இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீக்கம்
இந்திய கால்பந்து கூட்டமைப்பை (ஏ.ஐ.எப்.எப்.,) நிர்வகிக்க, முன்னாள் நீதிபதி தேவ் தலைமையில் மூன்று பேர் குழுவை (சி.ஒ.ஏ.,) உச்சநீதிமன்றம் நியமித்தது. இதன் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’), இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதித்தது. பெண்கள் உலக கோப்பை (17 வயது, அக். 11–30) நடத்தும் வாய்ப்பையும் பறித்தது.
வேறுவழியில்லாத நிலையில் ‘பிபா’ நெருக்கடி காரணமாக மூவர் குழுவை, உச்சநீதிமன்றம் கலைத்தது. செப். 2ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதனிடையே இந்திய கால்பந்து மீதான தடையை 12 நாளுக்குப் பின், நேற்று ‘பிபா’ நீக்கியது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
மூவர் குழு கலைக்கப்பட்டது, இந்திய கால்பந்தின் தினசரி விவகாரங்களை ஏ.ஐ.எப்.எப்., கவனித்துக் கொள்வது என ‘பிபா’ நிபந்தனைகள் ஏற்கப்பட்டன. இதையடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீக்கப்படுகிறது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. திட்டமிட்டபடி பெண்கள் உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.