விராட் கோலி சிறந்த டி-20 கிரிக்கெட் வீரராக இருந்ததில்லை – பாகிஸ்தான் முன்னாள் வீரர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீபகாலமாக சரியாக ரன்கள் அடிக்கவில்லை என ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. அவர் சதம் அடித்து 1000 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்ற விராட் கோலி தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ஹாங்காங் அணிக்கு எதிராக அவுட் ஆகாமல் 59 ரன்கள் எடுத்து இருந்தார். இந்நிலையில், விராட் கோலி ஒரு சிறந்த டி-20 வீரர் இல்லை என்றும், அவரால் ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் போல் வர முடியாது எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், விராட் கோலி ஒரு சிறந்த டி-20 கிரிக்கெட் வீரராக இருந்ததில்லை. நாம் அவரை கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித்துடன் ஒப்பிட்டு பேசுகிறோம், ஆனால் அவர்கள் யாரும் டி-20 போட்டிகளில் ஒரு மேட்ச் வின்னராக இருந்ததில்லை. இவர்கள் அனைவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடக்கூடிய வீரர்கள். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர். அவரால் டி-20 போட்டிகளில் ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் போல் வர முடியாது. விராட் கோலி ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்காகவும் இதே போல் தான் ஆடியுள்ளார். எம்.எஸ்.தோனி ஒரு வித்தியாசமான வீரர். அவர் 3-4 டாட் பந்துகள் ஆடினால், அவரால் 3-4 சிக்ஸ்கர்களை அடிக்க முடியும். தோனியால் டாட் பந்துகளை ஈடு செய்திட முடியும். ஆனால் விராட் கோல்லி 30 முதல் 35 பந்துகளை எதிர்கொண்ட பின்னர் தான் அடித்து ஆட ஆரம்பிக்கிறார். ரோகித் சர்மா பவர் பிளே ஓவர்களை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.