சங்கமம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) கோதாவில் குதிக்கின்றன. பரம போட்டியாளரான இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள்.

வீரர்களும் உணர்வுபூர்வமாக, இனம்புரியாத பதற்றத்திற்குள்ளாகி விடுவார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி 10 ஆண்டுக்கு மேலாகி விட்டது. ஐ.சி.சி. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன. அதனால் முன்பை விட இப்போது எதிர்பார்ப்பு இன்னும் எகிறி விட்டது. நடப்பு சாம்பியனான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் மோசமாக தோற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இதை விட அருமையான சந்தர்ப்பம் கிடைக்காது.

கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் லேகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். முக்கியமான இந்த ஆட்டத்தில் இவர்கள் சாதுர்யமாக விளையாட வேண்டியது அவசியமாகும். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பும் கோலி ரன்மழை பொழிவாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். இதே போல் மிடில் வரிசையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் கைகொடுத்தால் வலுவான ஸ்கோரை எட்டலாம். தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். ஒரு வேளை அவர் வாய்ப்பு பெற்றால், ரவீந்திர ஜடேஜா வெளியே உட்கார வேண்டி வரும். பந்து வீச்சில் காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில் புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹலைத் தான் இந்திய அணி அதிகமாக நம்பி இருக்கிறது.

பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாமும், துணை கேப்டன் முகமது ரிஸ்வானும் முதுகெலும்பாக உள்ளனர். அவசரம்காட்டாமல் அசால்ட்டாக பேட்டிங் செய்யக்கூடிய பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ரன்குவிக்கும் எந்திரமாக திகழ்ந்து வருகிறார். கடைசியாக ஆடிய 12 சர்வதேச போட்டிகளில் ஒன்றை தவிர மற்ற அனைத்திலும் குறைந்தது அரைசதம் அடித்துள்ளார். எனவே இந்த கூட்டணியை சீக்கிரம் உடைப்பது தான் இந்திய பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

அபாயகரமான பவுலர்களில் ஒருவரான ஷகீன் ஷா அப்ரிடி கால்முட்டி காயத்தால் ஒதுங்கி இருப்பது அந்த அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான். கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் அவர் தான் இந்தியாவின் டாப்-3 வீரர்களை வரிசையாக வீழ்த்தி ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். அத்துடன் வளரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிமும் முதுகுவலியால் விலகி இருக்கிறார். ஆனாலும் நசீம் ஷா, முகமது நவாஸ், ஷதப் கான், ஹாரிஸ் ரவுப் என்று தரமான பவுலர்களுக்கு குறைவில்லை. இரவு 7.30 மணிக்கு… மொத்தத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி சொன்னது போல, உச்சக்கட்ட அழுத்தம் நிறைந்த இந்த போட்டியில் அதை எந்த அணி திறம்பட கையாள்கிறதோ அந்த அணிக்கே முடிவு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.