பணக்கார ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் ரூ.316 கோடிக்கு காப்பீடு
மும்பையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் மும்பையின் பணக்கார கணபதி மண்டலான ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.316.40 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜி.எஸ்.பி. மண்டல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மண்டலின் தங்க, வெள்ளி நகைகள் ரூ.31.97 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மண்டலை சேர்ந்த தன்னார்வலர்கள், பூசாரிகள், காலணி கடை ஊழியர்கள், பார்க்கிங் பிரிவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் ரூ.263 கோடிக்கும், மண்டலில் உள்ள நாற்காலிகள், கணினி, கண்காணிப்பு கேமரா, ஸ்கேனர், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் ரூ.1 கோடிக்கும், மண்டல் பந்தல், அரங்கம், பக்தர்கள் ரூ.20 கோடிக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை 66 கிலோ தங்க நகைகள், 295 கிலோ வெள்ளி நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 31-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படும் ஜி.எஸ்.பி. விநாயகர் சிலை, 5-வது நாளில் (அடுத்த மாதம் 4-ந் தேதி) கரைக்கப்பட உள்ளது. முன்னதாக வருகிற 29-ந் தேதி ஜி.எஸ்.பி. மண்டல் கணபதி சிலையின் அறிமுக (பர்ஸ்ட் லுக்) நிகழ்ச்சி நடக்கிறது. ஜி.எஸ்.பி. கணபதி மண்டல் இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2016-ல் ரூ.300 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.