பாகிஸ்தான் சோத்தை தின்னுட்டு இந்திய வெற்றியைக் கொண்டாடுவீர்களா? – ஆப்கான் ரசிகர்கள் மீது பாக்.ரசிகர்கள் ஆவேசம்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடிய ஆப்கன் ரசிகர்களின் வீடியோ வைரலானதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் ரசிகர்களைக் கண்டபடி திட்டி ட்விட்டரை கதிகலங்கச் செய்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று முன்தினம் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி புவனேஷ்வர் குமார்,ஹர்திக் பாண்டியா ஆகியோரது பவுலிங்கில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் புவனேஷ்வர் குமாரின் ஷார்ட் பிட்ச் பந்தில் கொடியேற்ற ஆவேஷ் கான் கேட்ச் எடுக்க பாகிஸ்தான் அதிலிருந்து மீளவே இல்லை.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா வின்னிங் ஷாட்டை அடித்த பின்னர் ஆப்கானிஸ்தானில் அதனை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களில் ஒருவர், டிவியில் தெரிந்த பாண்ட்யாவுக்கு முத்தம் கொடுத்து வெற்றியை கொண்டாடினார்.
இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆப்கானிஸ்தான் ரசிகரின் இந்தச் செய்கை பாகிஸ்தான் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்த, ஆப்கான் ரசிகர்களை வசைபாடி டிவிட்டரை கலங்க அடித்தனர் பாகிஸ்தான் ரசிகர்கள். அதில் ஒரு பாகிஸ்தான் ரசிகர், “பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு, எங்கள் சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு, எங்கள் தண்ணீரையும் குடித்து விட்டு , பாகிஸ்தான் மின்சாரத்தைப் பயன்படுத்தி மேட்ச் பார்த்துவிட்டு இந்திய வெற்றியைக் கொண்டாடுவீரர்களா.. இதனால்தான் ஆப்கானிஸ்தானில் உங்கள் நிமைமை படுமோசமாக உள்ளது” என்று சாடி ட்வீட் செய்ய அவரைத் தொடர்ந்து நிறைய பாகிஸ்தான் ரசிகர்கள் ட்வீட்டில் ஆப்கான் வசை மழையில் இறங்கினர்.