சங்கமம்

இன்று சர்வதேச நாய்கள் தினம் !

பலரின் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினராக வலம் வருபவை நாய்கள். நான்கு கால் நண்பனான நாயை பிடிக்காதவர்களே இல்லை எனலாம். பலரின் வீடுகளையும் நாய்கள் மகிழ்ச்சியாக மாற்றுகின்றன. அவைகளுடன் சிறிது நேரம் வாக்கிங் சென்று வந்தாலே போதும்; பலமடங்கு புத்துணர்ச்சி கிடைப்பதை உணரலாம்.

தனது உரிமையாளரின் வாகன சத்தத்தை தூரத்தில் கணித்தே வருகையை உறுதிப்படுத்திக்கொண்டு, கதவோரத்தில் உற்சாகமாக காலைத்தூக்கி வரவேற்கும் நாய்களும் உண்டு. கோபம், வருத்தம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் நொடிப்பொழுதில் கணித்து அதற்கேற்ப வளர்ப்பாளர்களின் அருகிலேயே இருக்கும்.

அதேவேளையில் பாசம் வைத்தால் பிரிய முடியாது என்பதற்காகவே, நாய் வளர்ப்பதை ஒருசிலர் தவிர்த்து வருவதும் உண்டு. எதிர்பாராத காரணங்களால் ஆங்காங்கே வீட்டில் வளர்த்தவர்களாலேயே நாய்கள் சாலையில் தூக்கி வீசப்படுகின்றன. இதுபோக தெருநாய்களும் ஆங்காங்கே கவனிப்பாரற்று சுற்றித்திரிகின்றன.

நாயை வளர்த்து அவற்றின் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கொலின் என்ற பெண், ஷெல்டி எனும் நாயைத் தத்தெடுத்துக் கொண்டார். எனவே, பலரும் நாய்களை தத்தெடுக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் இன்று (ஆக., 26) சர்வதேச நாய்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அன்பும், கவனிப்பும் தேவைப்படும் ஆயிரக்கணக்கான தெருநாய்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். உள்ளூர் அரசு நிர்வாகம் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றுக்கு தடுப்பூசி போடுவது, உணவளிப்பது, சிறுவர்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிவாசிகளால் தாக்கப்படுவதிலிருந்து காப்பது போன்ற நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும். நாய்களின் உருவம், இனம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அவைகளின் வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றை செய்ய மக்களும் முன்வர வேண்டும் என்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது.

ஏற்கனவே நீங்கள் நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தால், அவைகளின் மீது கூடுதல் அக்கறை செலுத்தலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, ஏதாவது நோய் உள்ளதா என பரிசோதனை செய்யலாம். நாய்களை பராமரிக்கும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு உங்களால் முடிந்தளவு நன்கொடை, உணவு போன்ற உதவிகளை அவ்வப்போது செய்யலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.