‘நண்பேன்டா மொமன்ட்ஸ்’ – பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை மறுநாள் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியின்போது ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளிலும், கிரிக்கெட் ஒரு விளையாட்டை கடந்து அது ஒரு வாழ்க்கை முறை என பார்க்கப்படுவது அனைவருக்கும் தெரிந்ததுதான். கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் எப்படி கிரிக்கெட்டின் உட்சபட்சமாக பார்க்கப்படுகிறதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் ஒரு போட்டியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் பார்க்கப்படுகிறது.
1990ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இந்திய- பாகிஸ்தான் அணிகள் எப்போது மோதினாலும் போட்டி மைதானத்திற்குள் மட்டும் நடைபெறாமல் வெளியே ரசிகர்கள் மத்தியிலும் நடைபெற்று வந்தது. 2008ஆம் ஆண்டு மும்பை கலவரத்திற்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்பது ஆசியக் கிரிக்கெட் தொடர், உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் மட்டுமே நடைபெறுவதால் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான போட்டியின் மீதான ஆர்வம் மேலும் அதிகமாகி உள்ளது.
கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 20வது உலகக் கோப்பையை வெல்லும் என நினைத்த இந்திய அணி குரூப் சுற்றில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இப்படி கடந்த முறை மிக பெரிய தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து அதிகபட்சமாக 3 போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.
எனவே இந்த மூன்று போட்டிகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் UAE -ல் பயிற்சியின்போது இந்திய , பாகிஸ்தான் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்கும் காட்சிகளும், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள ஆப்ரிடியை சந்தித்து இந்திய வீரர்கள் அவரின் காயம் குறித்து விசாரிக்கும் காட்சிகளும் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கெனவே இந்திய மகளிர் அணி வீராங்கனைகள், பாகிஸ்தான் மகளிர் அணி வீராங்கனைகள் செல்ஃபி எடுக்கும் காட்சிகள் வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகின்து. ரோகித் சர்மா தலைமையில் அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாட துவங்கி உள்ள இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 20-வது ஒவர் உலகக் கோப்பையில் முதல் போட்டியிலும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
சர்வதேச அரங்கில் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்தாலும் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வரும் இந்திய அணி நடப்பு ஆசியக் தொடரில் வென்று கோப்பையை தக்க வைப்பார்களா? என்பதை கடந்து உலகக் கோப்பைக்கு எந்த எந்த வீரர்கள் செல்வார்காள் என்பதும் இந்த தொடரின் மூலம் தெரிய வரும். இதனால் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் மீதான ஆர்வத்தை கடந்து இந்த தொடரின் மீதான ஆர்வமும் அதிகரித்து உள்ளது.