பிரிட்டிஷ் வீரர்களின் தொப்பிகளுக்காக கொல்லப்படும் 100க்கணக்கான கரடிகள்.. ஏன் தெரியுமா?
70 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனின் அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு அரசக்குடும்பம் குறித்தும், அதன் பாரம்பரியம், கலாசாரம் குறித்தும் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், பிரிட்டிஷின் காவலர்கள் என்றதுமே பொதுவாக அனைவரது நினைவுக்கும் சிவப்பு நிறத்தில் ட்யூனிக்ஸ் போன்ற சட்டையும், கருப்பு பேன்ட்டும் அணிந்து தலையில் கருப்பு நிறத்தில் பெரிய தொப்பியை அணிந்திருப்பவர்களே வருவார்கள்.
பிரிட்டனின் பல்வேறு சின்னங்களில் இந்த நீளமான கருப்பு தொப்பியும் அடங்கும். பிரிட்டிஷ் ராணுவ படையில் இணைந்துள்ள வீரர்கள் நாட்டுக்கும், அரச குடும்பத்துக்கும் சேவை புரிபவர்களாகவே இருப்பர்.
குறிப்பாக பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்வுகளில், அரசு நிகழ்ச்சிகளில் இந்த கருப்பு நிற தொப்பியை அணிந்த வீரர்கள் பங்கேற்று உரிய அரசு மரியாதையை செலுத்துவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
ராயல் குடும்பம் என்ற பெயருக்கு ஏற்ப அரசக் குடும்பத்தினர் அணியும் அணிகலன்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் அவற்றின் மதிப்பு விலைமதிக்கதாக இருக்கும் என்றே கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், பிரிட்டிஷ் படை வீரர்கள் அணியும் இந்த கருப்பு நிற தொப்பிக்கு பின்னணியில் ஒரு ராயல் டச் இருக்கிறது.
அதாவது, பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் அணியும் அந்த தொப்பி உண்மையில் கனடாவைச் சேர்ந்த கரடிகளின் தோலில் இருந்து தயாரிக்கப்பட்டவையாம். கனடியன் பெண் கரடிகளின் தோல் பழுப்பு நிறத்தில் இருப்பதால் அதன் மீது கருப்பு சாயம் பூசியே பிரிட்டன் வீரர்களின் தொப்பிகள் உருவாக்கப்படுகிறது.
கரடி தோலில் தொப்பிகள் உருவாக்கப்படுவதன் பின்னணி:
17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வகையான சடங்காக பின்பற்றப்பட்டு வருவதால் பிரிட்டிஷ் காலாட் படையினரின் தொப்பிகள் ஒவ்வொரு ஆண்டும் கரடியின் தோல்களில் இருந்தே உருவாக்கப்படுகின்றன. இந்த தலைக்கவசம் பிரிட்டிஷ் தொப்பி தயாரிப்பாளரிடம் இருந்துதான் பிரிட்டன் ராணுவம் வாங்குகிறது.
கரடியின் தோல்கள் சர்வதேச ஏலத்தின் மூலம் பெறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 100 கரடிகள் கொல்லப்படுகின்றன. அப்படி தயாரிக்கப்படும் ஒவ்வொரு கரடி தோலால் ஆன தொப்பிகளுக்கு 650 பவுண்ட் செலவிடப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 60,419 ரூபாய் ஆகும். கரடியின் தோலால் ஆன இந்த தொப்பி 80 ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்திருக்குமாம்.
ராணுவ தொப்பிக்கு எதிராக வெடித்த போராட்டம்:
பிரிட்டன் அரசக் குடும்பத்தின் பெருமையை பறை சாற்றுவதற்கான அடையாளமாக பிரிட்டிஷ் வீரர்களுக்கு நிஜ கரடியின் தோலால் ஆன தொப்பிகள் அணிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கரடிகள் இதற்காகவே கொல்லப்படுவது விலங்குகள் நல அமைப்பினராலும், சமூக ஆர்வலர்களாலும் தொடர்ந்து எதிர்க்கப்பட்டும் போராடப்பட்டும் வருகிறது.
அதன்படி, பல தசாப்தங்களில், தொப்பிகளை உருவாக்க கரடிகளைக் கொல்வதை நிறுத்த பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், காலப்போக்கில் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக, இன்னும் பாரம்பரியத்தை பின்பற்றப்படுவதாக சொல்லி விலங்குகளை அழித்து வருவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று தற்போது, சமூக வலைதளங்களில் மக்கள் கொதித்தெழுந்து பதிவிட்டு வருகிறார்கள்.
அதேபோல, பிரிட்டிஷ் காவலர்களின் தொப்பிகளுக்கு உண்மையான கரடிகளின் ரோமத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதை எதிர்த்தும், விலங்குகள் கொடூரமாக கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறியும் விலங்குகள் நல அமைப்பான PETA எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு PETA அமைப்பு பல ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துள்ளது.
பிரிட்டன் அமைச்சகம் விளக்கம்:
கரடி தோலுக்கு மாற்றாக பல்வேறு மாற்று பொருட்களை கொண்டு வீரர்கள் அணியக் கூடிய தொப்பிக்காக ஆய்வுகளை மேற்கொண்டோம். ஆனால் கரடிகளின் ரோமங்களின் வடிவமும், எடையும், ஈரப்பதத்தை விரட்டக் கூடிய அதன் ஈரமான நிலை ஆகியவற்றை கருத்தில்கொண்டே தொப்பிகள் தயாரிக்கப்படுகின்றன என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் கொடுத்திருக்கிறது.