இந்த இடத்திலெல்லாம் தவறியும் பெர்ஃப்யூம் பயன்படுத்தாதீர்கள்!
வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை தவிர்த்து நாள் முழுக்க வாசத்துடன் புத்துணர்வுடன் வலம் வர இன்று வாசனை திரவியம் பயன்படுத்துவது அனைவருக்கும் பழக்கமாகிவிட்டது. அதற்காக வாசனை திரவியங்களை உடம்பில் எல்லா இடங்களிலும் பயன்படுத்திவிடக் கூடாது. அவை நாளடைவில் தோல் பாதிப்பை உண்டாக்கும். எந்தெந்த இடங்களில் வாசனை திரவியம் பயன்படுத்தக் கூடாது என பார்ப்போம்.
அக்குள்
நிறைய விளம்பரங்களில் நேரடியாக வாசனை திரவியங்களை அக்குகளில் பயன்படுத்துவது போல் காட்டுகின்றனர். ஆனால் அக்குள் பகுதியில் நேரடியாக அதனை பயன்படுத்தக் கூடாது. அது நாளடைவில் வெயிலில் செல்லும் போது எரிச்சலை உண்டாக்கும். வாசனை திரவியம், அக்குளின் வியர்வை சுரப்பிகளுக்கு இடையே படிந்து அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
பிறப்புறுப்புகள்
பிறப்புறுப்பு பகுதிகளுக்கு அருகில் வாசனை திரவியம் தெளிப்பதால் தோல் வறட்சி ஏற்படும். பெண்கள் இதனை பிறப்புறுப்புகளில் பயன்படுத்தினால் எரிச்சலூட்டும், மேலும் வீக்கம், அரிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும். தூய்மையான தண்ணீரைக் கொண்டு பிறப்புறுப்புகளை சுத்தப்படுத்துவதே மருத்துவர்கள் பரிந்துரைப்பதாகும்.
கைகள்
ஆல்கஹால் அடிப்படையிலான வாசனை திரவியங்களை கைகளில் தெளித்தால் உங்கள் சருமத்தை உலர வைக்கும். அதிகளவு பயன்படுத்தினால் வெடிப்பு மற்றும் ரத்தப்போக்கு கூட ஏற்படலாம். கைகளில் வாசனை திரவியத்தை தெளித்த பின்னர் சாப்பிடுவது, முகத்தில் கை வைப்பது போன்றவையும் பிரச்னை ஏற்படுத்தும்.
கண்கள்
இது அனைவரும் அறிந்தது தான். கண்களுக்கு அருகில் வாசனை திரவியங்களை அடிக்காதீர்கள். ஆல்கஹால் அடிப்படையிலான வாசனை திரவியங்களில் எத்தைல் உள்ளது. இது சிலவற்றில் 95 சதவிகிதம் கூட இருக்கும். கண்களில் பட்டால் பல மணி நேரம் படுத்தி எடுத்துவிடும்.
தலைமுடி
முடிகள் இயற்கையாகவே நறுமணத்தை உறிஞ்சும். அதனால் கூந்தல் பின்னல்களில் வாசனை திரவியம் தெளிப்பது நல்லது என தோன்றலாம். ஆனால் ஆல்கஹால் அடிப்படையிலான வாசனை திரவியங்களை முடியில் தெளித்தால் வறண்டு போகச் செய்யும். அதற்கு பதிலாக, உங்கள் சீப்பில் வாசனை திரவியத்தை தெளித்து அதைக் கொண்டு வாரினால் சேதத்தை தவிர்க்கலாம்.
எங்கு பெர்ஃப்யூம் பயன்படுத்தலாம்!
உங்கள் மணிக்கட்டுகளில் வாசனை திரவியத்தை தெளிக்கலாம். அது பிரபலமான வழி. அருகிலுள்ளவர்களுக்கு நாம் வாசத்துடனும் காணப்படுவோம். ஆனால் கை விரல்களில் பட்டுவிடக்கூடாது. கழுத்து மற்றும் முழங்கால்களின் பின்புறம் போன்ற உடலின் பல்ஸ் பாயின்ட்கள் வாசனைத் திரவியங்கள் தெளிக்க சிறந்த இடங்கள். வெப்பம் உமிழும் இப்பகுதிகளில் வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதால் சரும எரிச்சல் இருக்காது.