யுனெஸ்கோ’ பட்டியலில் ‘கர்பா’ நடனத்தை சேர்க்க பரிந்துரை
குஜராத்தின் பாரம்பரிய ‘கர்பா’ நடனத்தை, ‘யுனெஸ்கோ’வின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் கலாசார அமைப்பு, உலகம் முழுதும் உள்ள கலைகள் மற்றும் கலாசாரங்கள் உள்ளிட்டவைகளை, தங்களின் கலாசார பாரம்பரிய பட்டியலில்ஆண்டுதோறும் இணைத்து வருகிறது.
நம் நாட்டைச் சேர்ந்த வேத மந்திரங்கள், ராம்லீலா விழா, கும்பமேளா உட்பட 14 அம்சங்கள் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் ஆண்டுதோறும் செப்., – அக்., மாதங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை நிகழ்வு, யுனெஸ்கோவின் கலாசார பட்டியலில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பாவை இணைக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதை யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பிரிவின் செயலர் டிம் கர்டிஸ் உறுதி செய்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு மேல் இந்த பரிந்துரை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, ஆண்டு இறுதியில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.