யார் பலசாலி? ஆசியக் கோப்பையில் இன்று மோதும் இலங்கை – ஆப்கானிஸ்தான்!
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு முன்னோட்டமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விளங்குகிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும். இதில் முதல் இரு இடத்தை பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
அதன்படி, துபாயில் இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இலங்கை அணியானது தசன்ஷனக தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. ஆப்கானிஸ்தான் அணி போட்டியின் தினத்தில் எந்த ஒரு அணியையும் வீழ்த்தும் திறனைக் கொண்டுள்ளது. வெற்றியுடன் கணக்கை தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.