இதய கோளாறு ஏன் கடைசி நிமிடத்தில் தெரிகிறது?
மரபியல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பு, சிறு வயதில் இருந்தே மெதுவாக ஆரம்பிக்கும். வெளிப்படுவது இரண்டு, மூன்று விதங்களில் இருக்கலாம். 30 – 40 சதவீதம் அடைப்பு இருக்கும் போதே, எதிர்பாராமல் வெடித்து, ரத்தக் குழாயை மூடலாம். இது தான் ஹார்ட் – அட்டாக்!
சிலருக்கு இந்த அடைப்பு, எரிமலை குழம்பு போல உள்ளேயே அமைதியாக இருந்து, நாள்பட நாள்பட சிறிது சிறிதாக ரத்தக் குழாயை மூடலாம். அடைப்பை ஏற்படுத்தும் ரத்தக் கட்டியில், கொழுப்பு, ரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்கள், சில சமயங்களில் கால்சியம் சேர்ந்து, நாள்பட மெதுவாக இந்த அடைப்பைப் பெரிதாக்கலாம். சட்டென்று இது சிதைந்து உடைந்தால், மாரடைப்பு வரும்.
சிலருக்கு, மெதுவாக அடைப்பு பெரிதாகி ரத்தக் குழாயை 70 சதவீதத்திற்கு மேல் அடைக்கும். இது போன்ற நிலையில், ஓய்வாக இருந்தால் பிரச்னை இருக்காது. நடந்தால் வரும் நெஞ்சு வலி, நின்றால் சரியாகும்; மூச்சு திணறலாம்.நம் மரபணுவிற்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்பதால், அடைப்பு ஏற்படுத்துவதை துாண்டும் விஷயங்களை தவிர்க்க வேண்டும். மரபணுவை மாற்ற முடியாது; வாழ்க்கை முறையில் தான் மாற்றம் செய்ய வேண்டும்; இதனால் எந்த அளவு முடியுமோ, அவ்வளவு துாரம் பிரச்னையை தள்ளிப் போடலாம்.
இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருக்கும் அனைவருக்கும் ‘ஸ்டென்ட், பை – பாஸ்’ சிகிச்சை தேவை இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட அடைப்புகள் 70 சதவீதத்திற்கு மேல் இருந்தால், ஸ்டென்ட் அவசியம். 30 சதவீத அடைப்புக்கு அறிகுறிகள் இருக்காது. பொதுவாக 70 சதவீதம் வரை இருக்காது. அதற்கு மேலே போகும் போது தான் ஸ்டென்ட், பை – பாஸ் தேவை!
‘மார்பு பகுதியில் தாங்க முடியாத வலி, நெஞ்சை பிடித்து வலி தாங்காமல் தவிப்பது, ஆண்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்பது, 60 வயதிற்கு மேல் தான் வரும்’ என்பது போன்ற, பல தவறான அபிப்ராயங்கள் உள்ளன. மிகக் குறைந்த சதவீதத்தினருக்கே இது போல வரும்.அடிவயிறு முதல் – தாடை வரை அறிகுறிகள் எப்படி, எங்கு வேண்டுமானாலும் வரலாம். ஒரே மாதிரி அறிகுறிகள் அனைவருக்கும் இருக்காது. இதுவரை இல்லாத மாதிரி, புதிதாக அறிகுறிகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல், எதனால் இது வந்தது என்று தாமதிக்காமல் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக 30 – 70 சதவீதம் அடைப்பு வரும் வரை, அறிகுறிகளே இருக்காது. 40 சதவீத அறிகுறிகள் இருப்பவருக்கு பல நேரங்களில் நடந்தாலும், ஓடினாலும் எந்த அறிகுறியும் இருக்காது. அதே நேரத்தில், இந்த அடைப்பு சிதைந்து, வெடித்து, மாரடைப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. உடனே, ‘எனக்கு அடைப்பு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று எல்லாரும் ஓட முடியாது.
பரிசோதனை
‘ஆண்டிற்கு ஒரு முறை இ.சி.ஜி., எக்கோ’ எடுப்பேன். இதயம் நன்றாக இருந்ததாகவே கூறினர்; ஆனால், எப்படி பிரச்னை வந்தது?’ என்று கேட்டால், ஒவ்வொரு பரிசோதனையும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டுமே தெரிந்து கொள்ள உதவும். மாரடைப்பு வரும் போது இ.சி.ஜி., எடுத்தால், அந்த வரைபடத்தில் மாற்றங்கள் தெரியலாம். இதயம் உருவாக்கும் மின் அதிர்வுகளை மட்டுமே இது காட்டும். இ.சி.ஜி., நன்றாக இருப்பதால், உள்ளே அடைப்பு இல்லை என்று சொல்லவும் முடியாது.
பாதுகாப்பானது
இதயத்தில் ‘பம்பிங்’ எப்படி என்பதை காட்டுவது தான், எக்கோ பரிசோதனை! 40 சதவீதம் அடைப்பு இருந்தாலும், இதயத்தின் பம்பிங் வழக்கம் போலவே இருக்கும். 70 சதவீதத்திற்கு மேல் அடைப்பு இருந்தால் மட்டுமே, உடற்பயிற்சி செய்யும் போது, அந்தப் பகுதியில் உள்ள இதய தசைகளுக்கு ரத்தம் செல்வது தடைபடும். 90 சதவீதத்திற்கு மேல் அடைப்பு இருந்தால், ஓய்விலும் வலி வரும்.
ஆஞ்சியோகிராம், கொரோனரி சி.டி., என்ற இரண்டு பரிசோதனைகளில் மட்டுமே அடைப்பு இருப்பதை தெரிந்து கொள்வதோடு, ரத்த குழாய் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க முடியும்.புதிதாக அறிகுறிகள் வந்தால், பரிசோதனை செய்து பார்த்தால், ஒருவேளை சிறிய அளவில் அடைப்பு இருந்தால், வாழ்க்கை முறையில் மாற்றம், அபாயமான விஷயங்களை கட்டுக்குள் வைக்க உதவும்.அறிகுறிகளை வைத்து அடைப்பு இருக்கலாமோ என்று சந்தேகம் கொள்பவர்கள், டாக்டரிடம் முழுமையாக ஆலோசனை பெற்று, தேவையான பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது.