ஆர்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் புதிய தேதி உறுதிப்படுத்தவில்லை! நீண்ட நாட்கள் ஆகலாம் – நாசா
நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. ஆர்டெமிஸ் 1 என்ற ஆளில்லா விண்கல சோதனையை கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று நாசா செய்ய திட்டமிட்டு இருந்தது.கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு ஆர்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக நாசா அறிவித்து உள்ளது.அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கடற்கரைகளில் கூடியிருந்த மக்கள் வரலாற்று சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் 1 விண்ணில் ஏவப்படுவதை காண எதிர்பார்த்து திரண்டிருந்தனர்.
ஆனால் ஏவுவதற்கு முன் அதில் ஹைட்ரஜன் நிரப்பும் பணி நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் கசிவுகளை கண்டறிந்தனர். சரி செய்ய எவ்வளவு முயன்றும் முழுமையாக சரி செய்ய முடியவில்லை. ராக்கெட்டின் நான்கு முக்கிய எஞ்சின்களில் ஒன்று மிகவும் சூடாக இருப்பதை சென்சார் காட்டியது. அதனால் இந்த இரண்டாவது முயற்சியும் கைவிடப்பட்டது. அதன் பின், சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆய்வு அமைப்புகள் மேம்பாடு இணை நிர்வாகி ஜிம் ப்ரீ கூறுகையில், செப்டம்பர் 5, 6 ஏவுவதற்கு காலநிலை சரியாக உள்ளது. ஆனால் அதற்குள் விண்கலத்தில் உள்ள கோளாறுகளை சரி செய்ய இயலாது, இன்னும் புதிய தேதியை உறுதிப்படுத்தவில்லை என்றார். அடுத்த ஏவுதல் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை அல்லது அக்டோபர் 17 முதல் 31 வரை உள்ள காலத்தில் நடைபெறலாம். ராக்கெட் இப்போது அதன் கட்டுமான தளத்திற்கு மீண்டும் எடுத்துச்செல்லப்படும். அங்கு இந்த விண்கலத்தின் சிக்கலைத் தீர்ப்பதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். எல்லாம் சரி என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் நிலவுக்கு ஏவப்படும் என்று நாசா அறிவித்துள்ளது. நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறுகையில், அடுத்த மாத தொடக்கத்தில் ஒரு குழுவினர் கென்னடி விண்வெளி மையத்தைப் பயன்படுத்தி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வார்கள். இதனால் அடுத்த முயற்சியை அக்டோபர் மாத நடுப்பகுதி வரை தள்ளி வைக்க வேண்டியிருக்கும் என்று கூறினார். விண்வெளி வீரர் விக்டர் குளோவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இவை உண்மையில் நம்பமுடியாத சிக்கலான இயந்திரங்கள். நீங்கள் அவற்றில் ஏதேனும் ஒரு பாதிப்பை பார்க்கும்போது, நம்பிக்கையைப் பெற வேண்டும், மாறாக நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஆகவே இந்த வகையான கசிவு ஏற்பட்ட பின், இந்த திட்டம் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது ஒரு சரியான முடிவு என்று கூறினார்.