யாரிடமிருந்து மெசேஜ் வரவேண்டுமென கோலி எதிர்பார்த்தார்? – கவாஸ்கர்
ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் கடந்த ஞாயிற்றுகிழமை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதனிடையே, போட்டிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விராட் கோலி, நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும் தான். எனது செல்போன் எண் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. தோனி மீது நான் கொண்டுள்ள மரியாதை மற்றும் இணைப்பு உண்மையானது. என்னால் அவர் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை. அதேபோல், அவரால் நான் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை’ என்றார்.
இந்நிலையில், யாரும் தனக்கு மெசேஜ் அனுப்பவில்லை என விராட் கோலி தெரிவித்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறுகையில், விராட் கோலி யார் பற்றி பேசுகிறார் என்பதை கூறுவது கடினம். அவர் யாருடைய பெயரையாவது கூறினால் அவரிடம் சென்று நீங்கள் கோலியிடம் பேசினீர்களா? இல்லையா? என்று கேட்டுவிடலாம். ஆனால், நான் கேள்விப்பட்டது என்னவென்றால் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் தோனி அவரை செல்போனில் தொடர்பு கொண்டார் என்பது குறித்து மட்டுமே அவர் பேசினார்.
அவருடன் விளையாடிய முன்னாள் வீரர்கள் குறித்து கோலி பேசினார் என்றால் டிவியில் யார் வருவார்கள் என்பது குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். அவர் யாரை பற்றி பேசுகிறார் என்று கோலி தெளிவுபடுத்தவேண்டும். ஏன் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை? என்று அவரிடம் கோலி கேட்கவேண்டும். கோலி எந்த மெசேஜ் எதிர்பார்க்கிறார். ஊக்கமா? ஆனால், அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். பிறகு எதற்கு ஊக்கம். கேப்டன் பொறுப்பு என்ற அத்யாயம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. தற்போது நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக விளையாடுகிறீர்கள். அதில் மட்டும் கவனம் செலுத்துங்கல். நீங்கள் கேப்டனாக இருக்கும்போது சக வீரர்கள் குறித்து நினைத்து கவலைபடலாம். ஆனால், கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு உங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது’ என்றார்.