இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹோவ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பீல்டிங் மெச்சத்தகுந்த வகையில் இல்லை.
பேட்டிங்கில் மந்தனா மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். ஷபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். வேகப்பந்து வீச்சு இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் காயம் காரணமாக விளையாடாததால் கேப்டன் பொறுப்பை அமி ஜோன்ஸ் கவனிக்கிறார். 20 ஓவர் தொடரை வென்ற இங்கிலாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ள இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் தொடரை வெல்ல தீவிரம் காட்டும்.
அதேநேரத்தில் இந்த போட்டி தொடருடன் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரும், ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் (252 விக்கெட்டுகள்) விழ்த்தியவருமான ஜூலன் கோஸ்வாமி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு வெற்றியுடன் விடைகொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.