ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகுமா? ஒரு சுவாரசியமான ஆய்வு
நம்மில் சிலர் நமது திறமைகளில் சற்று கூடுதலாகவே நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு விஷயத்தில் நமக்குத் திறமை குறைவாக இருக்கலாம் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட நம்மில் சிலர் விரும்புவதில்லை. இது ஏன்?
நீங்கள் ஒரு கொடுங்கரடியுடன் சண்டையிடுகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்களிடம் ஆயுதம் இல்லை. கரடிக்கும் உங்களுக்கும் நேருக்கு நேர் மோதல். யார் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? முதலை, கழுகு அல்லது ராஜ நாகத்துடன் மோதினால் நம் நிலைமை என்ன?
2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் YouGov (யூகோவ்) வாக்கெடுப்பில் 1,700 க்கும் மேற்பட்டவர்களிடம் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, பதிலளித்தவர்களில் 6% பேர் கரடியை வெல்ல முடியும் என்று எண்ணினர். மேலும் கொஞ்சம் பேர் முதலைக்கு எதிராகத் தாங்கள் வெல்லமுடியும் என்றும் 23% ஆண்கள் ராஜநாகத்துடன் வெல்ல முடியும் என்றும் 38% ஆண்கள் கழுகை வீழ்த்த முடியும் என்றும் கூறினர்.
ஒருவேளை, இப்படி பதில் கூறியவர்களில் சிலர் சிறந்த சண்டைத் திறன் கொண்ட டார்ஜான்களாக இருக்கலாம். சிலர் வெளியே தங்களின் பிரதாபத்தைக் காட்டிக்கொள்ள விரும்பியிருக்கலாம். அல்லது அபத்தமான அதீத நம்பிக்கையுடன் இருந்திருக்கலாம்.
‘ விமானம்தானே… இறக்கிடுவோம்’
விமானம் விபத்துக்குள்ளாகாமல், விமானத்தில் இருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறக்குவது எப்படி? உங்களால் அதை செய்ய முடியுமா? சமீபத்திய ஆய்வில், நியூசிலாந்தில் உள்ள வைகாடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கைலா ஜோர்டான் என்ற ஆராய்ச்சியாளர் இந்தக் கேள்வியைக் கேட்டார்.
இதிலும், அதீத நம்பிக்கையின் அளவு மேலோங்கியிருந்தது. அவர் கேட்டவர்களில் பாதி பேர் விமானத்தை வெற்றிகரமாகத் தரையிறக்க ஐந்தில் ஒரு வாய்ப்பு இருப்பதாக நினைத்தார்கள். பயிற்சி பெற்ற விமானி ஒரு விமானத்தை தரையிறக்கும் மூன்று நிமிட வீடியோவை அவர்களுக்குக் காட்டியபோது, அவர்கள் இன்னும் அதிக நம்பிக்கையுடன், 30 சதவீதம் விமானத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கலாம் என்று மதிப்பிட்டனர். பதிலளித்தவர்களில் கால் பகுதியினர் தங்கள் வாய்ப்புகளை 60% என்று கூறினர்.
ஆம், திடீரென்று எந்த உதவியும் இல்லாமல் விமானத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய சூழ்நிலையில், ஒரு விமானத்தைத் தரையிறக்குவது மிகவும் திறமையான பணி என்பதை ஒப்புக்கொண்டாலும், சிறந்த நிபுணத்துவம் தேவை என்பதை உணர்ந்திருந்தாலும் அனுபவமோ திறமையோ இல்லாத பலர் தங்களால் முடியும் என்றே நினைத்தார்கள்.
BBC
காக்பிட்டின் பின்பகுதியில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டிருந்தது, எந்த சத்தமும் இல்லை, அந்த கோணத்தில் இருந்து விமானிகளின் கைகள் என்ன செய்கின்றன என்பதைப் பார்வையாளர்களால் பார்க்க முடியவில்லை இருந்த போதும், அதைப் பார்த்த ஒரு பைலட் அதை 100% பயனற்றது என்று அறிவித்தே விட்டார்.
ஒரு விமானி நோய்வாய்ப்பட்டு காக் பிட்டில் சரிந்து விட்ட நிலையில், விமானத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, வெற்றிகரமாகப் பயணிகளே தரையிறக்கிய நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகள் நிச்சயமாக உள்ளன. மே 2022 இல் புளோரிடாவில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு.
ஆனால் இந்த நிகழ்வில் பயணித்த டேரன் ஹாரிசன், பறக்கும் பயிற்றுவிப்பாளராக இருந்த ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் வாய்மொழி உத்தரவுகளின் துணையுடன்தான் தரையிறக்கினார். ஒரு அனுபவம் மிக்க விமானி ஒருவர், அனுபவமும் உதவியுமின்றி விமானத்தைத் தரையிறக்கும் வாய்ப்பு 10-15% என்று மதிப்பிட்டுள்ளார், நியூசிலாந்து ஆய்வில் பலர் தங்களுக்குத் தாங்களே அளித்துக்கொண்டதை வாய்ப்பு விகிதத்தை விட மிகவும் குறைவானது இது.
‘செரீனா வில்லியம்சுக்கே டஃப் கொடுப்போம்யா…’
அதீத நம்பிக்கை என்பது வாழ்வா சாவா சூழலில் மட்டும் வெளிப்படுவதில்லை. மற்றொரு YouGov கருத்துக்கணிப்பு டென்னிஸ் விளையாட்டில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற செரீனா வில்லியம்சுக்கு எதிராக ஒரு புள்ளியைப் பெற முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தது. பதிலளித்தவர்களில் ஏழு சதவீதம் பேர் தங்களால் முடியும் என்று கூறினர், ஆண்களில் 12 சதவீதம் பேர் இப்படிக் கூறினர்.
‘இங்கே எல்லாமே சராசரிக்கு மேலதாம்யா… ‘
வாகனம் ஓட்டுவது என்பது நமது திறன்களை நாமே மிகைப்படுத்தி உணரும் இன்னொரு விஷயம். 1981 இல் அமெரிக்காவின் பிரபலமான ஒரு ஆய்வில், 93% ஓட்டுநர்கள் தாங்கள் சராசரியை விட மேம்பட்டவர்கள் என்று நம்புவது கண்டறியப்பட்டது. இது நிச்சயமாக புள்ளிவிவர ரீதியாக சாத்தியமற்றது. எழுத்தாளர் கேரிசன் கெய்ல்லரின் கற்பனை நகரத்தில் ஒரு ஊரில் உள்ள எல்லாக் குழந்தைகளும் சராசரிக்கும் அதிகமான அறிவுத் திறன் கொண்டவர்களாக இருந்தது போல், இது லேக் வொபெகன் விளைவு என்று இது அழைக்கப்படுகிறது. இது மாயையான உயர்வு நவிற்சி.
அபாயங்களைச் சந்திக்கத் துணிவதன் மூலமும் நமது திறமைகளின் எல்லைகளை மீறிச் செயல்படுவதாலும் தான் வெற்றி அனேகமாகக் கை கூடுகிறது.
சராசரிக்குக் கீழ் சிலரும் சராசரியாகச் சிலரும் இருந்தால் தான் சராசரிக்கு மேல் சிலர் இருக்க முடியும். ஆனால் யாரும் தன்னைச் சராசரிக்குக் கீழ் நிலையில் வைத்துப் பார்க்க விரும்புவதில்லை.
‘ப்ளேட்ஸ் ஆஃப் பேரலாக்ஸ்’தானே… நமக்கு ரொம்ப நல்லாத் தெரியுமே’
அதேபோல், நம்மில் வெகு சிலரே தங்களுக்கு விஷயங்கள் தெரியாது என்பதை ஒப்புக்கொள்ளத் துணிகிறார்கள். இது மிகைப்படுத்தலுக்கு வழிவகுக்கும். ‘கோலரின்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘ப்ளேட்ஸ் ஆஃப் பேரலாக்ஸ்’ என்றால் என்ன? இந்த இரண்டுமே போலியான, உருவாக்கப்பட்ட அறிவியல் சொற்கள். ஆனால் ஓர் ஆய்வில் பலர் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டீர்களா என்று கேட்டபோது ‘ஆம்’ என்று கூறியுள்ளனர்.
கொஞ்சம் அதீத நம்பிக்கை சற்று பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் தங்கள் மீது நம்பிக்கை கொண்டு புதிய விஷயங்களில் ஈடுபட வேண்டும் என்று தான் நாங்களும் விரும்புகிறோம். வெற்றி என்பது பெரும்பாலும் அபாயங்களைத் துணிந்து எதிர்கொள்வதன் மூலமும் நமது திறன்களின் எல்லைகளையும் தாண்டிச் செயல்படுவதாலும்தான் வெற்றி கிட்டுகிறது.
நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால், மற்றவர்களுக்கும் நம்பிக்கை தருவீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினால், உங்களை நம்புவார்கள், போற்றுவார்கள். இருப்பினும், இந்த அனைத்து ஊக்கமூட்டலுக்கும் ஒரு முரண்பாடான கூறு உள்ளது, இது உளவியலில் டன்னிங்-க்ரூகர் விளைவு என்று அறியப்படுகிறது. அதாவது, திறன்களை மிகைப்படுத்தியவர்கள் உண்மையான சாதனை என்று வரும்போது, மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்துவதாக இந்த ஆய்வு கண்டறிந்தது.
ஒரு பியானோ மட்டும் இருந்துச்சின்னா…
இதை மறுப்பவர்களும் உண்டு. ஆனால் கோவிட் லாக்டவுன்களின் போது இந்த விளைவுக்கு நானே பலிகடாவாகிவிட்டதாக உணர்ந்தேன். எனக்கு பியானோ வாசிப்பதில் உள்ளார்ந்த திறன் உள்ளதாகவும் ஒரு பியானோ மட்டும் இருந்தால் நான் சிறந்த பியானோ கலைஞனாகிவிடுவேன் என்றும் அதீதமாக நம்பினேன். ஆனால் நான் ஒரு பியானோவை வாங்கி பயிற்சி செய்யத் தொடங்கியபோது, நான் பியானோவில் கற்றுக்கொண்ட பாடத்தை விட முக்கியமான பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். என் பியானோ இசைக்கும் திறன் மிகவும் கேவலமானது என்பது தான் அது.
அப்படியென்றால், இந்த அதீத நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? ஒரு வெளிப்படையான காரணி, ஒருவரின் ஆளுமை வகை. மிகைப்படுத்துபவர்கள் குறித்த ஆய்வொன்றில், அதிக சுய மோகம் கொண்டவர்களுக்கு இந்த அதீத நம்பிக்கை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே பார்த்தபடி, பாலினமும் இதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கரடியுடன் சண்டையிடுவதிலும் சரி அல்லது செரீனா வில்லியம்ஸை எதிர்த்து ஒரு புள்ளியை வெல்வதிலும் சரி, சராசரியாக ஆண்கள் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள்.
BBC
நிச்சயமாக, பெண்களை விட ஆண்கள் உடல் வலிமையோடு இருக்கிறார்கள், எனவே இந்த மாதிரியான கேள்விகளுடன் இந்த முடிவு எதிர்பார்க்கக்கூடியதே என்றாலும், ஒரு விமானத்தை தரையிறக்கும் விஷயத்தில் கூட, பெண்களை விட ஆண்கள் தான் அதீத நம்பிக்கையுடன் இருந்தனர்.
தவறான நம்பிக்கையின் பிரச்சனை என்னவென்றால், அது நம்மை சிக்கலில் சிக்க வைக்கும்
இருப்பினும், இதில் நாம் யார் என்பது மட்டுமல்ல, நாம் என்ன செய்கிறோம் என்பதும் முக்கியம். காக்பிட் வீடியோ ஆய்வை எடுத்துக்கொண்டால், அந்த அனுபவம்தான் அவர்களின் நம்பிக்கையை அதிகரித்தது. வீடியோ இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதற்குக் காரணம், அந்த பாத்திரத்தில் தங்களைக் கற்பனை செய்துகொள்ள இது ஒரு ஊக்கியாக செயல்பட்டதே என்று அந்த ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
விமானம் தரையிறக்கும் ஆய்வை மேற்கொண்ட கெய்லா ஜோர்டான், பிபிசியின் ஆல் இன் தி மைண்டில் ஒரு நேர்காணலில் என்னிடம் கூறியது போல், நிச்சயமாக நாம் தவறான நம்பிக்கையிலிருந்து நம்மையே காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
“ஒரே ஒரு சிறிய வீடியோவைப் பார்ப்பது நம்பிக்கையை கிட்டத்தட்ட 28% அதிகரிக்கும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். உங்களால் முடியாதபோதே விமானத்தை தரையிறக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அதிக நிபுணத்துவம் கொண்ட ஒருவரை அனுமதித்தால், மீதமுள்ள பயணிகள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.”
இது நிச்சயமாக சரியான அறிவுரை. “நம்மை நம்பினால்” “எதையும் செய்ய முடியும்” என்று சிந்திக்கத் தூண்டும் கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். தன்மீதே சந்தேகம் கொண்டோ, தோல்வி பயத்தினாலோ நாம் அலைக்கழிய விரும்பவில்லை. ஆனால் நமது திறமைகளை நேர்மையாக மதிப்பிடுவதும் முக்கியம். எனவே, நீங்கள் ஒரு கிரிஸ்லி கரடியை எதிர்கொண்டால், சண்டையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. செரீனா வில்லியம்ஸ் உங்களிடம் டென்னிஸ் விளையாட்டில் சவால் விட்டால், கண்ணியமாக “இல்லை” என்று ஒதுங்குவது சிறந்தது.