஆண்டுகளாக DPDO அதிகாரிகள் தேடி வந்த போதுதான் வேறொரு நிவாரண மையத்தில் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் சசீந்திரனின் குடும்பத்தினரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.