70 ஆண்டுகள்!ஏராளமான கால்பந்தாட்ட வீரர்கள்! விளையாட்டில் கவனம் ஈர்க்கும் பள்ளத்தூர் கிராமம்
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பாரம்பரிய பெருமை உண்டு. அந்தப் பெருமை தான் அந்த ஊரின் அடையாளமாக விளங்கும். அதுபோல சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதி என்று அழைக்கப்படும் பள்ளத்தூர் கிராமம் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் கிராமமாக கடந்த 70 வருடங்களாக திகழ்ந்து வருகிறது. 5 வயதில் கால்பந்தாட்டம் ஆட கற்றுக்கொடுக்கும் பள்ளத்தூர் கிராம மக்களின் விளையாட்டு ஆர்வம் இந்த தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பள்ளத்தூர். பேரூராட்சி அந்தஸ்தை கொண்ட கிராமமாக இந்த ஊர் இருந்து வரும் நிலையில், இங்குள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்பந்தாட்டத்தை தங்களது பாரம்பரிய பெருமையாக அடையாளம் காட்டி விளையாடி வருகின்றனர். எப்படி வீரம் செறிந்த பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுவிற்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற கிராமங்கள் உலகப் புகழ்பெற்று விளங்குகிறதோ, அதே போன்று கால்பந்தாட்டத்தை உயிர் மூச்சாக நேசித்து வருகின்றனர் பள்ளத்தூர் வாழ் பொது மக்கள்.
1954 ஆம் ஆண்டு பள்ளத்தூரில் தொடங்கப்பட்டு, தற்போது வரை ஆயிரக்கணக்கான கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கி அந்த இளைஞர்களின் வாழ்க்கையை சமுதாயத்தில் உயர்த்தி பெருமை கொள்ள வைத்துள்ளது தென்னரசு கால்பந்தாட்ட கழகம். 1954 க்கு முன்பு வாழ்ந்து, கால்பந்தாட்ட போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து பல விருதுகளைப் பெற்று, பள்ளத்தூர் என்ற குக்கிராமத்தை உலகம் அறிய வெளிக் கொண்டு வந்து மறைந்த கால்பந்தாட்ட வீரர் தென்னரசு என்பவரது பெயரால் துவக்கப்பட்டது இந்த கால்பந்தாட்ட கழகம்.
பள்ளத்தூரில் யார் வீட்டிலாவது ஆண் குழந்தை பிறந்தால், தங்களது உறவினர்களுக்கு பெரிய அளவில் விருந்தளித்து, புதிய கால்பந்து வீரன் பிறந்துள்ளான் என கொண்டாடி மகிழ்வோம் எனக் கூறுகின்றனர், அவ்வூர் இளைஞர்கள்.தென்னரசு கால் பந்தாட்ட கழகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பல இளைஞர்கள் தேசிய அளவில் பல போட்டிகளில் முதல் மூன்று இடங்களுக்குள் வெற்றி பெற்று, பல பதக்கங்களை வாரி குவித்துள்ளனர். அப்படி வாங்கிய பதக்கங்களையும், சான்றிதழ்களையும் தங்களது கால்பந்தாட்ட கழகத்திற்கே அர்பணித்து, தங்களை உருவாக்கிய கழகத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளனர் பள்ளத்தூர் கால்பந்தாட்ட வீரர்கள்.
முறையான பயிற்சி எதுவும் இல்லாமலேயே பள்ளத்தூர் எழுவர் கால்பந்து அணி மிகவும் அறியப்பட்ட அணியாகத் திகழ்கிறது. இங்கு தலையெடுக்கும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளை குறிவைத்தே போட்டிகளில் பங்கேற்கின்றனர். இருந்தாலும், விளையாட்டுத் துறைக்கென்றே இருக்கும் ஒரு வேதனை பள்ளத்தூர் கால்பந்தாட்ட வீரர்களுக்கும் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. சிறு வயது முதல் கால்பந்தாட்ட விளையாட்டிற்கு மட்டுமே தங்களை அர்ப்பணித்து வாழும் விளையாட்டு வீரர்களின் எதிர்காலமும், அரசின் உதவி இல்லாமல் கேள்விக்குறியாகி போவது ஒரு மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருவதாக கூறுகின்றனர் பொறுப்பாளர்கள்.
கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும், விளையாட்டு உபகரணங்களையும்,தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் எழுப்புகின்றனர். தனித்துவ விளையாட்டுகளில் தலைசிறந்து விளங்கும் பள்ளத்தூர் கிராமம் போன்று சிறப்பாக செயல்படும் கிராமங்களை தத்தெடுத்து ஊக்குவித்தால், கல்வி துறை போல் விளையாட்டு துறையிலும் இந்தியா தலைசிறந்த நாடாக வளர்ச்சிபெறும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.