ஆண்களை விட பெண்களுக்கு பாலியல் துணை அதிகம் – ஆய்வில் தகவல்
தேசிய குடும்ப நல ஆய்வை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. கடந்த 1992 முதல் இதுவரை நான்கு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில், 2019 – 21ம் ஆண்டுக்கான ஐந்தாவது ஆய்வு, 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 707 மாவட்டங்களில் நடத்தப்பட்டன. இதில், 1.1 லட்சம் பெண்கள், ஒரு லட்சம் ஆண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆய்வு முடிவில், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஆண்களை விட பெண்களுக்கு பாலியல் உறவுக்கான துணை அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், ஜம்மு – காஷ்மீர், லடாக், மத்திய பிரதேசம், அசாம், லட்சத்தீவு ஆகிய இடங்களில் இந்த நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் பெண்கள் வாழ்நாளில் 3.1 என்ற அளவில் பாலியல் பார்ட்னர்களை கொண்டுள்ளார்கள் எனவும், இது ஆண்களிடம் 1.8 என்ற அளவில் குறைந்து இருப்பதாக சர்வே முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அமைப்புகள், ஆண் – பெண் உறவு மட்டுமின்றி, சமூக பொருளாதார நிலை, மக்களின் பின்னணி உள்ளிட்டவை குறித்து அறியவும் இந்த ஆய்வு உதவி செய்கிறது.
இந்த தரவுகள், மத்திய அரசின் குடும்ப நல கொள்கை மற்றும் நலத்திட்டம் வகுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. தமிழகத்தில் பெண்களின் வாழ்நாளில் பாலியல் துணைகள் எண்ணிக்கை என்பது 2.4 என்ற அளவிலும் ஆண்களுக்கு 1.8 என்ற அளவிலும் உள்ளது. இது ராஜஸ்தானை ஒப்பிடும்போது குறைவாகும்.