நடிகை சோனாலி போகத் வழக்கு: கோவா ஓட்டலில் சிபிஐ அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை!
அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்தவர் சோனாலி போகத். பா.ஜனதா பெண் பிரமுகர். இவர் கடந்த மாதம் 23-ந் தேதி, கோவாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம், கொலையாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் இருவரை கைது செய்தனர். சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. இந்த மரணம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சோனாலி மரண வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் அவரது குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி இந்த வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கோவாவில் உள்ள லியோனி கிராண்ட் ரிசார்ட்டுக்கு தடயவியல் நிபுணர்களுடன் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சனிக்கிழமை சென்றது.இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் மேலாக ஓட்டலுக்குள் இருந்தனர். முன்னதாக, சோனாலி போகத் உயிரிழந்த நிலையில் கிடந்த வடக்கு கோவாவில் அஞ்சுனா கடற்கரையில் அமைந்துள்ள ஓட்டலுக்கு சென்ற சிபிஐ மற்றும் தடயவியல் குழுவினர் அங்கு விசாரணையை முடித்துவிட்டு லியோனி கிராண்ட் ரிசார்ட் ஓட்டலுக்கு வந்தனர். சோனாலி போகத் இறப்பதற்கு முன்பு தனது உதவியாளர்களுடன் தங்கியிருந்த லியோனி கிராண்ட் ரிசார்ட் ஓட்டலில் 10 மணி நேரமாக தீவிர விசரணை நடைபெற்றது.