விற்பனைக்கு வருகிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம், தரையிறக்க கையாள்தல் நிறுவனம் (Sri Lanka Airlines Ground Handling) மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் 49% பங்குகளை விற்பனை செய்வதற்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு முன்மொழியவுள்ளார். இவற்றின் பகுதி விற்பனை மூலம் U.S $1 பில்லியன் திரட்ட முடியும் எனவும் அதன்மூலம் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் வெளிநாட்டு, உள்நாட்டு கடன் மற்றும் தேசிய பாக்கிகள் செலுத்த முடியும் எனவும் கூறினார்.
எனினும் அரசு 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் தரையிறங்கும் உரிமையையும் 51% பங்குகளையும் தன்னைத்தே வைத்திருக்கும்.
விமான சேவையும் அது சார்ந்த சேவைகளும் வெவ்வேறு தனி பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்வதன் மூலம் நமது தேசிய சொத்தை லாபமீட்டும் நிறுவனமாக மறுசீரமைக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
6,800 பணியாளர்களைக் கொண்ட ஸ்ரீலங்கன் குழுமம் அபிரிமித ஊழியர்களை கொண்டிருக்கவில்லை என்று கூறிய அமைச்சர் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவானதே என்று கூறினார்.
1998 முதல் 2008 வரை இலங்கையின் விமான சேவைகள் எமிரேட்ஸ் விமான சேவையால் நிர்வகிக்கப்பட்டபோது ரூ22 மில்லியன் லாபத்தை ஈட்டியது. அதன் பின்னர் 2011 முதல் நட்டத்திலேயே தொடர்ந்து இயங்கி வந்தது. Sri Lanka Catering Ltd மற்றும் Sri Lanka Airlines Ground Handling நிறுவனங்கள் தொடர்ந்து லாபத்திலேயே இயங்கிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கொடுப்பனவுகளில் $312 மில்லியன்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் $80 மில்லியன்கள் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட்டுக்கும் செலுத்தப்பட வேண்டியவை.
அமைச்சரவை அங்கீகாரத்தின் பின் இந்த நிறுவனங்களின் விற்பனை பற்றிய உத்தியோகபூர்வமான விண்ணப்பங்கள் வெளிநாடுகளிடம் இருந்து கோரப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு நேரடி விமான சேவையை வழங்கும் ஒரே ஆசிய விமானச் சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திகழ்வதுடன் தற்போது 23 நாடுகளில் 37 நகரங்களுக்கு சேவையாற்றி வருகிறது.
தற்போது 27 விமானங்களை தன்னகத்தே கொண்டுள்ள நமது விமானசேவையில் 6,800 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அதாவது ஒரு விமானத்திற்கு 250 ஊழியர்கள் என்ற விகிதாசாரம்! 147 விமானங்களை தன்னகத்தே கொண்டுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்சில் இந்த விகிதாசாரம் 219 ஆகும்.
எனவே நமது விமான சேவையில் முதலீடு செய்ய எண்ணும் எந்த ஸ்தாபனமும் இச் சுமையை தாங்குமா என்பது கேள்விக்குறியே!
![]()