சங்கமம்

உலக முதுகுத் தண்டுவட காயமடைந்தோர் தினம் – தன்னம்பிகையோடு வலம்வரும் கருணாகரன்

முதுகுத் தண்டுவடம் காயமடைந்தோர் நாளாக செப்டம்பர் 5-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளில் முதுகுத் தண்டுவடம் காயமடைந்த மாற்றுத்திறனாளிகள் வித்தியாசமானவர்கள். இவர்கள் மற்ற மாற்றுத் திறனாளிகளைபோல் அல்லாமல் சக்கர நாற்காலியில் மட்டுமே பயணிக்க முடிந்தவர்கள். சக்கர நாற்காலி இல்லாமல் இவர்கள் எங்கும் செல்ல முடியாது. மற்றவர்கள் துணை இல்லாமலும் இவர்கள் பயணிப்பது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் என்பவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி முதுகுத் தண்டுவடம் காயம் அடைந்தார். தன்னால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என எண்ணிய கருணாகரன் சொந்தமாக பல தொழில்களை தொடங்க முன் வந்தார்.

யாருடைய துணையும் இன்றி நான் ஏன் தனியாக இயங்க முடியாதா என்ற கேள்வி அவருக்குள் எழுந்த நிலையில், யாரோ ஒருவர் கார் ஓட்ட அதில் நான் ஏன் பயணிக்க வேண்டும் என முயற்சி செய்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காரை தயார் செய்து நம்பிக்கையோடு அந்த காரை இயக்கி வருகிறார்.

இதுபற்றி கூறிய கருணாகரன், “எனக்கு ஏற்பட்ட விபத்து எதிர்பார்க்காத ஒன்று. நான் யாருக்கும் இடையூறாக இருக்க விரும்பவில்லை. எனவே நானே ஒரு காரை வாங்கி வடிவமைத்து ஓட்டத் தொடங்கினேன். தமிழகத்தில் முதன் முதலில் எனக்குத்தான் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.

என்னைப்போல தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வீல் சேர், பேட்டரி வீல் சேர் ஸ்கூட்டர் போன்ற பல உபகரணங்களை வழங்கி இருக்கிறது. இருந்தாலும் எங்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது.

அதேபோல் பாதுகாவலர் உதவித்தொகை ரூ.1000 அனைவருக்கும் வழங்கப்படவில்லை. பராமரிப்பு உதவித் தொகை மாதம் 2000 இன்னும் சிலருக்கு வழங்கப்படாமலே இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் வங்கியில் ஏதாவது கடன் கொடுத்தால் சிறு தொழில் தொடங்கி எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்வோம்” என்றார் கருணாகரன் நம்பிக்கையுடன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.