கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் சுரேஷ் ரெய்னா
கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நாட்டிற்காகவும், எனது மாநிலமான உ.பி.,க்காகவும் விளையாடியது பெருமை அளிக்கிறது. கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த பிசிசிஐ, உ.பி., கிரிக்கெட் சங்கம், சென்னை அணி, ராஜிவ் சுக்லா மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ரெய்னா கூறியுள்ளார்.
கடந்த 2020 ஆக.,15ல் சர்வதேச போட்டிகளில் இருந்து இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்ற சில மணி நேரங்களில் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். பிறகு ஐ.பி.எல்., போட்டிகளில் மட்டும் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமீரேட்சில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் போது பாதியிலேயே தாயகம் திரும்பினார். தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த ஏலத்தின் போது சென்னை அணியில் இருந்து ரெய்னா விடுவிக்கப்பட்டார்.
இச்சூழ்நிலையில், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ள ரெய்னா, வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இந்தியாவிற்காக அல்லது உள்நாட்டு அணிக்காக பங்கேற்றால், வெளிநாட்டு அணிகளில் பங்கேற்க முடியாது என்பதால் அவர் ஓய்வை அறிவித்துள்ளதாக தெரிகிறது. அடுத்தாண்டு துவங்கும் தென் ஆப்ரிக்கா டுவென்டி 20 தொடரில் அவர் பங்கேற்கக்கூடும் என தெரிகிறது.