வைட்டமின்-டி’ அதிகரித்தாலும் ஆபத்து
இதயம், நுரையீரல், மூளை உள்பட உடல் தசைகளின் சீரான செயல்பாட்டுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளுள் ஒன்றாக வைட்டமின்-டி விளங்குகிறது. மேலும் எலும்புகளுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை உறிஞ்ச உதவுகிறது. உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை உணவுகள், சூரிய ஒளிக்கதிர்கள் மூலம் பெறலாம். போதுமான அளவு வைட்டமின் டி உட்கொள்வதன் மூலம் உடல் எடை குறைத்தல், எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துதல், மனச்சோர்வை தடுத்தல், இதய நோய்களில் இருந்து பாதுகாத்தல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும், வைரஸ் நோய்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கச்செய்வதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுமையான கொரோனா வைரஸ் தொற்று அல்லது அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைஅடுத்து உடலில் வைட்டமின் டி சத்தை வலுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதேவேளையில் வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதுபற்றி பார்ப்போம். உடலில் வைட்டமின் டி அளவு அதிகரித்தால் கால்சியத்தை உறிஞ்சும் அளவும் அதிகமாகும். அதன் காரணமாக பசியின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் உண்டாகும். மார்பு வலி, எரிச்சல், பதற்றம் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும்.