கங்காரு-வை செல்லப்பிராணி வளர்த்த அவுஸ்திரேலியர்: இறுதியில் அவருக்கு நேர்ந்த பரிதாபம்!
அவுஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காருவின் தாக்குதலுக்கு ஆளான 77 வயதான நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திங்களன்று அவுஸ்திரேலியாவில் பெர்த்தில் இருந்து தெற்கே 400 கிமீ (250 மைல்) தொலைவில் உள்ள ரெட்மண்டில் உள்ள வீட்டில் 77 வயது மதிக்கதக்க நபர் கங்காரு தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் காயப்பட்டவருக்கு சிகிச்சை வழங்க முயன்ற போது கங்காரு அவர்களை சிகிச்சை அளிக்க விடாமல் தடுத்தது.
இதனால் கங்காருவை சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர், இருப்பினும் கங்காரு-வால் தாக்கப்பட்ட 77 வயது நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், உயிரிழந்த நபர் கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்த நிலையில், அவர் கங்காரு-வால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என தெரிவித்தார்.
1936 க்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் கங்காரு தாக்கி உயிர் இழப்பது இதுவே முதல் முறையாகும்.
கடந்த ஜூலை மாதத்தில் குயின்ஸ்லாந்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 67 வயது மூதாட்டியை கங்காரு ஒன்று தாக்கியதில் வெட்டுக்காயங்களுடன் கால் உடைந்த நிலையில் அவரை விட்டுச் சென்றது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 50 மில்லியன் கங்காருக்கள் உள்ளன, அவை 90 கிலோ வரை எடையும் 2 மீட்டர் உயரமும் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.