சங்கமம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள்: தேவஸ்தானம் தகவல்

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடக்கின்றன. அதில் மிக முக்கிய விழாவாக வருடாந்திர பிரம்மோற்சவம் கருதப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவின்போது நடக்கும் மிக முக்கிய நிகழ்ச்சிகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

9 நாட்கள் நடக்கும் மெகா திருவிழாவின்போது, வெங்கடாசலபதி கோவிலின் நான்கு மாட வீதிகளில் நடக்கும் ஊர்வலம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். உற்சவர் மலையப்பசாமி மொத்தம் 16 வகையான வாகனங்களில் (2 தேர்கள் உள்பட) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்தக் காட்சியை நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் கண்டு களிப்பர். கோவிலின் மாடவீதிகளில் கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் “ஏடுகுண்டல வாடா வெங்கடரமணா கோவிந்தா… கோவிந்தா”… எனப் பக்திகோஷம் எழுப்புவது விண்ணதிரும்.

வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கும் வாரத்தின் முந்தைய வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று வைகானச ஆகம விதிகளின்படி, வெங்கடாசலபதி கோவில் பாரம்பரிய முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. இதற்கு “ஆலய சுத்தி” எனப்படும். கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் அழைப்பர். பிரம்மோற்சவ விழா தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக மண் சேகரிக்கும் செயல்முறை கடைப்பிடிக்கப்படும். இதற்கு மிருத சங்கிரஹணம் எனப்படும். அங்குரார்ப்பணம் என்றும் கூறுவர். அதைத்தொடர்ந்து 9 நாள் மெகா திருவிழா தொடக்கத்தைக் குறிக்கும் கருட கொடியேற்றம் நடக்கிறது. கோவிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில் மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் “கருடன் உருவம்” வரையப்பட்ட கொடியை பிரதான அர்ச்சகர் ஏற்றுவர். பிரம்மோற்சவ விழாவில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும், அனைத்துலக தெய்வங்களுக்கும் கருடன் அழைப்பு விடுப்பதாக நம்பப்படுகிறது.

கொடியேற்றம் முடிந்ததும் உற்சவர் மலையப்பசாமி கோவிலை சுற்றி நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். ஒரு சில வாகனங்களில் உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி உலா வருவார். வீதிஉலா முடிந்ததும் கோவிலுக்குள் “ஸ்ரீவாரி கொலுவு” நடத்தப்படும். பிரம்மோற்சவ விழாவின்போது உற்சவர்களுக்கு கோவிலில் உள்ள ரெங்கநாயகர் மண்டபத்தில் நறுமணப் பொருட்களால் “ஸ்நாபன திருமஞ்சனம்” எனப்படும் அபிஷேகம் நடத்தப்படும். இது, உற்சவர்களை குளிர்விப்பதாக கருதப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில் சந்தனப் பொடியால் உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்து, நீராடுவது சூர்ணாபிஷேகம் ஆகும். வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில், உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி, சுதர்சன சக்கரத்தாழ்வார் புஷ்கரணிக்கு எழுந்தருள்வார்கள்.

அங்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கும். கோவில் புஷ்கரணியில் 3 முறை சக்கரத்தாழ்வாரை புனித நீரில் மூழ்கி எடுத்து நீராட்டுவர். இதற்கு “சக்கரஸ்நானம்” எனப்படுகிறது. பிரம்மோற்சவ விழா நிறைவில் கொடியிறக்கம் நடக்கும். அப்போது தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டு இருந்த கருட கொடி இறக்கப்படும். இத்துடன் 9 நாள் பிரம்மோற்சவ விழா வெற்றிகரமாக நிறைவடைகிறது. மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.