குவாலிட்டி டைம் பிராக்டிஸ்தான் முக்கியம்..!
பல்வேறு துறைகளில் பயிற்சி அல்லது கல்வி கற்பவர்களுக்கு ஏற்ற மேலை நாட்டு அணுகுமுறை. இதனை மேம்போக்காகப் பார்த்தால் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும். சற்று விரிவாகப் பார்ப்போம்.
நீங்கள் எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் எப்பணி செய்தாலும், பள்ளி, கல்லூரி பயிலும் மாணவராக இருந்தாலும் குவாலிட்டி டைம் பிராக்டிஸ் அவசியம். பாடப் புத்தகத்தைப் படித்து மனப்பாடம் செய்யும்போதும், ஒரு புதிய இசைக் குறிப்பை கற்கும்போதும், ஒரு புதிருக்கு விடைதேடும்போது இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் எளிதில் நினைத்ததை முடித்துவிடமுடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
உதாரணமாக ஒரு பியானோ கலைஞர் இசைக்குறிப்புகளை வாசித்து ஒரு நாளில் ஒரு மணிநேரம் பயிற்சி செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் மாதத்துக்கு 30-31 மணி நேரம் இசைப் பயிற்சிக்கு செலவு செய்கிறாரா என்று கேட்டால், கிடையாது. வராத ஒரு பீதோவன் இசைக் குறிப்பை திரும்பத் திரும்ப வாசித்து சோர்வடைந்து ஒரு மணி நேரம் பயிற்சி செய்கிறார் என்றால் அவர் நேரத்தை சாமர்த்தியமாகப் பயன்படுத்தவில்லை என்று பொருள். இதேபோல அவர் மாதத்தில் 31 மணிநேரத்தில் 15 மணிநேரத்தை சராசரியாக வீணடித்தால், மீதமுள்ள 16 மணிநேரம் மட்டுமே அவர் பயிற்சி செய்ததாகப் பொருள்.
குவாலிட்டி டைம் பிராக்டிஸ் அணுகுமுறையை அவர் கையாண்டு இருந்தால் அவர் 31 மணி நேர பயிற்சியை முழுமையாகப் பயன்படுத்தி இருக்கமுடியும். சரி..! அதற்கு அவர் என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் முதலாவதாக பயிற்சிக்கு இடையே ஓய்வெடுக்க வேண்டும். ஓய்வு என்றால் அரை மணி நேர ஓய்வு அல்ல. இடையிடையே 2 நிமிட ஓய்வு. இந்த இரண்டு நிமிட ஓய்வு மூளைக்கு ஒரு பிரேக் கொடுத்து பதற்றத்தைக் குறைக்கும்.
பதற்றம் குறைந்தால் அவர் ஒரு இசையை விரைவில் தவறின்றி வாசித்து அடுத்த பாடத்துக்குச் செல்ல முடியும். அடுத்து, ஒரே மாதிரியான செயலை செய்யாமல் வெவ்வேறு செயல்களைச் செய்வது. ஒரே இசைக்குறிப்பை தொடர்ந்து வாசித்து வரும்போது மூளையின் கற்பனைத் திறன் குறையும். நமது மூளை வித்யாசமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டு, ஒரே மாதிரியான விஷயங்களை மறந்துவிடும்.
எனவே ஒரு இசைக்குறிப்பு சரியாக வரவில்லை என்றால் வேறு ஒரு இசைக்குறிப்பை வாசித்து இடையே மூளையைத் தூண்டிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் பயிற்சி நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தலாம். குவாலிட்டி டைம் பிராக்டிஸ் அணுகுமுறை இசைத்துறைக்கு மட்டுமல்ல, விளையாட்டு, படிப்பு, நடனம் என பல துறைகளுக்கு உதவும். ஏன்…! ஒரு பொழுதுபோக்கு நாவலை குறுகிய நேரத்தில் முழுமையாகப் படித்துவிடக்கூட இது உதவும். இந்த அணுகுமுறையை சரியாகப் பின்பற்றினால் உங்கள் வேலையிலும் வெற்றிபெற முடியும்.