உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறவில்லை என்றால் ஆச்சரியப்படுவேன் – ஷேன் வாட்சன்
கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. ஆனால் இம்முறை இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளன. இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை முறையே 3 முதல் 5 இடங்கள் வரை உள்ளன.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிபோட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறவில்லை என்றால் ஆச்சரியப்படுவேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இப்போதைக்கு தென் ஆப்பிரிக்கா அணியும், ஆஸ்திரேலிய அணியும் நன்றாக ஆடி வருவதோடு, புள்ளி பட்டியலிலும் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை தவிர ஆஸ்திரேலிய அணி நன்றாக ஆடி உள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. அதற்காக மற்ற அணிகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. முக்கியமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த அணிகளில் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வெற்றியை தேடி தரக்கூடிய சிறந்த வீரர்கள் உள்ளனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறவில்லை என்றால் அது எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில் அமையும் எனக் கூறியுள்ளார்.